Header Ads



ராஜகிரிய ரோயல் பார்க்கில், கொலை நடந்தது எப்படி..? ஜனாதிபதி பரிவு காட்டியது எதற்காக..??

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன்  எனும் யுவதியை   கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர கொலை தொடர்பில் குற்றவாளி ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மரண தண்டனை  விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வேறு ஜனாதிபதி மன்னிப்புக்களின்அடிப்படையில்   நேற்று முன்தினம் மாலை அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியேறியதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) பந்துல ஜயசிங்க உறுதி செய்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு ஜனாதிபதியின் பூரண மன்னிப்பு கிடைத்துள்ளது. அதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்' என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்  டி.எம்.ஜே. டப்ளியூ. தென்னகோன் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளில் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் பிரகாரம்,

சுவீடன் தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்த இவோன் ஜெக்சன்  தனது சகோதரி கரோ ஜெக் ஷன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடியில் வசித்து வந்துள்ளார். அப்போது அவர் தனது படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 2015 ஆம் ஆண்டு  கிடைத்த விடுமுறையை அடுத்து இங்கிலாந்துக்கு சென்று அங்கு குடும்பத்தாருடன் உல்லாசமாக இருந்த பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.இவோன் அமெரிக்காவிலிருந்த காலப்பகுதியில் இலங்கையில் தனிமையிலிருந்த அவரது சகோதரி கெரோ, இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்ற வேளைகளில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது அதன் பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

 இந் நிலையிலேயே சம்பவ தினமான 2005 ஜூன் 30 ஆம் திகதி, ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ, கெரோ மற்றும் இவோன் ஜெக்சன் ஆகிய மூவரும்  குளோ இரவு களியாட்டம் என அறியப்படும்  விஷேட களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.

 ராஜகிரிய ரோயல் பார்க் தொடர்மாடியிலிருந்து இவோன் ஜெக்சனும் கெரோவும்  தமது ஜீப் வண்டியில் முதலில் பகதலே வீதியிலுள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் வீட்டுக்கு சென்று ஏற்கனவே மூவரின் திட்டத்துக்கும் அமைய அவரையும் அழைத்துக்கொண்டு  குறித்த களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.  குளோ களியாட்ட நிகழ்வுக்கு செல்லும் வழியில் அவர்கள் முதலில் வைட் ஹவுஸ் பப் எனும் களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இவோன் கெரோனே ரக பியர் பானத்தையும்,  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ டிகிலா ரக மதுபானத்தையும் கெரோ லோங் ஐலன்ட் ஐஸ் டீ எனும் பானத்தையும் அருந்தியுள்ளனர்.  அதன் பின்னர் அங்கிருந்து இரவு 10.00 மணியளவில்  குளோ களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளனர். குறித்த களியாட்ட விடுதியில், ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு விசேடமாக தனிப்பட்ட லொக்கொர் ஒன்று இருந்துள்ள நிலையில் அதிலிருந்த வொட்கா ரக மதுபானத்தை உதவியாளர் ஊடாகப் பெற்று அங்கு மூவரும் அருந்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மூவரும் அங்கிருந்து வெளியேறி  இரவு 11.30 மணியளவில் ஹில்டன் ஹோட்டலின் புளூ எலிபன்ட் இரவு களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கும் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு இரகசிய லொக்கர் இருந்துள்ள நிலையில் அதிலிருந்த பகாடி ரக மதுபானத்தைப் பெற்று அதனையும் மூவரும் அருந்தியுள்ளனர்.அதன் பின்னர் நள்ளிரவு வேளையில் குளோ களியாட்டத்துக்கு அதிகமானவர்கள் வருவார்கள் என்பதால் மீண்டும் அங்கு செல்ல இவோன் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி அங்கு செல்ல மூவரும் ஹில்டனிலிருந்து வெளியேறியுள்ளனர். குளோ களியாட்ட விடுதியை அடைந்தபோது அங்கு பவித்ர என்ற  நண்பரை கெரோ காணவே அவருக்கு ஹாய் கூறியுள்ளார். இது அப்போது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அதனை மையப்படுத்தி கெரோவுக்கும் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கும் சண்டை வந்துள்ளது. இதன்போது தனது தங்கையுடன் சண்டை பிடிக்க வேண்டாம் என இவோன் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு கூறியுள்ளார். இந்நிலையில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ தனது காதலி கெரோவுடன் குளோ  களியாட்டத்தில் இருப்பதை தவிர்த்து இருவருமாக ராஜகிரிய  ரோயல் பார்க்கிலுள்ள கெரோவின் வீட்டுக்கு வாடகை கார் மூலம் வந்துள்ளனர். இவோன் தனது கொரிய நாட்டு தோழியுடன் குளோ களியாட்டத்தில் இருந்துள்ளார்.

