December 13, 2019

முஸ்லிம் கூட்டமைப்பு, சாத்தியமாக வேண்டும்

தேர்தல் நெருக்கி வந்து விட்டால், தேசிய அரசியலில் மட்டுமன்றி, சிறுபான்மையின அரசியலிலும் கூட்டணி, முன்னணி, கூட்டமைப்பு என்ற கோட்பாடுகள் பேசப்படத் தொடங்கிவிடும்.   

தேர்தல் காலத்தில் பிரஸ்தாபிக்கப்படுகின்ற கூட்டணிக் கதைகள், வாக்கெடுப்போடு, அதற்குரிய இலட்சணம் இழந்து போகின்ற தேர்தல் கூட்டுகளாகவே இருக்கக் காண்கின்றோம்.  
இரு கட்சிகள் அல்லது அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது, தேர்தலோடு மட்டும் முடிவடைந்து விடுகின்ற விவகாரமல்ல; தேர்தலும் அதில் ஒன்றாய் இருக்கலாம்.   

ஆனால், கூட்டணி அரசியல் என்பது, இலங்கை அனுபவத்திலும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் யதார்த்தங்களின் படியும் பெரும்பாலும் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டவையாகவே இருக்கின்றன. கூட்டுச் சேர்கின்ற ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு மனக் கணக்கு இருக்கும். அதன்படியே அத்தரப்பு சேர்வதற்கான முடிவையும் எடுக்கும்.  

இனங்கள் ரீதியாக மட்டுமன்றி, இலங்கையில் மதத்தை அடிப்படையாகக் கொண்டும், சாதிய அடிப்படையிலும், மேற்றட்டு, கீழ்த்தட்டு மக்கள் என்ற அடிப்படையிலும், கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மாத்தறை, மலையகம் எனப் பிராந்தியங்களின் பெயரிலும், மக்கள் அவர்களது வாக்குகளுக்காகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.   

கடந்த அரை நூற்றாண்டாகப் பெரும்பான்மைக் கட்சிகளும், அவர்களுக்கு முண்டுகொடுத்த முஸ்லிம், தமிழ்க் கட்சிகளும் தமது இனங்களை மய்யமாக வைத்து உருவான கட்சிகளும், மதகுருக்களின் அணிகளும் இந்தப் பிற்போக்குத்தனமான வேலையைக் கனகச்சிதமாகச் செய்திருக்கின்றன.  

இதன் விளைவாக, எந்தச் சிறுகட்சியினதும் நேரடி அல்லது திரைமறைவு ஆதரவின்றிப் பெரிய பெரும்பான்மைக் கட்சிகளால், நாட்டின் எல்லாப் பாகத்திலும், மிதமான ஒரு வெற்றியைப் பெறுவது சாத்தியமற்றுப் போயிருக்கின்றது.  

இன்றைய நிலைவரப்படி, சிறுபான்மைக் கட்சிகளோ, சிறு கட்சிகளோ ஆதரவளித்தாலும் கூட, தேர்தலில் வெற்றி பெற முடியாத அல்லது, தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றாலும் சில பிராந்தியங்களில் வெற்றிக்கொடி நாட்ட முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன.   

தேசிய அரசியலில், கூட்டணி அமைத்து, வெற்றி பெற முடியுமா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, ஆட்சியைப் பிடித்த பிறகு, கூட்டாகச் செயற்பட்டவர்களே தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு, கூட்டணி என்ற மந்திரத்தை நம்பி வாக்குப் போட்ட மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போன வரலாறும் இருக்கின்றது. ரணில் - மைத்திரி ஆட்சி மட்டுமன்றி, வேறு பல உதாரணங்களையும் குறிப்பிட முடியும்.  

இதுபோலவே, முஸ்லிம் அரசியலிலும் கடந்த 15 வருடங்களாகக் கூட்டு அல்லது கூட்டமைப்பு என்ற கதையாடல்கள் முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில், முஸ்லிம் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள், அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு, ஓரணியில் நிற்பார்கள் என்றால், முஸ்லிம்களின் பலத்தைக் காண்பிக்க முடியும் என்று கருதுகின்றார்கள்.  

ஒரே நிலைப்பாட்டில் இருந்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கேனும் தீர்வைப் பெறுவதுடன், அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வாய்ப்பும் உருவாகலாம் என்று நம்புகின்றார்கள்.   

இந்தக் காரணத்துக்காகவே, சாதாரண முஸ்லிம் மக்கள், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்று அவாவுற்றிருந்தார்கள்.  

இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததுடன், உருவாக்கப்பட்ட கூட்டமைப்பும் உருக்குலைந்து போனதைக் கண்முன்னே கண்டோம். மக்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் பெறுவதற்கான ஒரு புனிதமான உத்தியாகக் கூட்டமைப்பு கோஷம் கையாளப்படுவதாகவே, எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.   

கடந்த சில நாள்களாகக் கூட்டணி பற்றிய இரு கதைகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாக இணைந்து போட்டியிடப் போகின்றன என்பதாகும்.   

இரண்டாவது, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டணியாக இணைந்து போட்டியிட, முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கதையாகும்.  

இரு முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்வதில்லை என, பொதுஜன பெரமுன அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில், இப்படித்தான் நடக்கும் அல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்தான், பெரும்பாலும் இந்தக் கதைகளுக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்ல முடியும்.  

தவிர, மேற்சொன்ன கூட்டணிகள் தொடர்பில், கட்டமைக்கப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றே தெரிகின்றது.  

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து செயற்பட்டன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவ்வுறவு நீடிக்கவில்லை. மீண்டும், அதே வசைபாடல்கள், பகைமை பாராட்டல்கள் தொடர்ந்தன. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்திருக்கின்றதுதானே என்று நினைத்து வாக்களித்த மக்களுக்கு, பலனேதும் கிடைக்கவில்லை.  

கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்னதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டது. இதில் இணைய முஸ்லிம் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் முன்வரவில்லை. ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எம்.ரி. ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து இக் கூட்டமைப்பை நிறுவின.  

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்றை எதிர்பார்த்திருந்த மக்கள், இதனால் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டமைப்பு என்ற தாரக மந்திரத்துக்காகவே கணிசமான முஸ்லிம்கள், உள்ளூராட்சித் தேர்தலில் அவ்வணிக்கு வாக்களித்தனர். ஆனால் என்ன நடந்தது?  

கூட்டமைப்பு நிறுவப்பட்ட போது, மக்களுக்குப் பிரகடனம் செய்த 13 வாக்குறுதிகளில், ஒரு வாக்குறுதியில் ஒரு பாகத்தைத் தவிர, வேறு எதையும் நிறைவேற்றவில்லை.   

அதுமட்டுமன்றி, ஒரு கூட்டமைப்பாக வாக்களித்த மக்களுக்கு, நன்றிகூற ரிஷாட்டும் ஹசன்அலியும் ஒரே மேடையில் ஏறவில்லை. இப்போது, எல்லாம் முடிந்து, இரண்டு பேரும் வெவ்வேறு முகாம்களுக்குள் இருக்கின்றனர். மக்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டனர்.   

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது, நீண்டகால அடிப்படையில் நீடிக்கக் கூடியதல்ல என்பதற்கு, இவ்வாறு நிறைய உதாரணங்கள் உள்ளன. எல்லோருக்கும் அதிகாரமும், தலைமைத்துவமும் அமைச்சுப் பதவிகளும் அவசியப்படுகின்ற சூழலில், கூட்டமைப்புக் கோட்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க நிறைய அர்ப்பணிப்புகள், விட்டுக்கொடுப்புகள், வெளிப்படையான அணுகுமுறைகள் அவசியம். அது முஸ்லிம் அரசியலில் மிக அரிது.  

பொதுவாகக் கூட்டமைப்பு நிறுவப்பட்டால், அதனால் பெரிய கட்சிக்கே அதிக இலாபம் கிடைக்கும். முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எதிரெதிர் மனநிலைகளைக் கொண்ட வாக்காளர்களால் ஆதரிக்கப்படும் கட்சிகள் ஆகும். இவ்வாறிருக்கையில், சில இடங்களில் இணைந்து போட்டியிடுவதால் பிரதிநிதித்துவங்கள் குறைவடையும் வாய்ப்பிருக்கின்றது.  

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து கூட்டணியாகப் போட்டியிடுவது பற்றிக் கலந்தாய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.   

வடக்கில் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்கு இருக்கின்ற வாக்குகளில் கொஞ்சத்தை சுருட்டிக்கொள்ள ரவூப் ஹக்கீமும், தென்கிழக்கில் தூர்ந்து போயிருக்கின்ற தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாட்டுத் தளத்தை தூக்கிநிறுத்த அதன் தலைமையும், (அல்லது வேறு காரணங்களுக்காக) கூட்டணி வியூகத்தை நாடலாம். ஆனால், அது எதிர்பார்க்குமளவுக்கு வேலைக்குதவாது.  

