Header Ads



கொழும்பிலிருந்து சென்ற குப்பை, லொறி மோதி ஒருவர் மரணம்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் கீரியங்கள்ளி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு தளுவப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பென்சி சாந்த குமார பர்னாந்து   (வயது 58) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று, இன்று

 அதிகாலை புத்தளத்தில் இருந்து மீண்டும் கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியை நேருக்கு நேர் மோதித் தள்ளிவிட்டு வீதியோரத்தில் உள்ள மரத்துடனும், கடை ஒன்றுடனும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த கடையும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.

கற்பிட்டி, தலவில தேவாலயத்திற்கு செல்வதற்காக குறித்த முச்சக்கர வண்டியில் கணவனும், மனைவியும் நீர்கொழும்பு பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த சம்பதிகள் விபத்துக்கு முகம் கொடுத்துள்ளதுடன், விபத்தில் 58 வயதான கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவியும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் முன் பக்கம் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று, சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு மங்கள எளிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லொறியொன்றுடன் பின்னால் சென்று மோதியது.

இதனால், டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.