Header Ads



2025 வரை ரணிலை வெளியேற்ற முடியாது - அவராகவே விலக வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ இழுபறிக்குச் சட்டச் சிக்கலே காரணமென கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணாயக்கார தெரிவித்திருக்கின்றார். 2025 வரை அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை தன்னிச்சையாக வெளியேற்ற முடியாது.

இடைப்பட்ட காலத்தில் அவராக விலகிக் கொண்டால் மட்டுமே புதிய தலைமைத்துவம் குறித்து யோசிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

2019 இடம்பெற்ற விஷேட மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க ஆறு வருடங்களுக்கு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரம் 2025 வரை அவர் அந்தப் பதவியில் சட்டப்படி தொடர முடியும். 2025இற்கு முன்னர் அவரை அப்பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமானால், இரண்டு வழிகளே இருக்கின்றன. ஆனால், இன்றையை அரசியல் நெருக்கடி நிலையில் அந்த நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது எனவும் சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணாயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க தாமாக தலைமைத்துவத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். அல்லது நிர்வாக மாற்றத்துக்காக விஷேட மாநாடொன்று கூட்டப்படவேண்டும். இன்றைய நிலையில் கட்சியை பலமுள்ளதாக மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால், ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தலைமைத்துவத்தில் இருக்கவேண்டுமென கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ரணில் விக்கிரமசிங்க கட்சித்தலைமைத்துவத்திலிருந்து விலகிக் கொண்டாலும் செயற்குழு எடுக்கும் முடிவு கட்சியின் விஷேட மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே புதிய தலைமைத்துவம் சட்ட ரீதியாக செல்லுபடியாக முடியும். இவ்வாறான நிலையில், நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அவசரப்பட்டு கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் எவரும் ஈடுபடக்கூடாதெனக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சட்டத்தரணிகள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.  

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் எதிர்கால மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்டப் பிரிவு நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எம்.ஏ.எம். நிலாம்   

No comments

Powered by Blogger.