November 15, 2019

யா அல்லாஹ்,, துன்புறுத்தும் ஆட்சியாளர்களை எம்மீது சாட்டாதிருப்பாயாக...

இன்னேரம் நீங்கள் முடிவுகளை எடுத்திருப்பீர்கள்.

எங்களுக்கான தனிப் பிரதேச சபை, எங்கள் ஊருக்கான ஒரு தேசியப்பட்டியல்,எங்கள் பிரதேசத்தில் ஒரு அபிவிருத்தி என்ற அடிப்படையிலான பிரதேசம் சார் வெற்று வாக்குறுதிகளுக்காக சிலரும்,

எங்களுக்கு எதுவுமே தெரியாது எங்களுக்கு விருப்பமான தலைவன் சொன்னான் அதனால் வாக்களிக்கிறோம் என்று சிலரும்,

சென்ற ஆட்சியில் என்றால் எங்களுக்கென்ன நன்மைகள் செய்ததா என்று பலரும் தங்கள் வேட்பாளரைத் தெரிவு செய்திருப்பீர்கள். 

ஒரு பொதுவான இறை விதி ஒன்று இந்த உலகை இயக்குகிறது.அல்லாஹ்வின் நேர் வழியில் மீழும் வரைக்கும் பெரும்பான்மையினருக்கு கீழ் வாழும் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்பது இறைவனின் சுன்னா.ஸ்பெய்னில் இருந்து பலஸ்தீன் வரைக்கும் அந்த நியதிதான்.இலங்கைக்கு அது சற்று லேட்டாகி வந்திருக்கிறது.ஆனால் வந்துவிட்டது.

யார் வெற்றி பெற்றாலும் நாம் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவோம் என்பதை முதலில் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.சஜித் மிகவும் நல்லவர்,கோத்தபாய மிகவும் கெட்டவர் என்ற நியதி இங்கு இல்லை.இருவரும் எமக்கு எதிராகவே செயற்படப்போகிறார்கள்.

அபூதாலிபா அபூ லஹபா என்ற ஒப்பீட்டில் கூட எனக்கு நம்பிக்கை இல்லை.அபூதாலிப் நபிகளாருக்கு உதவினார்கள்.சஜித் எமக்கு உதவப் போவதில்லை.நஜ்ஜாஷியா ஆப்ரஹாவா என்று நாம் ஒப்பிடத் தேவையில்ல.நஜ்ஜாஷி முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.எமக்கு சஜித் அடைக்கலம் தரப் போவதில்லை.

அடுத்தது சிங்களவர்களின் அதிருப்தியை தூண்டும் எந்த செயற்பாட்டையும் எவர் வந்தாலும் செய்யப் போவதில்லை. ஹிஸ்புல்லாஹ்விற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கோத்தபாய அறிக்கை விட்டதும், ஹக்கீமையும் ரிஷாடையும் மேடைகளை விட்டு சஜித் தடுத்ததும் இதனால்தான். சிங்களப் பெரும்பான்மையினரின் மனோனிலையைப் பிரதிபலிக்கும் அரசியல்தான் இங்கு நடைபெறப்போகிறது.

ஆக இன்று எமக்கு முன் இருக்கின்ற கேள்வி இரண்டு ஆபத்துக்களில் குறைவான ஆபத்தைத் தெரிவு செய்வது.

கழுத்தைக் கொடுப்பதா கையைக் கொடுப்பதா என்பதுதான் எமது முஸ்லிம் சமுகத்திற்கு முன் இருக்கும் கேள்வி.

முழு நிர்வாணமா, அல்லது கொஞ்சமாவது மானத்தை மறைக்க ஒரு கைக்குட்டையாவது எஞ்சி இருக்குமா என்ற கேள்வி.

இந்த இரண்டு தீங்குகளில் குறைவான தீங்கை தெரிவு செய்யும் ஒரு கடப்பாட்டில் எமது முஸ்லிம் சமுகம் இருக்கிறது.

கோத்தபாய யுகம் என்பது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

முழு அதிகாரமும் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த இருக்கும்போது கோத்தபாய ஒரு அரச ஊழியராக இருந்தார்.தமையனின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இலங்கையில் நடந்தேறியவைகள் ஏராளம்.

அனகாரிக தர்மபாலவோடு முடிந்து போன சிங்களப் பேரினவாதத்தையும், கொல்வின் ஆர் டி சில்வா மூடியிட்ட பௌத்த தேரவாதத்தையும் மீண்டும் திறந்துவிட்டது மஹிந்த யுகம்.

