Header Ads



இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு, எதிரான போராட்டங்கள் வலுக்கின்றன


குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வன்முறைப் போராட்டங்கள் துரதிருஷ்டவசமானவை, ஆழமான வருத்தத்தை தருபவை என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

"விவாதம், உரையாடல், மாறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் அவசியமான அம்சங்கள். ஆனால், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், சஜக வாழ்க்கையை கெடுத்தல் ஆகியவை நமது விழுமியங்களில் இல்லை" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பேருந்துகளுக்கு போலீசாரே தீவைப்பது போல காட்டும் வீடியோக்கள் வெளியாவது குறித்தோ, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்தோ அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிரியங்கா காந்தி போராட்டம்

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில், டெல்லியிலுள்ள 'இந்தியா கேட்' அருகே தனது கட்சியினருடன் வந்த பிரியங்கா காந்தி, "மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்" என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடரும் போராட்டங்கள்

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் லக்னோ நட்வா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ மாணவர் போராட்டங்கள் குறித்து போலீஸ் கண்காணிப்பாளரான கலாநிதி நைதானி கூறுகையில், கிட்டத்தட்ட 30 வினாடிகள் அளவுக்கு கல்லெறி சம்பவங்கள் நடந்தன. ஏறக்குறைய 150 பேர் இந்த போராட்டத்துக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். தற்போது மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்' என்று கூறினார்.

இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும் இந்திய மாணவர் கூட்டமைப்பால் மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி நடைப்பயணம் மேற்கொண்டார்.

1 comment:

  1. Theses trouble makers will be jail soon
    Modi is the best

    ReplyDelete

Powered by Blogger.