Header Ads



அச்சமும் சந்தேகமுமின்றி நத்தாரை நிம்மதியாக கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சுபீட்சமான நத்தார் உதயமாகட்டும்.

இனிய நத்தார் வாழ்த்துகள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

"சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மைப் பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக் கொள்வோம்.

பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றுவோம். அதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும் என்றே கிறிஸ்தவம் போதிக்கின்றது.

"நல்ல உள்ளங்கள் அமைதியடையட்டும்" என்பதையே இக்காலத்தில் இசைக்கப்படும் இறை கானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

அத்தகைய தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே எமது எதிர்பார்ப்பாகும். ஆண்டவரின் ஆசீர்வாதமும் விருப்பமும் அதுவேயாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

இறை ஆசீர்வாதம் பெற்ற வணக்கஸ்தலங்களில் அண்மையில் முகங்கொடுக்க நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

பிறந்துள்ள இந்த நத்தாரை அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாகக் கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவே கருணை உள்ளம் கொண்ட அனைவரினதும் பிரார்த்தனையாக அமைந்த அதேவேளை, மிகுந்த துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான மக்களுக்கு நிம்மதியையும் பெற்றுத் தரும்.

இயேசு பிரான் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சகல மக்களையும் சமமாக மதித்துப் போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.