Header Ads



முஸ்லிம் பிள்ளைகள் பர்தாவுடன், பரீட்சை எழுத மறுக்கப்பட்டார்களா..?

இந்த முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தவொரு பரீட்சை மத்திய நிலையங்களிலும் அசௌகரியத்திற்கும், பாதிக்கப்பட்டும், தடைகளுக்கும் முகம் கொடுக்கவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

அவ்வாறு மாணவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுவதானது உண்மைக்கு புறம்பான தகவல் எனவும் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கும் சிலரே அவ்வாறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இவ்வாறான பொய்யான கருத்துக்களை புத்தியுள்ள மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளளார். 

இந்தமுறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதாகவும் அவர்கள் இரண்டு நாட்கள் பரீட்சையை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக்காரணமாக வலப்பனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர வேறு எந்த தடைகளும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கெக்கிராவ கல்வி வலையத்தில் சில முஸ்லிம் பிள்ளைகள் அவர்களின் கலாசாரத்திற்கமைய முகத்தை மூடிய ஆடையை அணிந்து பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்றமையால் அவர்கள் பரீட்சை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. 

இந்த செய்தியை கேள்வியுற்ற நான் உடனடியாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை அழைத்து அது குறித்து வினவி அந்த நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பானவரை அழைத்து தனிப்பட்ட வகையில் கலந்துரையாடியுள்ளார். 

கெக்கிராவ கல்வி வலய பணிப்பாளரிடமும் கதைத்தேன். அவ்வாறான எந்தவித சம்பவமும் இடம்பெறவில்லை எனவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் எந்தவித இடையூறும் இன்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

எனவே இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் பிள்ளைகளின் கல்வி குறித்து சிந்தித்து அவர்களுக்கு ஆத்ம தைரியத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. கடந்த வருடத்தைவிட இம்முறை முஸ்லிம் பெண்களுக்கு நிகழ்ந்த அசெளரியங்களை குறைவென்றே சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழ் அடிப்படைவாத ஆசிரியர்கள் சத்தத்தையும் காணோம்

    ReplyDelete

Powered by Blogger.