Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவின், புதுவருட வாழ்த்துச் செய்தி


பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், 'சுபீட்சத்தின் ஆண்டாக' ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது. 

எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதன் ஊடாக சுபீட்சத்தை அடையும் அபிலாiஷயுடனேயே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும். 

அதேபோன்று ஒழுக்கப் பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால மற்றும் எதிர்கால இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். வளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம். 

நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே இந்த புதிய அரசாங்கமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும். 

புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது, புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' செயற்திட்டத்தை இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்.


கோட்டாபய ராஜபக்ஷ
2019 டிசம்பர் 31ஆம் திகதி 

No comments

Powered by Blogger.