December 22, 2019

முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு, 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது' போன்றே அமையும்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

"முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷம் காலத்திற்குக் காலம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கோரிக்கை நியாயமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையும் அதனை மையப்படுத்தியதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் இனத்துவ அரசியலை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதனால் முஸ்லிம் கட்சிகளினதும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் செயற்பாடுகள் மாற்று சமூகத்தினரால் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது நாம் எதிர்பார்க்கின்ற இலக்குக்கு மாற்றமான பாதக விளைவுகளையே சமூகத்திற்கு ஏற்படுத்தி விடலாம் என்கிற அச்சம் புத்திஜீவிகள் மட்டத்தில் உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதனை நியாயமானதோர் அச்சமாகவே அரசியல் தலைமைகள் நோக்க வேண்டியுள்ளது. இன்றைய பேரினவாத அரசியல் நடப்புகளை தெளிவாக கண்டறிந்து கொண்டும் யதார்த்தத்திற்கு மாறாக முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைவு பற்றி சிந்திப்பது முட்டாள்தனமான செயற்பாடாகவே அமையும் எனலாம்.

அதாவது முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத வெறித்தனம் மேலோங்கியிருக்கின்ற சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றே அமையும்  என்பதில் சந்தேகமில்லை. 

அது மாத்திரமன்றி தேர்தலை முன்னிறுத்தி அமைக்கப்படுகின்ற கூட்டணியானது நிரந்தர ஒற்றுமைக்கும் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குமான ஒரு இயக்கமாக அமையப்போவதில்லை. குறிப்பாக தேர்தலின்போது ஆசன ஒதுக்கீடு, வாக்கு சேகரிப்பு, பதவிகளை பகிர்ந்து கொள்வது போன்ற கட்டங்களில் பிணக்குகளுக்கு வழிவகுத்து, இருக்கின்ற ஒற்றுமை கூட சீர்குலையுமேயொழிய சமூகம் எதிர்பார்க்கின்ற இலக்கில் இக்கூட்டணி பயணிக்கும் என்று நம்ப முடியாது.

தமிழ் சமூகத்தின் நீண்ட கால உரிமைப் போராட்டத்தை முன்னிறுத்தி பெரும் அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சித்தாந்தமும் தற்போது தோற்றுப்போன ஒன்றாக மாறியிருப்பது எமக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

சில முஸ்லிம் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ரத்ன தேரர் தலைமையில் அணிதிரண்டு இனவாதிகள் நெருக்குவாரப்படுத்தியபோது சமூக நலன்கருதி சம்மந்தப்பட்டோரை பாதுகாப்பதற்காக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் எம்.பி.க்களும் சேர்ந்து அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து சமூக ஒற்றுமையை பறைசாற்றியபோதிலும் பின்னரான காலப்பகுதியில் அவர்கள், மு.கா. தலைமைக்கு எதிரான நயவஞ்சக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை இத்தருணத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏனைய இனத்தவர்களினால் புரிந்துணர்வுடன் கூடிய இனவாதமற்ற, மிதவாத முஸ்லிம் தலைவராக நோக்கப்படுகின்றார். இத்தகையதோர் தேசிய நல்லிணக்க தலைமைத்துவத்தினாலேயே பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் போன்று பிற சமூகவத்தரவர்களின் நட்பையும் நம்பிக்கையையும் பேணிக்கொண்டு முஸ்லிம் சமூக அரசியலை முன்னெடுக்க முடியும். இனவாதம் மேலோங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் இத்தகைய அரசியல் நகர்வே முஸ்லிம்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் என்கிற யதார்த்தத்தை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினதும் அரபு நாடுகளினதும் கவனத்தை ஈர்த்து, அந்நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெறுவதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களினால் மாத்திரமே முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பு வெற்றி பெறாவிட்டாலும் இறைவன் அதில் எமக்கு மறைவான வெற்றியை வைத்திருப்பான் என்று திடமாக நம்புகின்ற முஸ்லிம்களாகிய நாம், தோல்விகளைக் கண்டு துவண்டுவிடத் தேவையில்லை. ஆட்சியை கொடுப்பதும் பறிப்பதும் இறைவன்தான். அரசியலில் தலைகீழ் நிகழ்வுகள் ஏற்பட ஆறு மாதம் என்பது அதிக காலமாகும்" என்றும் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

3 கருத்துரைகள்:

If you are doing right things, you do not need to worry/scare about others.
This means you guys are hiding something

தாங்கள் சொல்லுவது போன்று சேர்ந்து போவதில் உள்ள நன்மையை விட பிரிந்து நிற்பதில் நன்மை அதிகம் தான். நிதானமற்ற வாய் வீரம் பேசி, முந்திரிக்கொட்டையாக அரசியல் செய்யும் தலைவருக்காக தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் அனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்தமை அவசியமான ஒன்றாக இருந்தாலும் ஒருவரின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் ஏனையோர் முகங்கொடுத்து அசெளகரியம் அனுபவித்தது துரதிஷ்டமே. இச் சம்பவத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள வாக்குகள் பெறும் முஸ்லிம் தலைவர்களே. எனவே வாய் வீரம் பேசும் தலைவர் பக்குவப்படும் வரை கூட்டுச்சேர்வது என்பது மு.கா. வுக்கு உசிதமானதல்ல. பொதுக்கூட்டமைப்பாக அன்றி அரசியல் வெற்றிக்காக சில இடங்களில் மட்டும் கூட்டுச்சேர்வது தேவையாக அமையலாம்.

இந்த விடயதானத்தில் அதிக சொற்பிழைகள் இல்லை. மற்றும் எழுத்துப்பிழைகளும் இல்லை. ஜெமீல் அவரகளின் கூற்று சரியா அல்லது பிழையா என்று கூறுவதற்குரிய equality எங்களைப் போன்ற அல்லது என்னைப் போன்ற பாமர மக்களிடம் இல்லை. சேகு இஸ்ஸதீன், அதாவுல்லாஹ், ஹிஸபுல்லாஹ், ஹசன்அலி, பஷீர் சேகுதாவுத், அமீரலி, நஜீப், சின்ன மகறூப் YLS. ஹமீத் இன்னும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விரட்டப்பட்ட தலைவரகளிடம்தான் உண்டு. மேல் கூறப்பட்டவரகளெல்லாம் அறிஞர் ஜெமீல் அவர்களுக்கு அரசியலில் சமனானவரகள் என்று கூற முன் வரவில்லை. எழுதப்பட்ட விடயதானத்திற்கு பதிலளிக்ககூடிய தார்மீக உரிமை மற்றும் கடமை, மக்களுக்குத் தெளிவுறுத்த வேண்டிய பொறுப்பு இவரகளுக்கு மாத்திரமே உள்ளது என்றுதான் கூற வருகின்றேன்.

Post a Comment