December 19, 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான, போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரம் - 3 பேர் மரணம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஊடகத்தில் பேசிய மங்களூரு போலீஸ் ஆணையர் பி.ஹர்ஷா, இறந்த இருவரும் எதனால் இறந்தார்கள் என்ற விவரம் அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியும் என்று தெரிவித்தார்.

இறந்தவர்கள் பெயர்கள் ஜலீல் குட்ரொலி (43), நௌஷீன் பெங்கரீ (49) என்பதையும் அவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் பந்தர் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்க முயன்ற பிறகே அவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மங்களூரூ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஹர்ஷா கூறினார்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பஸ்கள், கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லி செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், டெல்லியின் சில பகுதிகளில் அரசு அதிகாரிகளின் உத்தரவுள்படி, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டவுடன் மீண்டும் சேவைகள் தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல அரசின் உத்தரவுபடி வோடாஃபோன் நிறுவனமும் டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும், போலீஸ் நடவடிக்கைகளும் தொடர்ந்து வரும் நிலையில் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை, 

உ.பி. தலைநகர் லக்னோவில் பரிவர்த்தன் சௌக் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 20 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள், 3 பேருந்துகள், 4 ஊடக நேரலை வண்டிகள் கொளுத்தப்பட்டன என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

மேலும், லக்னௌ போராட்டத்தில் ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி பேசிய உ.பி. போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், "எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) திட்டமிட்டபடி மதியம் 3 மணியளவில் போராட்டம் துவங்கியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், பேராசிரியர்கள், திரைப்பட நடிகர் சித்தார்த், கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒருபுறம் கோஷங்கள் எழுப்பப்பட, மற்றொருபுறம் பலரும் தங்களது கருத்தை அங்கு கூடி இருந்தவர்களிடையே முன்வைத்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் தங்களது கைகளில் தேசிய கொடியை ஏந்தியிருந்தனர்.

மாலை சுமார் ஆறரை மணிவரை நீடித்த இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மேலும், எவ்வித பிரச்சனையும் இன்றி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

0 கருத்துரைகள்:

Post a comment