December 22, 2019

மனிதாபிமானம் இல்லாத சம்பிக்க - அரச பத்திரிகை வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்


கொழும்பு குற்றப் பிரிவினர் கடந்த 13ம் திகதி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய கொழும்பு நான்காம் இலக்க நீதவான் நீதிமன்றம் கடந்த அரசின் முக்கிய அமைச்சராகவிருந்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தது. அதன் பின்னர் கடந்த 18ம் திகதி மாலை முன்னாள் அமைச்சரை பத்தரமுல்ல, ஜயந்திபுரவில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து  வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பு குற்றப் பிரிவிற்கு கொழும்பு குற்றப் பிரிவினர்அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட சம்பிக்க, அன்றைய தினம் இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மறுநாளான 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.  

மீண்டும் மறுநாள் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா த. சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவை இம்மாதம் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

முன்னாள் அமைச்சர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த குற்றச்சாட்டாக இருந்தது 2016ம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி இரவு 9.45 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் வாகன விபத்தொன்றை ஏற்படுத்தி வாகனச் சாரதியை மாற்றி அந்த வாகன விபத்து தொடர்பான தகவல்களை மறைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவமாகும். 

“கனம் நீதிபதி அவர்களே! 2016ம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் அப்போதைய வெலிக்கடை பொலிஸாரினால் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் குமார மற்றும் லக்சான் ஆகிய இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் போது குமார என்ற அதிகாரி, அவருக்கு உயர் அதிகாரியான லக்சான் வழங்கிய உத்தரவுக்கு அமைய பாட்டலி சம்பிக்கவின் பெயர் நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அப்போதிருந்த வாகனப் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெரேராவின் உத்தரவுக்கு அமைவாகவே அவ்வாறு செய்ததாக லக்சான் என்பவர் தெரிவித்துள்ளார். அப்போது வெலிக்கடை பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பெரேராவிடம் விசாரணை செய்த போது, அப்போது வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அஸ்மடளவின் உத்தரவுக்கு அமைவாகவே தான் அவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகரான அவர், அப்போது வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் கீழ் மட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவ்வாறு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பிலான தகவல்களை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்துடன் குறித்த வாகன விபத்து தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சியும் உள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் சதியில் ஈடுபட்டு  உண்மையான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.  

அத்துடன் அந்த நேரத்தில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் தகவல்களை மறைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. எனவே இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் இனங்கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.   கனம் நீதிபதி அவர்களே! இதனை ஒரு சாதாரண விபத்தாகக் காட்டுவதற்கே அனேகமானோர் முயற்சிக்கின்றனர். அது முற்றாகத் தவறானதாகும். இந்த சந்தேக நபர் விபத்தொன்றை ஏற்படுத்திவிட்டு திட்டமிட்ட வகையில் தப்பிச் செல்வதற்கு சதி செய்துள்ளார்.  

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான திலும் குசித குமார என்பவர் சிலரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அச்சந்தேக நபரைக் கைது செய்வதற்காக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன“. 

இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்குவதை தான் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். 

“கனம் நீதிபதி அவர்களே! 2016ம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்த வாகன விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே வாகனத்தின் சாரதி குற்றத்தை ஏற்றுக் கொண்டு வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளன. எனினும் பொலிஸாரால் முடிக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனடிப்படையில் எனது கட்சிக்காரர் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் விசாரணைகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நான் வினயமாக் கேட்டுக் கொள்கின்றேன். அவருக்கு பிணை வழங்க முடியாதளவுக்கு விசேடமாக காரணங்கள் எதுவும் இச்சந்தர்ப்பத்தில் தோன்றவில்லை...“ 

இவ்வாறு பாட்டலி சம்பிக்கவுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெறுவது, அன்று 2016 பெப்ரவரி 28ம் திகதி இரவு பத்தரமுல்லை திசையிலிருந்து வந்து ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரிக்கு முன்னால் வலது பக்கத்திற்குத் திரும்பி சரண வீதியில் செல்வதற்கு முயன்ற முவு 7545 இலக்க இலங்கை மின்சார சபைக்குரிய ஜீப் வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலாகும். இந்த விபத்தில் 27 வயதுடைய சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதோடு, மனுல மித்சுக அபேசுந்தர என்ற இளைஞரும் காயங்களுக்கு உள்ளானார்.  