இனவாதம் நிலத்திற்குள் இருக்கும் ஒரு நெருப்பைப் போன்றது. அதை வெளியே விட்டால் அனைவரையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.முஸ்லிம் வெறுப்பு மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டது.இனவாதத்தின் விதை பரவலாகத் தூவப்பட்டுவிட்டது.யுத்தகாலங்களில் ஒரு தமிழன் எவ்வாறு பார்க்கப்பட்டானோ அவ்வாறு பார்க்குமளவிற்கு முஸ்லிம்களின் நிலை உருவாகிவிட்டது.

சிங்களப் பேரிவாதத்தின் மீளெழுச்சிக்கு மஹிந்த யுகம் வித்திட்டது.சிறுபான்மையினரை ஓரங்கட்டுவதன் மூலம் பெரும்பான்மையினரின் அனைத்து வாக்குகளையும் வைத்து அரசியலில் வெற்றி பெறலாம் என்று நினைத்தது மஹிந்த தரப்பு.யுத்தத்திற்கு முன்னர் எப்படி தமிழ்த் தேசியவாதம் தேர்தல் யுக்தியானதோ யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் தேர்தல் யுக்தியாகி இருக்கிறது.

முஸ்லிம்களின் ஆதரவு இருந்த மஹிந்த யுகமே இப்படி இருந்தால் கோத்தா யுகத்தை சற்று நினைத்துப் பாருங்கள்.

கிழக்கிற்கு கோத்தபாய ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கேனும் வரவில்லை.இது மிகவும் ஒரு முக்கியமான ஆபத்தான செய்தியைச் சொல்கிறது.நீங்கள் அவருக்கு வாக்குப் போடுகிறீர்களோ இல்லையோ கிழக்குத்தான் அவரின் முழு இலக்காக இருக்கப் போகிறது.முஸ்லிம்களை வேரறுத்து அரசியல் செய்யும் ஒரு யுகமாகவும் பழிவாங்கல் அரசியல் செய்யும் ஒரு யுகமாகவும் அது இருக்கப்போகிறது.

மிகப் பெரிய உரிமை சார் நெருக்கடிக்கு உள்ளாகப் போகிறோம்.காணி நிலங்கள்,கல்வி,வியாபாரம்,கலாச்சார அடையாளம் அனைத்தையும் இழக்கும் நிலை கூட எமக்கு ஏற்படலாம்.

ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு துன்புறுத்தும் அரசனை அல்லாஹ் அனுப்புவதாகச் சொல்கிறான்.
இப்ராஹீமிற்கு ஒரு நும்ரூத்,மூஸாவிற்கு ஒரு பிர்அவ்ன்,தாவூதிற்கு ஒரு ஜாலூத்,முஹம்மதிற்கு ( அனைத்து நபிமார்களின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக) ஒரு அபூ லஹப்.
இது இலங்கைக்கான ஒரு காலம்.

கொலைக்களத்தில் மிகவும் பிரதாபகரமாக மரணிக்கும் நிலை என்பது நாம் கொல்லப்படுகிறோம் என்பதை உலகிற்கு சொல்ல முடியாமல் மரணித்துப் போவது.

மரணத்திலும் பரிதாம மரணம் அது.

இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்கள் பட்ட துன்பத்தை வெளியே சொல்லி அழுவதற்காகவும்,தீர்வுகளைக் கேட்பதற்காகவும் சந்தர்ப்பங்கள் இருந்தன.

கொடுங்கோலர்கள் அனைவரும் சமுகத்திற்கான குரலை ஒடுக்குவார்கள்.

லசந்த விக்ரமதுங்க,எக்னெலிகொட,கீத் நோயர்,தாரகி சிவராம் அனைவரும் ஆட்சியாளர் தவறு செய்யும் போது எதிரொலித்தவர்கள்.ஒருவரும் உயிரோடு இல்லை.ப்ரெடிகா ஜென்ஸ் அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.அவரை கோத்தபாய மிரட்டிய தொலைபேசி உரையாடலை லீடர் பத்திரிகை வரி வரியாக வெளியிட்டது.

இவை அனைத்தும் அதிகாரம் அண்ணனிடம் இருக்கும் போத நடந்தது.அதிகாரம் தனக்கு கிடைத்தால் என்ன நடக்கும் சிந்தித்தீர்களா?

எமது கவலையெல்லாம் குரலற்றுப் போகப் போகும் எமது மக்களுக்கு குரல் கொடுக்க முடியாமல் எமது குரல்கள் ஒடுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதுதான்.

