December 31, 2019

எனது பதவி காலத்திற்குள் சாதித்துக்காட்டுவேன் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி

இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுறுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

நாளாந்த மக்களின் வாழ்க்கையோடு நேரடி தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் வினைத்திறனான, வெளிப்படைத் தன்மையுடைய தூய நிறுவனங்களாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச சேவையின் வினைத்திறனை உறுதிசெய்வதற்கு தேவையற்ற சட்டதிட்டங்களும் ஒழுங்கு விதிகளும் விரைவில் திருத்தங்களுக்கு உட்பட வேண்டும். அனைத்து அரச சேவை வழங்கல்களும் இலகுவானதாகவும் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என பயணிகள் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அரச சேவை பற்றிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது சுமார் 15 இலட்சம் வரையிலான ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் முக்கிய பொறுப்பாகும். இதன்போது வெளிப்படைத் தன்மையுடைய கருத்தாய்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் பிரச்சினைகளை மறைத்து வைக்காது வெளிப்படுத்துதல் மிக முக்கியமானவையாகும். அரச சேவையின் உயர்பதவிகளுக்காக ஆற்றலும் தொழில் நிபுணத்துவமும் உடையவர்களை இணைத்துக்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு அரச சேவையே இந்த நாட்டின் முதுகெலும்பாகும் எனக் கருதியதனாலேயே ஆகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரச சேவையிலிருந்து அனைத்து முறைக்கேடுகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும். அன்றாட மக்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களில் முறைக்கேடுகளை கண்டறிந்து அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புலனாய்வுத் துறைக்கும் குற்றப் பரிசோதனைத் திணைக்களத்திற்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அரச சேவையாளர் ஒருவர் ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்படின் அவர்களது பதவி நிலைகளை கருத்திற்கொள்ளாது தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.

இலஞ்சம் வாங்குபவர்களுக்கு எதிராக மட்டுமன்றி இலஞ்சம் வழங்குபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் போன்றே ஒட்டுமொத்த சர்வதேசத்திற்கும் எமது நாடு பற்றிய தெளிவு ஏற்படுவது அரச சேவையின் செயற்பாட்டினாலாகும் என்பதை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையை பலப்படுத்துவதனூடாகவே அரச சேவையாளர்களின் சம்பளம் உள்ளிட்ட வசதிகளை உயர்த்த முடியும். வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட ஏனைய தொழில்களில் ஈடுபடும் மக்களின் வருமானத்தினூடாகவே அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆகவே நாட்டு மக்களுக்கு வினைத்திறனானதும் தூய்மையானதுமான சேவைகளை வழங்குவது அனைத்து அரச சேவையாளர்களின் பொறுப்பாகும். 

பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக வழங்குவதற்கு தரவுகளை ஒரே வலையமைப்பிற்குள் சேகரித்தல், புதிய தொழிநுட்ப உபாயங்களை பயன்படுத்துதல் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி அவர்களின் விஜயத்தின் பின்னரான வேரஹெர மோட்டார் வாகன திணைக்களத்தின் செயற்பாடுகளும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

சாரதி அத்தாட்சிப் பத்திரமொன்றை வழங்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வைத்தியப் பரிசோதனை தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

இந்த முறையில் நிலவும் சிக்கல் நிலையை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், இலகு ரக வாகனங்களுக்கு கண் பரிசோதனை மாத்திரம் போதுமானது என்பதை சுட்டிக்காட்டினார். இதற்கான பரிசோதனையை வைத்தியசாலையில் பெற்றுக்கொள்வது தொடர்பில் கண்டறியவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. பூரண வைத்தியப் பரிசோதனை கனரக வாகனங்களுக்கு சாரதி அத்தாட்சிப் பத்திரங்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

பிரச்சினைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் இனங்கண்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த  சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுமாறு ஜனாதிபதி அவர்களினால் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உள்ளிட்டோரும் பயணிகள் போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாலில் கலந்துகொண்டனர். 

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.12.31

0 கருத்துரைகள்:

Post a Comment