Header Ads



பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநாகர சபையின், முன்னாள் பிரதி மேயருமான எம்.எம்.எம் றமீஸ்

- பரீட் இக்பால் -

இவரது தந்தை முஹம்மது ராஜா யாழ் மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தந்தை வழியில் இவரும் யாழ் மாநகர சபையின் பிரதிமேயர் பதவியை அலங்கரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் முஹம்மது ராஜா என்றழைக்கப்படும் முஹம்மது மீரா ஸாஹிப்- மரியம் தம்பதியினருக்கு 1965ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி மகனாக றமீஸ் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியிலும் உயர்கல்வியை சென். ஜோன்ஸ் கல்லூரியிலும் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்று இலங்கை சட்டக்கல்லூரியில் கற்று 1996 இல் சட்டத்தரணியாக விளங்கினார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இவர் கல்வி கற்கும் காலத்தில் துலிப் ஜயவீர அவர்களை சட்ட பீட மாணவர் தலைவராக தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்தார். இதன் பிரதிபலனாக இவர் 1991 இல் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தொழுகை அறையை அமைத்து கொடுத்தார். இன்றும் தொழுகைக்காக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இவர் ஸலாம்ஸ் றாஸீக்- மதீஹா தம்பதியினரின் மகள் நிஸ்மியை 1997 இல் திருமணம் செய்தார். றமீஸ்- நிஸ்மி தம்பதியினருக்கு முத்தான இரண்டு ஆண் பிள்ளைகள். ஆதில் அஹமட் சட்டமாணி பட்டப்படிப்பை (எல். எல். பி) முடித்து விட்டு தற்போது கொழும்பு சட்டக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டு இருக்கிறார்.     

சாபித் அஹமட் ஜேர்மனியில் அரச பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார். 

இவர் கல்வி கற்கும் காலத்திலிருந்தே தந்தையைப் போன்று சமூக சேவையில் ஈடுபாடு உடையவராக காணப்பட்டார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் மன்றத்தில் செயலாளராக செயற்பட்டார். யாழ் முஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம், சமூகக் கல்வி அமைப்பு, யாழ் முஸ்லிம் நிபுணத்துவ அமைப்பு போன்றவற்றில் தலைவராகவும் செயலாளராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பில் நீண்ட காலம் அங்கத்தவராக இருந்து அமைப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அமைச்சர் றிஸாத்- பதியுத்தீன் அவர்களின் தலைமையில் செயற்பட்ட வடக்கு முஸ்லிம்களின் சமாதான செயலகத்தின் சட்டப்பணிப்பாளராகவும் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் யாழ் மாவட்டத்தின் திட்டமிடல் இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் யுத்த சூழ்நிலை முடிவுக்கு வந்தபோது 2009 இல் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இளம் வழிகாட்டியாக அரசியலில் இணைந்து யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் உதவி மேயராகவும் பதவி வகித்து மக்களுக்கு எந்த வித குறைகளுமின்றி சேவையாற்றினார். மீள் குடியேற்ற அமைச்சின் கீழும் யாழ்.மாநகர சபையிலும் சமுர்த்தி வேலைத்திட்டத்திலும் பல வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1990 ஒக்டோபர் 30 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தொலைக்கப்பட்ட புலிகளால் கிழித்தெறியப்பட்ட உறுதிகள் உட்பட கிட்டத்தட்ட 1000 இற்கும் மேற்பட்ட ஆவணங்களை தேடிக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி மீள திறப்பதற்கு அரும்பாடுபட்டார். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றிலேயே முதன்முதலாக மகளிர் அரபுக் கல்லூரியை அல் ஹம்திய்யா மகளிர் அரபுக் கல்லூரியை தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2009, 2010 காலகட்டத்தில் இவர் மீள்குடியேறிய யாழ் முஸ்லிம்களுக்கு தனவந்தர்களின் ஆதரவில் 11 வீடுகள் புணரமைத்து கொடுத்தார். மேலும் எம்.எப்.சி.டி நிறுவனத்தின் மூலமும் இவர் செயற்குழுவில் ஒருவராக இருந்து முழுதான 9 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு முன்னின்று உழைத்தார். இவர் பெரிய பள்ளிவாசல் நயினாதீவு பள்ளிவாசல், கோட்டை பள்ளிவாசல் ஆகியனவற்றின் புனர்நிர்மாண வேலைகள் பராமரிப்பு ஆகியவற்றையும் பொறுப்பெடுத்து நன்றாக செயற்பட்டார்.

இவர் அமைச்சர் றிஸாத் பதியுதீன் அவர்களின் ஆதரவில் நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி, போருத்தோட்ட அல்பலாஹ் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு கல்லூpகளுக்கும் 600,000 ரூபா பெறுமதியான தளபாட தொகுதியையும் கொடுத்து உதவினார். மேலும் பாணந்துறை, பலகத்துறை ஆகிய இரு ஊர்களிலும் 40 இளம் யுவதிகளுக்கு தையல் பயிற்சியும் தையல் இயந்திரங்களும் பெற்றுக் கொடுத்தார். 

இவர் நீர்கொழும்பு பெரியமுல்லை ஜூம்ஆ பள்ளிவாசல், நீர்கொழும்பு டவுண் ஜூம்ஆ பள்ளிவாசல் பலகத்துறை ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கும் சட்ட ஆலோசகராக செயற்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.   

சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பு (ஸெடோ) 2003 இல் ஆரம்பித்து இவர் தலைவராகவும் அஜ்மல் மொஹிடீன் காரியதரிசியாகவும் ஜினூஸ் சுல்தான் பொருளாளராகவும் இருந்து இன்று வரை சிறப்பாக இயங்கி வருகின்றது. ஸெடோ அமைப்பின் மூலம் புத்தளம் ரத்மல்யாய பகுதியில் 5 ஏக்கரில் பள்ளிவாசல், மையவாடி, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைத்து ஒஸ்மானியா காடின் என பெயரும் இட்டு அவ்வமைப்பில் தலைவராக இருந்து நன்றாக செயற்படுகிறார்.

ஜே.எம்.ஏ (லண்டன்) அமைப்பின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட்ட இவர் அந்த அமைப்பினூடாக யாழ்.ஒஸ்மானியா கல்லூரி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுத்தார். மேலும் 2013 இல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இவர் உதவினார்.

இவர் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த தூதுவர்களை (அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான்) யாழ் முஸ்லிம் வட்டாரத்திற்கும் அழைத்துச் சென்று யாழ் முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சினைகளை எடுத்துரைத்து அறியப்படுத்தியதுடன் சில உதவிகளையும் பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இவர் 2011இல் புலம்பெயர்(லண்டன், பிரான்ஸ்) யாழ் முஸ்லிம் சகோதரர்களை சந்தித்து மீள்குடியேற்றம் சம்பந்தமான உரைகளை நிகழ்த்தியுள்ளார். சட்டத்தரணி எம்.எம்.எம்.றமீஸ் அவர்களின் சமூக சேவை ஆயுள்வரை நீடிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

1 comment:

  1. Dear Admin: My great salute and heart wishes thanks for you all to updated such nice story of Legends of our community those who did great social service this country most of this respectable legends born in JAFFNA MOOR st.I am so exciting to know more story of many legendary peoples I hope that you will update the story of them everyday. JAFFNA is only the place where I didn't visit yet in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.