எமக்கு நடக்கும் அனீதிகளுக்கு எதிராக எம்மால் பேச முடியாமல் போனால்?

எமது துன்புறுத்தலை சர்வதேசத்திற்கு கொண்டு போக முடியமால் நாம் தடுக்கப்பட்டால் ஜெனீவாவில் இருந்து திரும்பி வந்த டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து கைது செய்யப்பட்டது போல்?

ஹிஜாப் பிரச்சினைக்கு எதிராக எம்மால் வழக்குப் போட முடிகிறது.நீதி மன்ற வாசலில் நாங்கள் கடத்தப்பட்டால் இனி என்ன செய்வது?

சிராணி பண்டார நாயக்காவிற்கு நடந்தது போல் நீதித்துறை ஆட்சியாளருக்கு அடிமையாக்கப்பட்டால்?

அளுத்கமை எரிந்த போதும்,அம்பாரை எரிந்த போதும்,திகண எரிந்த போதும் அங்கு எம்மால் செல்ல முடிந்தது,ஆவணப்படுத்த முடிந்தது,கண்டிக்க முடிந்தது,வழக்குத் தாக்கல் செய்ய முடிந்தது,

இனி வரும் காலங்களில் முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்பட்டால் குரலற்ற சமுகத்திற்கு குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலையில் வருடங்கள் சென்று புதை குழிகளில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படும் வரைக்கும் அந்த மக்களுக்கு என்ன நடந்தது என்று உலகிற்கு தெரியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டால்?

நாம் துன்புறுத்தப்படுவது நடக்கத்தான் போகிறது.ஆனால் நாம் படும் துன்பங்களை கோத்தா யுகத்தின் வெளியில் சொல்ல முடியாமலே போய்விடும்.எமது புதை குழிகளில் உள்ள எலும்புக் கூடுகள் மாத்திரமே ஆதாரமாகும் நிலை வரும்.

இன்னும் இரண்டு நாட்களில் எமது மரண சாசனத்தின் இறுதிப் பந்தி எழுதப்பட்டுவிடும்.
எதைத் தெரிவு செய்யப் போகிறீர்கள்?

அடியை வாங்கிக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் வீட்டுக்குள் இருக்கும் தலைமையா?
அடியை வாங்கிக் கொண்டு அடித்துவிட்டான் எனக்கு நீதி வேண்டும் என்று குரலை உயர்த்த இடமிருக்கும் தலைமையா?

இது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும் பதிவு அல்ல.யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்லும் பதிவு.

மடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் எனது குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்க்கிறேன்.எமது சமுகத்தின் மீது கவியப்போகும் அந்த இருளின் படலம் என்னை பைத்தியமாக்குகிறது.

எனது படுக்கை சுருட்டியே இருக்கிறது,எனது பொட்டலம் கட்டியே இருக்கிறது.ஒரு நீண்ட வெளியேற்றத்திற்கு என்னை நான் தயார்படுத்துகிறேன்.

இறைவா, எம்மை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை எம்மீது சாட்டாதிருப்பாயாக.
சமூகமாய்ச் சிந்திப்போம்.

Raazi

3 கருத்துரைகள்:

ஆனால் படைத்த ரப்பு எம்மோடு இருக்கிறான்...

Raazi,உங்களது ஒப்பிடுகையில் சஜித்திற்கு ஆதரவளிக்கும்TNA யின் செல்வாக்கைப் பற்றியும் அதனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய கபளிகரம் பற்றியும் குறிப்படிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் மேலே குறிப்பிட்ட பாதிப்புக்களை விட TNA யின் செல்வாக்கால் ஏற்படக்கூடிய ஆபத்து ஈடுசெய்ய முடியாதிருக்கும் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்.
நான் அறிந்த வரையில் உங்களது ஊரின் எல்லைப் பிரிப்பு எவ்வளவு கேவலமாக மேற்கொள்ளப்பட்டது என்பதை நீங்களே விபரிக்க தகுதியானவர் என்பதால் அதுபற்றியும் குறிப்பிடுங்கள்
இறுதியாக, மகிந்தவின் சேதாரத்தைவிட ரனில் கொம்பனியின் சேதாரம் TNA யுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதால் ஈடுசெய்ய முடியாத்தாகும்.
எனவே வட கிழக்கு முஸ்லிம்களே நிதானமாக சிந்தியுங்கள். உங்கள் வாக்குகளைTNA யின் செல்வாக்கு இல்லாத கட்சிக்கு போடுங்கள்.

Mr. Lafir. Do you wonna to tell us vote for NPP Hon Anurakumara?

Post a comment