Header Ads



சீரற்ற காலநிலையினால் 15 மாவட்டங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 2 ஆயிரத்து 530 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

சீரற்ற காலநிலையினால் இருவர் உயிரிழந்துள்ளனர். முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 21 ஆகும். மேலும் 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 1,228 குடும்பங்களைச் சேர்ந்த 4,284 பேர் 444 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இவர்களுக்குத் தேவையான வசதிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 2 தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதேவேளை அதிக மழை காரணமாக 42 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கலா ஓயாவில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள எழுவான்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வெள்ள அனர்த்த வலயத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மீ, கிரிந்தி, தெதுரு ஓயாவில் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. புத்தளம் மாவட்டத்தில் இங்கினி மிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் திருமதி.டி.ஜெ.மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். 

தம்போவ நீர்த் தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த 2 நீர்த் தேக்கங்களின் நீர் மீ ஓயவிற்கு திருப்பப்பட்டுள்ளன. 

அநுராதபுரம் மாவட்டத்தில் தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து ஒரு விநாடிக்கு 36,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்பெஹற, வெஹரல, மவ்ஆற, வீரவில உள்ளிட்ட நீர்தேக்கங்களில் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் நீர் மாணிக்க கங்கைக்கும கிரிந்தி ஓயாவிற்கும் வளவ கங்கைக்கும் திருப்பி விடப்படுகின்றன. இதனால் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.