Header Ads



சஜின் வாஸ் குணவர்தனவின், குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல்

தமக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, இன்று கோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனைவிக்கு அழைப்பு மேற்கொண்டு, பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்குமாறு அச்சுறுத்தியதாக சஜின் டி வாஸ் குணவர்தன குறிப்பிட்டார்.

சில நாட்கள் கழித்து, அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்தும் மொட்டின் எதிர்காலம் குறித்தும் கருத்து தெரிவித்ததால், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது மனைவிக்கு அழைப்பு விடுத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்க சொன்னதாகக் கூறியதாகவும் சஜின் டி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நான் 17 வருடங்கள் அந்தத் தரப்பிலிருந்தேன். 17 வருடங்களாக அந்தத் தரப்பிற்கு சேவையாற்றினேன். பின்னர் அங்கிருந்து வெளியேறி சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுகின்றேன். இதுவே உண்மை. இதனை நான் உங்கள் அனைவருக்கும் வழங்குகின்றேன். கேட்டுப் பாருங்கள்
என குறிப்பிட்ட சஜின் டி வாஸ் குணவர்தன, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி உரையாடலை போட்டுக் காண்பித்தார்.

எனினும், சஜின் டி வாஸ் குணவர்தனவின் ஊடக சந்திப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்று மாலை சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் தாம் வேட்பு மனு வழங்காத ஒருவரே தற்போது இவ்வாறான கருத்தை வௌியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

சஜின் டி வாஸை கொலை செய்ய வேண்டிய தேவை எவருக்கும் இல்லை எனவும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.