 இந்நிலையில் ராஜகிரிய  ரோயல் பார்க்  சொகுசு தொடர்மாடி குடியிருப்புக்கு வந்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ, கெரோவை அவரது படுக்கை அறையில் விட்டுவிட்டு சிகரட் ஒன்றினையும் புகைத்தவாறு வெளியேறியுள்ளார். கெரோ, தமது சமையலறையில், வந்தவுடன் எழுப்பவும் என தனது சகோதரி இவோனுக்கு புரியும் படியாக எழுதி வைத்துவிட்டு உறக்கத்துக்கு சென்றுள்ளார்.

  இந்நிலையில் சிகரட்டை புகைத்தவாறு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அந்த தொடர்மாடியின் 23 ஆம் மாடிக்கு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கீழ் நோக்கி செல்ல மின் தூக்கியின் உதவியை நாட  மின் தூக்கி பகுதிக்கு சென்றுள்ளார்.

 அப்போது, நேரம் அதிகாலை 2.00 மணியையும் தாண்டி இருந்துள்ளது. ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கீழ் நோக்கி செல்ல முற்பட்ட வேளை மின் தூக்கில் இவோன் தனது குடியிருப்பு நோக்கி செல்ல வந்துள்ளார். அப்போது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவை கண்டுள்ள இவோன், நீ என் தங்கையின் வாழ்வை அழித்துவிட்டாய் என கோபமாக கத்தியுள்ளார். இதன்போது கோபமடைந்துள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ இவோன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

 அந்த தாக்குதலிலிருந்து தப்ப இவோன் 23 ஆம் மாடியிலிருந்து படிக்கட்டு வழியே 20 ஆம் மாடிவரை ஓடியுள்ளார். துரத்திச் சென்றுள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ 20 ஆவது மாடியில் வைத்து இவோனை அவரது கூந்தலின் உதவியுடன் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று படிக்கட்டுக்களில் அவரது தலையை மிக வேகமாக பல சந்தர்ப்பங்களில் மோதியுள்ளார். மரண பரிசோதனை அறிக்கை பிரகாரம் இவோனின் மண்டை ஓடு 64 இடங்களில் நொருங்கியுள்ளதாக நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 பின்னர் இவோன் அப்போது அணிந்திருந்த காற்சட்டையை கழற்றி, அதன் கால்ப் பகுதி இரண்டையும் கழுத்துக்கு குறுக்காக போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதனையடுத்து அவரை கோபமாக உருட்டவே இவோன் 19 ஆவது மாடியில் வந்து விழுந்துள்ளார். இதனையடுத்து ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அருகே சென்று பார்த்தபோதே இவோன்  உயிரிழந்துள்ளமையை உணர்ந்து, உடனடியாக  தனது நண்பர் ரில்வானுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி தான் ரோயல் பார்க்கில் உள்ளதாக கூறி அழைத்துச் செல்ல வருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து ரில்வான் அங்கு அதிகாலை 3.45 மணியளவில் வந்துள்ளதுடன்  அவருடன் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அங்கிருந்து சென்றுள்ளார்.

 இந்த பின்னணியிலேயே இக்கொலை தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான தற்போதைய பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷனை அபேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அவரது விசாரணையின் பிரகாரம் மேற்படி விடயங்கள் கண்டறியப்பட்டு நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இக்கொலையை பார்த்த சாட்சியங்கள் இல்லாமல் இருந்த நிலையில் சந்தர்ப்ப மற்றும் அறிவியல் தடயங்களில் இவ்வழக்கு தங்கியிருந்தது.

 கொலை இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் மேர்வின் சமரசிங்க, சடலம் இருந்த இடத்துக்கு அருகே இரத்தத்தில் பதிந்த கையச்சு ஒன்றினை அடையாளப்படுத்தியிருந்தார். அந்த கை அச்சில் பதிவான கைவிரல் ரேகைகளை  பகுப்பாய்வு செய்தபோது அது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் ரேகை என உறுதியானதுடன் இரத்தமானது  கொலை செய்யப்பட்ட இவோனினுடையது என டி.என்.ஏ. பரிசோதனை ஊடாக உறுதியானது.

 இந்நிலையில் குறித்த விவகாரம் அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஐ.எம். அபேரத்ன முன்னிலையில்  விசாரிக்கப்பட்டது. இதன்போது சட்ட மா அதிபர் சார்பில்  அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலான தற்போதைய பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இவ்வழக்கை கையாண்டிருந்தார்.  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  தயா பெரேரா ஆஜராகியிருந்தார்.

 இவ்வழக்கு விசாரணைகளின்போது 48 சாட்சியாளர்கள் மற்றும் 51 ஆவணங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில், 2012 ஆம் ஆண்டு குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த கொலை திட்டமிட்ட கொலை அல்ல என தீர்மானித்திருந்த மேல் நீதிமன்றம் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்தும் மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்திருந்தது.

