Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை செயற்பட, அனுமதித்த ஷாணியை உடனடியாக கைது செய்யுங்கள் - மேஜர் அஜித் பிரசன்ன

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து படையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை சிறைக்குத் தள்ளிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷாணி அபேசேகரவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பின் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பினால் கொழும்பில் நேற்று -22- நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமைபுரிந்த ஷாணி அபேசேகர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உதவி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட முதலாவது இடமாற்ற உத்தரவாக இது அமைந்துள்ளது.

இதுகுறித்து தாய் நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பின் இணைப்பாளரான மேஜர் அஜித் பிரசன்ன கருத்து வெளியிடுகையில்,

“மிகவும் துல்லியமான வகையில் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியங்களை ஷாணி அபேசேகர தயாரித்திருப்பதாகவும், அவர் உண்மையான சாட்சியங்களை மறைத்திருப்பதால் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் கூறினார்.

ஷாணி அபேசேகர குற்றவாளி. அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி. எப்படியாவது கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான முழுமையான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் முடியாமற் போய்விட்டது.

சஹ்ரான் தலைமையில் மாவநெல்ல புத்தர் சிலை உடைப்பு, வண்ணாத்திவில்லு, நுவரெலியா போன்ற பகுதிகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதை ஷாணி அபேசேகர அறிந்துவைத்திருந்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் செயற்பட அனுமதித்தவரும் அவர்தான். இறுதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர்தான் அதற்கான முழுப்பொறுப்பாளியாக வேண்டும்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, உண்மையான சாட்சியங்களை மறைத்து, படையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை அவர் சிறைக்குத் தள்ளியுள்ளார்.

எனவே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷாணி அபேசேகரவை கைது செய்யுமாறு” மேஜர் அஜித் பிரசன்ன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.