மீகொடை, புவக்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் வாட்டசாட்டமான இளைஞரான சந்தீப் சம்பத்தினால் தற்போது சரியான முறையில் பேசுவதற்கோ, நடமாடுவதற்கோ முடியாது. அவ்விளைஞர் அங்கவீனமுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

இந்த விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க கைது செய்யப்படுவதற்கு முன்னர், அதாவது 14ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விபத்து ஒரு சிறிய விபத்து எனத் தெரிவித்திருந்தார். எனினும் மூன்று வருடங்களும், பத்து மாத காலமாக  மிகவும் துன்பங்களை அனுபவித்து வரும் சந்தீப் சம்பத் தொடர்பில் அவரது பெற்றோர் கூறும் போது, முன்னாள் அமைச்சர் தமது ஒரே மகன் அனுபவித்து வரும் துயரங்களை ஒரு போதும் ஏறெடுத்தும்பார்க்காமல் எவ்வாறு அப்படிக் கூறுகின்றார் என்றேயாகும். ஒரு தாயாக அவ்வாறான கூற்றினைக் கேட்கும் போது மிகுந்த துன்பப்படுவதாக சந்தீப்பின் தாயார் கூறியுள்ளார்.

சந்தீப்பின் தந்தையான தயானந்த குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது, 

“எமது மகனால் இன்னமும் சரியாகப் பேசவும் நடமாடவும் முடியாது. நான்தான் எனது மகனின் அனைத்து விடயங்களையும் செய்து வருகின்றேன். அவருக்கு மற்றொருவரின் உதவி தேவை. இன்று நான் எனது ஒரே மகனுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் தொழிலுக்குச் செல்வதற்கும் வாய்ப்பில்லை. மகன் அண்மைய காலங்களில் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்னமும் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் ஏற்படவில்லை. எனது மகனுக்கு இந்நிலை ஏற்பட்டது முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் வாகனம் மோதியதலாகும். இதனால் நாம் அந்நாட்களில் அவரைச் சந்திக்கச் சென்றோம். எனினும் எமக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை“ 

அன்று இடம்பெற்ற மோசமான விபத்தினால் எட்டு மாதங்களுக்கும் அதிகமான காலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ராகமை புனர்வாழ்வு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற சந்தீப்பைப் பற்றி அவரது தாய் நாலனி நாணயக்கார அண்மையில் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.  

“எமது மகன் 24 மணிநேரமும் துன்பங்களை அனுபவிக்கின்றார். அதனைப் பார்த்துக் கொண்டு நான் எவ்வாறு வாழ்வது. எனக்கு எதுவும் தேவையில்லை. எனது மகன் சரியாக நடக்கும் வகையில் அவர் சுகமடைந்தாலே போதும். மகனின் கையில் சத்திரசிகிச்சை ஒன்று செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்தால் மகன் செய்யும் சிறுசிறு உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாமல் போகும் என்றும் கூறுகின்றார்கள். 

அண்மையில் சந்தீப்பின் தாயும், தந்தையும் சந்தீப் அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பில் ஊடகங்களில் தெரிவித்த உணர்ச்சிபூர்வமான கதை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் சந்தீப்பை பிரதமரின் பிரத்தியேக வைத்தியரான எலியந்த வைட்டிடம் காட்டுவதற்கு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இந்த விபத்து தொடர்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் முடிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் சந்தீப்பிற்கு சட்டத்தின் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

பாட்டலி சம்பிக்க அன்று அந்த நேரத்திலேயே சந்தீப்பை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காவது நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினை இந்தளவு தூரத்திற்குச் சென்றிருக்காது.  

அன்று பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு தன்னால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கும் குறைந்தபட்ச மனிதாபிமானமாவது இருந்திருந்தால் சந்தீப் இன்று இவ்வாறு அங்கவீனராக துன்பப்பட வேண்டி ஏற்பட்டிருக்காது.  

தமிழில் - எம். எஸ். முஸப்பிர் - தினகரன் வாரமஞ்சரி

1 கருத்துரைகள்:

எனக்கு தமிழில் ஒரு சந்தேகம் இருக்குங்க. "அடாது செய்பவன் படாத பாடு படுவான்" என்கிறதின்ட meaning என்னங்க. நீங்கள் எல்லாம் தமிழ் பண்டிதர்கள் இல்லனு எனக்கு நல்லாத் தெரியுமுங்க. சரி இங்கிலீசில் கேட்கிறேன் சொல்லுங்க. "Mill of God grinds slowly; but sure" அப்பிடின்னா என்னங்க.

Post a Comment