 இந் நிலையில்  தீர்ப்புக்கு எதிராக  தன்னை விடுவிக்குமாறு கோரி ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ சார்பிலும், தண்டனை போதாது எனக் கூறி சட்ட மா அதிபர் சார்பிலும் இரு மேன் முறையீடுகள் மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன. இதில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் சார்பில் அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரிய முன்வைத்த மேன் முறையீட்டுக்கு அமைவாக 2012 ஜூலை 11 ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்பட்டது. அதன்படி  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

 மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றின் தீர்ப்பை மாற்றி இவ்வாறு மரண தண்டனை விதிக்கும்போது, இந்த கொலை திட்டமிட்ட கொலைதான் எனவும் உறுதி செய்திருந்த நிலையில் இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பதிவானது. மேல் நீதிமன்றுக்கு மட்டுமன்றி மேன் முறையீட்டு நீதிமன்றுக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்க முடியும் என இதனூடாக உறுதி செய்யப்பட்டதே அதற்கான காரணமெனலாம். இதனையடுத்து  மரண தண்டனை கைதிகளுக்கு உரிய  உரிமைகளின் அடிப்படையில், அந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விசேட மேன் முறையீடு செய்யப்பட்டது.  அந்த மேன் முறையீட்டை  2013 ஒக்டோபர் 22 ஆம் திகதி நிராகரித்த உயர் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றின் மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து 2014 ஜூன் 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி  பத்மினி ரணவக்கவினால் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு எதிரான உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது.

 அது முதல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி  பொது மன்னிப்பின் கீழ் குறித்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையிலேயே மீண்டும் நேற்று முன்தினம் மற்றொரு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

 இந்த மன்னிப்பு அளிக்கப்பட சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி இது குறித்து பிரசித்தமாக மேடையொன்றில் கூறியதை அடுத்து பல விமர்சனங்களும்  எழுந்திருந்தன.

' பொறுமை இல்லாதபோது நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது.   இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.   அந்த இளைஞருக்கு அப்போது 19 வயதுதான்.  அவர்  குறித்த யுவதியுடன் வாக்குவாதப்பட்டு பின்னர் அவளை கொலை செய்துள்ளார்.   அந்த இளைஞன் இப்போது கலாநிதி பட்டப்படிப்பொன்றினையும் பூர்த்தி செய்துள்ளார்.   நான் நினைக்கின்றேன் இப்போது அவருக்கு 32 வயது ஆகிறது ' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இளைஞர் விவகார மாநாடொன்றில் உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் முதன் முதலாக ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராய்வதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அரசியலமைப்பின் 34 ஆவது  அத்தியாயம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

 அரசியலமைப்பின் 34 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய  இலங்கையில் எந்தவொரு நீதிமன்றினாலும் குற்றவாளியாக காணப்படும்  ஒருவருக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

குறித்த குற்றவாளிக்கு பூரண மன்னிப்பா அல்லது  நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பா என்பதை ஜனாதிபதிக்கு தீர்மானிக்க அரசியலமைப்பு அதிகாரமளித்துள்ளது.

எவ்வாறாயினும் மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு அல்லது ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியுமா என்பது குறித்து அரசியலமைப்பின் 34 (ஈ) உறுப்புரைக்கு அமைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி அவ்வாறான நபர் ஒருவரை விடுவிக்க முன்னர் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறவேண்டும்.  அந்த அறிக்கை ஜனாதிபதியின் கைக்கு கிடைத்த பின்னர் அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரும் போது,  குறித்த ஆலோசனையை நீதி அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரிடம் குறிப்பிட்டே அனுப்பப்படல் வேண்டும். அதன் பின்னர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் தமது பரிந்துரைகளையும் உள்ளடக்கி அதனை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பார். அதன் பின்னரேயே மரண தண்டனைக் கைதி தொடர்பில் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்குவதா இல்லையா என முடிவெடுக்க முடியும்.

 எவ்வாறாயினும் இங்கு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி  பொது மன்னிப்பின் கீழ் முதலில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளமையும், அதன் பின்னர் நேற்று முன்தினம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)


3 comments:

  1. தாயை இழந்து,தந்தையையும் பிரிந்து வாழும் அந்த “ஆனந்த சுதாகரின்” இரு சிறு பிள்ளைகளுக்காக ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்க ஏன் முடியாது.

    ReplyDelete
  2. இருக்கிற குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க நம்ம ஜனாதிபதி திட்டமிட்டு இருப்பாரு போல அதுதான் பெரிய டீல் ஒன்றை முடிச்சு இருப்பாரு

    ReplyDelete

Powered by Blogger.