வட மாகாண சபையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற முஸ்லிம் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது. இருப்பினும், சில வருடங்களுக்குள்ளேயே உறவு கசந்தது. இப்போது பல கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, முன்பிருந்த கட்டுறுதியோடு இல்லை என்பது வேறுகதை.  

மு.காவும் த.தே.கூட்டமைப்பும் இணைந்து போட்டியிட்டால், யாருக்கு அதிக பிரதிநிதித்துவங்கள் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை; என்றாலும், த.தே.கூட்டமைப்பு தேசிய, சர்வதேச ரீதியில் இதை வைத்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டு, அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளும்.  

இரு சமூகங்களும் வாழும் பிரதேசங்களில்தான் கூட்டணி அவசியமாகின்றது. தமிழ்ப் பிரதேசத்தில் தமிழர் ஒருவரை வேட்பாளராகப் போடுவதற்கோ, முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவரை களமிறக்குவதற்கோ கூட்டணி அவசியமில்லை.  

சரி அப்படியாயின், முஸ்லிம்களும் தமிழர்களும் சரிசமமாக வாழும் பிரதேசங்களில் யாரைப் போடுவது என்பதில் சிக்கல்கள் தோன்றலாம். அதேபோன்று, ஒரு பிரதேசத்தில் முஸ்லிமை அல்லது தமிழரை வேட்பாளராக நிறுத்திவிட்டு, அங்குள்ள தமிழ் மக்கள், அந்த முஸ்லிமுக்கு அல்லது முஸ்லிம் மக்களை அந்தத் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் வாக்குப் போடுவார்களா, இது நடக்கின்ற காரியமா? ஏனெனில், அவ்வாறான இனம் கடந்தும் சிந்திக்கும் அரசியல் கலாசாரத்தை, எவரும் உருவாக்க இல்லையே.  

இது இவ்வாறிருக்க, இவ்வாறு முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து கொண்டால், சிங்கள மக்களிடமிருந்து இன்னும் தூரமாக்கப்படுவோம். இதனால், அதிகம் பாதிக்கப்படக் கூடிய இனக் குழுமமாக, முஸ்லிம்கள் இருப்பார்கள்.   

இந்தப் பத்தியைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டமைப்பு, கூட்டணி கோட்பாடு தவறானது என்று இந்தப் பத்தி கூறவரவில்லை. அது, நமது நோக்கமும் அல்ல.   

மாறாக, அரசியல் கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டமைப்பு, கூட்டணி என்பது தேர்தலுக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது என்பதாகும். நமது அனுபவப்படி, சிறுபான்மைச் சமூகத்துக்குள் உருவாகின்ற கூட்டணிகள், தேர்தலோடு வழக்கிழந்து விடுவதால், இது மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகவே அமையும் என்பதையும் இப்பத்தி கூற விளைகின்றது.  

முஸ்லிம் கட்சிகள் இணக்கப்பாட்டோடு பயணிப்பது அவசியமானது. முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது (கடந்த மே மாதத்தில் செயற்பட்டதைப் போல) ஒருமித்துச் செயற்படுவது அவசியம்.  

அதே முனைப்புடன் நீண்டகாலம் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கான திராணி இல்லாத விடத்து, தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு பிராந்தியத்தில் கூட்டணியாகவும் இன்னுமொரு பிரதேசத்தில் எதிரெதிர் அணியாகவும் போட்டியிடும் கூட்டணி மந்திரம் வேண்டாம்.  

அதேபோன்று, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன, அரசியல் ஒற்றுமைகள் அவசியமானதே. ஒரு முடிவை எடுக்கின்ற சகோதர கட்சியுடன் கலந்துபேசி தீர்மானிப்பதே சிறந்தது.   

ஆனால், கூட்டணி அமைப்பது மக்கள் நினைக்கின்ற பலனைத் தராது. கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையைக் கூடப் பேசித் தீர்க்க முடியாத இரு கட்சிகள், கூட்டணிக் கதைகளுக்குப் பின்னால் போகத் தேவையுமில்லை.  மொஹமட் பாதுஷா

4 கருத்துரைகள்:

Ethnicity based parties should limit their politics to North and east . So that Muslims and Tamils living amongst the majority be allowed to join with national political parties

@Ajan you are a son of a bitch.... we don't need your opinion in our own politics you shut your dick and get out from here. there are plenty of holes inside your stupid community close them first.

Post a Comment