Header Ads



வரலாற்றில் முதல் தடவையாக, கண்டிக்கு அமைச்சர் இல்லை - மிகப்பெரிய அநீதி என்கிறார் கிரியெல்ல

அண்மைய கால வரலாற்றில் முதல் முறையாக கண்டி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பதவி கிடைக்காத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது கண்டி மாவட்ட மக்களுக்கு செய்த மிகப்பெரிய அநீதி எனவும் அவர் கூறியுள்ளார்.

பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் கண்டி மாவட்டத்திற்கு குறைந்தது ஒரு அமைச்சர் பதவியாவது கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் கண்டி மாவட்டத்திற்கு நான்கு அமைச்சு பதவிகள் கிடைத்தன. இதன்மூலம் கண்டி மாவட்டத்திற்கு பெருமளவில் சேவைகளை செய்ய முடிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது அன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த கண்டி மாவட்ட அமைச்சர்கள் ஊடாக கண்டி மக்களின் பிரச்சினை தீர்வுகளை வழங்க முடிந்தது. தற்போதைய அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சிக்கு இல்லாமல் செய்துள்ளது.

முழு உலக பௌத்த மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான நகரம் மாத்திரமல்லாது சுற்றுலா ரீதியாக கவர்ந்த நகரமான கண்டிக்கு இப்படியான அநீதி ஏற்பட்டுள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனடிப்படையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக நியமிக்க வேண்டியவர்களின் பட்டியலில் கெஹெலிய ரம்புக்வெல்ல இருந்தார். எனினும், இறுதி நேரத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.