Header Ads



சுவரோவியங்களை முஸ்லிம் சமூகம், உரியமுறையில் பயன்படுத்துமா..? கோட்டைவிடுமா..??

2019ம் ஆண்டு குண்டுவெடிப்பு, ஜனாதிபதித் தேர்தல் என்று பல சவால்களை தாண்டி தற்போது இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் உள்ளோம். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்த பொதுத் தேர்தலில் ⅔ பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நோக்குடன் வரி குறைப்பு, சலுகை, உயர் கல்வித்துறையில் கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்துதல், நாடாளாவிய ரீதியில் சுவரோவியங்கள் வரைதல் என மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

இந்த மாற்றங்கள் நீண்ட தூரம் ஓட வேண்டிய ஓட்ட வீரர், அந்த ஓட்டத்தை குறுந்தூரம் ஓடும் வீரரின் வேகத்தில் ஓடுவது போல் உள்ளது. பொதுத் தேர்தல் என்ற குறுந்தூரத்தை அடைந்ததும் ஓட்டம் நிற்குமா என்பதை காலம் பதில் சொல்லும். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் சமூக மட்டத்தில் பேசு பொருளாக சுவரோவியங்கள் மாறியுள்ளது.

நாட்டை அலங்கரிக்கும் நோக்கில் சிகிரியாவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காசியப்பன் மன்னனின் பாணியில், நாடளாவிய ரீதியில் வெற்று மதில்கள், பொதுக்கட்டிடங்கள், அதிவேகப்பாதை மேம்பாலங்கள் என்பவற்றில் சுவரோவியங்கள் வரையும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்டமாக பௌத்த வரலாற்றை பிரதிநிதிப்படுத்தி பௌத கலாசாரம், நவீன பிஸ்கோ கலை வடிவமைப்பில் சித்திரம் வரையப்பட்டன. என்றாலும் அடுத்த கட்டமாக சில ஓவியங்கள் முஸ்லிம்கள் கடும் போக்குமடையவர்கள், காடாழிப்பவர்கள் என்ற கருத்துக்களை விதைக்கும் விதத்தில் வரையப்பட்டுள்ளன.

ஆனால் இந்த சுவரோவியங்கள் விடயத்தில் நாம் பராமுகாமாக இருக்க முடியாது. ஏனெனில் காசியப்பன் மன்னன் (கி.பி. 473-495) 1500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட சிகிரியா ஓவியங்கள் இன்று வரலாற்று மூலதாரங்களாக மாறியுள்ளது. எனவே இன்று வரையும் ஓவியங்கள் 200 ஆண்டுகளுக்கு பின் இலங்கையின் வரலாறாக மாறவுள்ளது. எனவே இன்று இந்த ஓவியங்கள் நாளை இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களை பற்றிய தவறான ஓர் வரலாற்றை எழுதுவதற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாகும்.

எனவே எமக்கு முன்னால் நாம் எமது இன்றைய இருப்பை பலமாக வைத்து கொள்ளவும் வேண்டும். நாளைய வரலாற்றில் நம்மை பற்றி உண்மையான தகவல்களை ஓவியங்கள் மூலமாகவும் முன்வைக்க வேண்டும்.

தற்போதைய இந்த பனிப்போரில் நாம் வெற்றியடைய வேண்டும் எனில் நற்பண்புகளைத்தான் கையாள வேண்டும். சிங்கள மக்கள் முஸ்லிம்களை பற்றி தவறாக விதத்தில் வரைகின்றனர் எனவே நாமும் அவர்களை பற்றி தவறான கோணத்தில் வரைய முற்பட்டால் இனமுறுகள் அதிகரித்து நாட்டின் சமாதானத்தை சீர்குலைத்துவிடும். ஏதோ சித்திரம் என பேசாது விட்டால் நாளை இது வரலாறாக மாறி முஸ்லிம்களை பற்றி வருங்கால சமுதாயத்தில் தவறான எண்ணக்கருவை விதைக்கும். எனவே சுவரோவியங்கள் விடயத்திலும் நாம் காத்திரமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளோம்.

அதாவது இவ்வாறான போலிகளையும், பிற மதத்தவர்களை அவமதிக்கும் ஓவியங்களை வரைய வேண்டாம் என தற்போது அரசில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் தலைவர்கள், ஜம்மியத்துல் உலமா சபை போன்ற அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலும் இது இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிறுபான்மை சமூகத்திற்கு தம்மை பற்றிய வரலாறுகளையும், தமது மதத்தின் நற்கருத்துக்களையும் சுவரோவியங்கள் ஊடாக சமூக மயப்படுத்த கிடைத்துள்ள அறியதோர் சந்தர்ப்பாமாகும். எனவே இலங்கை முஸ்லிம் வரலாறு, பண்டைய அரச சபைகளில் அமைச்சர்களாக, போர் வீரர்களாக, மருத்துவர்களாக செயற்பட்ட காட்சிகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், நற்கருத்துக்கள், சகோதரத்துவம், ஒற்றுமை, சகவாழ்வு, நாட்டின் அபிவிருத்தி என்பவற்றை பிரதிபலிக்கும் ஓவியங்களையும், சிங்கள மொழியிலான கருத்துக்களையும் முஸ்லிம்கள் சுவரோவிய வடிவில் முன்வைக்க முன்வரவேண்டும். ஏனெனில் இவை முஸ்லிம்கள் நற்பண்புடையவர்கள் என்பதையும், முஸ்லிம் வரலாற்றை ஓவிய வடிவில் முன்வைக்க ஓர் சிறந்த சந்தர்ப்பாமாகும். Ibnuasad

1 comment:

  1. Superb, thank you.
    ACMJUS please, convey this message to presidential level.

    ReplyDelete

Powered by Blogger.