Header Ads



தோட்டத் தொழிலாளர் மீது, இனவாத தாக்குதல் - வடிவேல் கண்டனம்

பண்டாரவளை, ஊவஹைலண்டஸ் தோட்டம், எல்லவெல பிரிவு தோட்ட மக்கள் மீது கிராமத்தினை சேர்ந்த இனவாதிகளினால் நேற்றிரவு -29- தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஸ்தலத்திற்கு இன்று முற்பகல் நேரடி விஜயம் செய்தார். 

இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நேற்று இரவு ஊவா ஹைலண்டஸ் தோட்டத்தினைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தாக்கியது மட்டுமல்லாது அடாவடித்தனமாக  தோட்டத்திற்குள் உள்நுழைந்து தகாத இனவாதமிக்க வார்த்தைகளை பிரயோகித்து தோட்டத் தொழிலாளர்களையும் பெண்களையும் தாக்கியதுடன் ஏனையவர்களை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி  மிகவும் மனம் வருந்திய நிலையில் என்னுடன் தொடர்பு கொண்டனர். 

அதையடுத்து அக் கிராமத்திற்கு விரைந்த நான் தோட்ட மக்களுடன் கலந்துரையாடி விடயத்தை அறிந்து தோட்ட முகாமையாளருடனும் பகுதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எம்மக்களுக்கு பாதுகாப்பினை உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்.

இதற்கமைய விரைந்து செயற்பட்டு அட்டாம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியை ஸ்தலத்திற்கு அனுப்பி இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளேன். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செயற்பாட்டால் தோட்ட மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியிருப்பதன் காரணமாக தோட்டத்திற்கு விஜயம் செய்து தோட்ட அதிகாரி வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரியுடனான பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளேன். 

அண்மைக்காலமாக இது போன்ற மிலேச்சகரமான செயற்பாடுகள் அரங்கேரிய வண்ணம் உள்ளது.தற்போது ஊவா ஹைலண்டஸிலும் இடம்பெற்றுள்ளது.எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.எனது மக்களுக்கு எப்போதும் ஓர் காவல்காரணாக செயற்பட்டு வருகின்றேன்.மார்கழி மாதம் என்பதால் பஜனை இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்து கொள்வதற்கு நள்ளிரவு வேளைகளில் எமது இளைஞர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.பெண்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.இப்படியான அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர். இனியும் இது போன்ற அடாவடித்தனத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்து தோட்ட மக்கள் பணிப்பகிஸ்கரிப்பில்  ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தோட்டத்தில் மக்கள் பெரும் பதற்றத்தின் மத்தியில் இருந்து வருகின்றனர். 

1 comment:

  1. நன்றி வடிவேல். ஒருநாள் கண்டன அடையாள வேலை நிறுத்தமும் அவசியம். இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள ஜனநாயக சக்திகளும் இந்த காட்டு மிராண்டித்தனத்தை கண்டிக்க வேண்டும். இலங்கை என்ன பர்மாவா? இந்தியா மற்றும் சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பது அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.