Header Ads



பாபரி மஸ்ஜித் வழக்கு - நாளை சனிக்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது


பாபரி மஸ்ஜித் என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை நாளை (சனிக்கிழமை) 09.11.2019 உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ளது.

நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்.

அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 18ம் தேதி புதன்கிழமை முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதுவே இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்காகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்தா பாரதி வழக்கு 68 நாட்கள் நடைபெற்றது. ஆதார் கார்டு தொடர்பான வழக்கு மூன்றாவது நீளமான வழக்காகும். அது 38 நாட்கள் நடைபெற்றது.யார் யார் இந்த அரசியல் சாசன அமர்வில் இருக்கிறார்கள்? இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர்தான் விசாரித்தனர்.

அயோத்தி நிலத்தகராறு வழக்கு நாளை சனிக்கிழமை முதலாவதாக எடுத்துகொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவால் இதனை முடித்து வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று செப்டம்பர் 30, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கைதான் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாநில அரசு அயோத்தியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று இதில் தொடர்புடைய மூன்று தரப்பினருமே நம்புகின்றனர்.

சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் ராமர் ஆலயம் கட்டப் போவதாக பல இந்து அமைப்புகள் வாக்குறுதி அளித்துள்ளன. கட்டப்படவுள்ள கோவிலில் நிறுவுவதற்காக சிற்பங்களைச் செதுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மூன்று தரப்பினரின் விவாதங்களின் அடிப்படையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வு, தீர்ப்பு அளிக்கவுள்ளது.

1949 ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வரும் ராமர் கோவில் - பாபர் மசூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்தத் தீர்ப்பு அமையக்கூடும்.

அரசியல் ரீதியாக மிகவும் உணர்வலைகளை எழுப்பக்கூடியதாக இருக்கும் இந்தச் சர்ச்சையில் மூன்று தரப்பினருக்கு ஈடுபாடு உள்ளது. இரண்டு தரப்பினர் இந்து அமைப்புகளாகவும், மூன்றாவது தரப்பு முஸ்லிம் தரப்பாகவும் உள்ளது.

 முந்தைய படம்Getty Images
நிர்மோஹி அக்காரா என்ற இந்து அமைப்பு 1959ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முஸ்லிம்கள் தரப்பில் சன்னி வக்பு வாரியம் 1961ல் வழக்கு தொடர்ந்தது. ராம் லீலா விரஜ்மன் என்ற இந்து அமைப்பு 1989ல் நீதிமன்றத்தை நாடியது.

மூன்று தரப்பினருமே 2.77 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், அந்த நிலத்தை மூன்று தரப்பினருக்கும் பிரித்துக் கொடுத்தது. ராமர் பிறந்ததாக ராம் லல்லா விர்ஜமன் அமைப்பு குறிப்பிடும் பகுதி அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த இடம் ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த இடமாகும்.

சர்ச்சைக்குரிய பகுதியின் உள்பகுதியாக இது உள்ளது. வெளிப்பகுதி நிர்மோஹா அக்காராவுக்கும், அதற்கும் வெளியில் உள்ள பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் அளிக்கப்பட்டது.

ஆனால், மனுதாரர்கள் மூவருமே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு விசாரணை தொடங்கி 40 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.

ஆனால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சமரச தீர்வுக்கான கமிட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என்று மூன்று தரப்பினரும் கூறுகின்றனர். இப்போது இரண்டாவது சுற்று சமரச முயற்சி குறித்த அறிக்கையை அந்தக் கமிட்டி சமர்ப்பித்துள்ளது. ஆனால், அறிக்கையில் உள்ள விஷயங்கள் பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை. சமரச முயற்சி குறித்த தகவல்களை வெளியிடும் அனுமதியை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. BBC

No comments

Powered by Blogger.