Header Ads



5 பேருக்கு இன்று, மரண தண்டனை விதிப்பு - மாத்தளை நீதிமன்றம் அதிரடி

இரத்தோட்டை - கந்தேநுவர பிரதேசத்தில் நபரொருவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் இருவருக்கும், ஏனைய மூன்று நபர்களுக்கும் மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பி.கரல்லியத்த நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்இரத்தோட்டை கந்தேநுவர வௌலக பிரதேசத்தைச் சேர்ந்த 36, 37 , 41 ,43 , 46 ஆகிய வயதுதடையவர்களாவர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நான்காவது சந்தேக நபர் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.

மனித படுகொலையுடன் தொடர்புடைய இந்த தீர்ப்பு மாத்தளை மேல் நீதிமன்றத்தில் முதல் முறையாக விதிக்கப்பட்ட மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 20 ஆம் திகதி ரத்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதியான 24 வயதுடைய திருமணமாகாத இளைஞனை தாக்கி காயமடையச் செய்தமை மற்றும் சட்ட விரோதமாக கலந்துரையாடலில் உறுப்பினராக செயற்பட்டமை, கொலை செய்தமை, தாக்கி காயப்படுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமாதிபரின் ஆலோசனைக்கமைய தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டுக்காக ஒவ்வொரு சந்தேகநபர்களுக்கும் தலா 6 மாத கால கடூழிய சிறை தண்டனையும், 10, 000 ரூபாய் அபராதமும் , அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

கொலை குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி , மூன்றாவது குற்றச்சாட்டுக்காக ஒரு வருட சிறை தண்டனையும் 10, 000 ரூபாய் அபராதமும் விதித்ததார். அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

நான்காவதும், ஐந்தாவதும் குற்றச்சாட்டுக்களில் இருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் , கொலை செய்யப்பட்ட இளைஞனின் சகோதரரான  நபருக்கு  10, 000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்மாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த நஷ்ட ஈட்டு தொகையை வழங்க தவறும் பட்சத்தில் 6 மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதோடு, மேலதிக விசாரணைகள் கண்டி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று  மாத்தளையில் புதிதாக நிறுவப்பட்ட மேல் நீதிமன்றத்து வழக்கு விசாரணைகள் மாற்றப்பட்டன. 

வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணியாக யசிந்து செனவிரத்ன முன்னிலையாகியிருந்த அதே வேளை, முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜீவனி அத்துகோரளவும், முன்றாம் , ஐந்தாம் மற்றும் ஆறாவது சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீ லால் பேமவர்தனவும் முன்னிலையாகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.