Header Ads



சுவிட்ஸர்லாந்து வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக இலங்கையின் தூதுவர், பேர்னில் வைத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சிடம் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 25ம் திகதி வீதியில் வைத்து குறித்த பெண் பணியாளர் கடத்தப்பட்டு, விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்போது அவரிடம் தூதரகம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்போது அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் பாஸ்கேல் பேரிஸ்வெல், விசாரணைகளை இலங்கை அதிகாரிகள் தாமதப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தின் பொறுப்பை ஏற்று உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த விசாரணைகளுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் உதவியளிக்கும்.

எனினும் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் இன்னமும் விசாரணை செய்யப்படுவதற்கான மனநிலைக்கு திரும்பவில்லை என்று சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.