Header Ads



கோட்டபாயவும், சஜித்தும் ஊழல் செய்தவர்களை தண்டிப்போம் என்று ஒரு வசனம்கூட பேசுவது கிடையாது

தான் ஜனாதிபதியானால் இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சமமான முறையில் பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை உருவாக்குவேன் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, இந்த நாட்டை ஆட்சி செய்த எவராலும் நியாயமான முறையில் சட்டம் செயற்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

அத்துடன், கொள்ளைக்காரர்களிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு எமக்கு ஒருமுறை சந்தர்ப்பத்தை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

புத்தளத்தில்  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எதையும் மிச்சப்படுத்தவில்லை. கடன் சுமை அதிகரித்துவிட்டது. சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டார்கள். அதனுடைய விளைவுகளை மக்கள் இன்னமும் அனுபவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று தமது அரசாங்கத்தில் ஊழல் மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தவர்கள் பெப்ரவரி மாதமே மத்திய வங்கியில் கொள்ளையடித்துவிட்டனர். 

கோட்டபாய ராஜபக்ஷவும், சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொறுப்பேற்றதும் ஊழல் செய்தவர்களை, கொள்ளைக்காரர்களை தண்டிப்போம் என்று ஒரு வசனம் கூட பேசுவது கிடையாது. 

ஏனென்றால், ஊழல் செய்தவர்களை மேடையில் வைத்துக்கொண்டு தண்டிப்போம் என்று அவர்களால் ஒருபோதும் கூறமுடியாது. இரண்டு தரப்பினர்களிடமும் ஊழல் செய்தவர்கள், நாட்டைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டை மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள். 

இலங்கையில் பொலிஸ் திணைக்களம் மிகவும் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், பாதுகாப்பிலும் அரசியல் தலையீடு தலைவிரித்தாடியமையால்தான் இந்த அரசாங்கத்திலும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமாக காணப்பட்டது. 

கொலை, கொள்ளை என்று சகல திருட்டுத்தனங்களையும் மிகவும் கச்சிதமாக கண்டுபிடிக்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் போதைபபொருள் கடத்தல் காரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

கோடிக்கணக்கில் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவருபவர்கள் இன்று அரசியல் பலத்தோடு வெளியே சுதந்திரமாக நடமாடும் போது, அந்த போதைப்பொருளை கொள்வனவு செய்து பாவித்தவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். இன்று பொலிஸாருக்கு சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்காது அங்கும் அரசியல் பலத்தை பிரயோகிக்கிறார்கள். 

அதனால்தான் வசிம் தாஜூதின், லசந்த விக்ரமதூங்க, எக்னலியகொட என்று கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆகவே, இவ்வாறான கொள்ளை மற்றும் கொலைகாரர்களிடமா இந்த நாட்டை மீண்டும் கொடுக்கப்போகிறீர்கள். 

இன்று நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதை விட தங்களையும், தங்களது குடும்ப உறவினர்களையும் எப்படி பாதுகாப்பது என்றே சிந்தித்து மக்களுடைய வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். 

எமது நாடு ஒரு ஏழை நாடாகும். ஆனால், இந்த நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் எல்லோருமே பணக்காரர்களாகும். நாடு ஏழை என்றால் ஆட்சியாளர்கள் எப்படி செல்வந்தர்களாக இருக்க முடியும். உலகில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் காணப்படுகின்றன. ஆனால், அங்குள்ள ஆட்சியாளர்களும் மக்களைப் போன்றே ஏழ்மை நிலையில் வாழ்வார்கள். 

ஆனால், எமது நாட்டைப் பொறுத்தவரையில் அவை அப்படியே தலைகீழாக மாறிப்போயுள்ளது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விலை உயர்ந்த பென்ஸ் ரக கார்களை தமது போக்குவரத்துக்காக பயண்படுத்துகிறார்கள். 

இவ்வாறான அரசியல்வாதிகள் எப்படி பணக்காரர்களானார்கள் என்று தேடிப்பார்த்தால் எமது நாடு எப்படி ஏழை நாடாக மாறியது என்பதை மிகவும் எளிதாக கண்டுகொள்ள முடியும். 

அதுமாத்திரமின்றி, முன்னாள் ஜனாதிபதிகளை பராமறிக்க பல கோடி ருபா செலவு செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் பராமறிக்காது போனால் சமூகப் பாதுகாப்பு நிதியிலிருந்து வயோதிபர்களுக்காக மாதா மாதம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவை எமது அரசாங்கத்தில் பெற்றுக்கொடுப்போம்.

அத்துடன், இந்த நாட்டில் ஒரேயொரு ஜனாதிபதிதான் இருக்கிறார். ஆனால், அலங்கையில் ஏழு, எட்டு ஜனாதிபதி மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு பணியாளர்களை நியமித்து, பாதுகாப்பு வழங்கி பராமறிப்பதற்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால், குறித்த மாளிகைகளுக்கு ஒருநாள் கூட ஜனாதிபதி சென்றிருக்க மாட்டார். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறித்த ஜனாதிபதி மாளிகைள் அனைத்தையும் உல்லாச விடுதிகளாக மாற்றியமைத்து நாட்டுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்போம். 

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் நாட்டுக்கும் பிரயோசனமில்லை, நாட்டு மக்களுக்கும் நன்மையில்லை. எனவே, எங்களிடம் ஒருமுறை ஆட்சியை தாருங்கள். மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் சொகுசாக வாழும் நிலையை நிறுத்துவோம். பொலிஸாருக்கு தேவையான பலத்தை வழங்கி எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி பொலிஸ் திணைக்களத்தை சுயாதீனமாக செயற்பட இடமளிப்போம். மக்களுடைய வரிப்பணத்தை அவர்களின் நலன்களுக்காக செலவு செய்வோமே தவிர, அந்தப் பணத்திலிருந்து ஒரு சதத்தையேனும் திருட மாட்டோம். 

அவர்கள் திருடுவதற்கென்றே அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை மக்களை பாதுகாத்தே வருகிறோம். மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கிறோம். அதனால்தான் நாங்கள் இலங்கையின் எப்பாகத்திற்கும் ஏஜென்ட்டுக்கள் இல்லாமல் பயணிக்கிறோம். ஆனால், அந்த கொள்ளையர்களால் அவ்வாறு பயணிக்க முடியாது. 

(ரஸ்மின்)

No comments

Powered by Blogger.