Header Ads



பாதுகாப்பு அமைச்சு, வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மத்தியில் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம். எதிர்வரும் நாட்களில் பாதுகாப்புக் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புடன் இருக்குமாறும், அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதிமேதகு ஜனாதிபதியின் தூர நோக்கிற்கு அமைய இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். மேலும் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.