November 03, 2019

'குறைந்த தீமையினை தேர்ந்தெடுப்போம்' என்ற நிலைப்பாடா முஸ்லிம்களுடையது...??

மூன்று முன்னணி வேட்பாளர்களை பற்றிய குறிப்புகளை பதிந்துவிட்டு மெளனமாக இருக்கலாமென்றால், தேர்தல் கள நகர்வுகள் இந்த குறிப்பை எழுத உந்துகின்றன.
தமிழ் மக்கள் தெளிவான முடிவோடு இருக்கிறார்கள்.
வாக்களிப்பை பகிஸ்கரிக்கும் கோரிக்கை தமிழ் தரப்பின் பேராதரவை பெற்ற கட்சிகளால் விடுக்கப்படவில்லை. அதுவே பெருத்த ஆறுதலாகும்.
நேற்றைய கூட்டத்தில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எட்டப்படாத போதும் இன்றைய தபால் வாக்களிப்பில் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு வாக்களிக்குமாறு அவர்கள் தமிழ் மக்களை கேட்டுள்ளனர்.
விக்னேஸ்வரன் ஐயா கடந்த கால வரலாறுகளோடு ஒப்பிட்டு, அலசி ஆராய்ந்து வாக்களிக்குமாறு கோரியிருக்கிறார்.
ஏலவே முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சிகளின் தலைவர்கள் ஒரு பக்கம் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
கடந்த தேர்தலை போலவே , இந்த தேர்தலும் ‘குறைந்த தீமையினை தேர்ந்தெடுப்போம்’ என்ற முடிவிற்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் தள்ளி விட்டிருக்கிறது.
வெற்றிவாயப்புகளை பெறச்சாத்தியமான வேட்பாளர்களின் மீது நம்பிக்கையிழந்து 
தோழர் அனுர குமாரவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் முன்னே ‘தார்மீக கடப்பாடொன்று’ இந்த சூழ்நிலையில் தவிர்க்க இயலாமல் எழுந்து நிற்கிறது.
அதுதான் நமது இரண்டாவது தெரிவை நமது சமூகங்கள் சார்ந்து நிற்கும் வேட்பாளருக்கு வழங்கும் நிர்ப்பந்தமாகும்.
நாம் ஒன்று பட்டால் பொது எதிரியை வெல்ல முடியும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பார்த்தோம்.
நாம் பிரிந்து விட்டால் தோல்வியடைவோம் என்பதை கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் கண்டோம்.
காத்தான்குடி நகர சபை தேர்தல் முடிவுகள் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
துரதிஷ்டவசமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டிய அணிகள் இருவேறாக உடைந்து நிற்கின்றன.
இந்த தவறிப்போன வாய்ப்பிற்கான பிராயச்சித்தம் இன்னும் நமது கைகளில்தான் இருக்கிறது. அது நழுவிவிடவில்லை.
பெருந்தவறை இழைத்திருக்கிற இந்த இரண்டு கட்சிகளும் இதனை வெளிப்படையாக மக்கள் மத்தியில் சொல்லப்போவதில்லை.
நாம்தான் அதனை தீர்மானிக்க வேண்டும்.
‘அதுதான் கொள்கைக்கு முதல் வாக்கு, தற்பாதுகாப்பிற்கு இரண்டாவது வாக்கு.’
இதைத்தவிர சிறுபான்மையினங்களின் ‘மூன்றாவது சக்தி’ ஆதரவாளர்களுக்கு வேறு சாதுர்யமான தெரிவுகள் எதுவுமில்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிரயமாகும்.

Mujeeb Ibrahim

4 கருத்துரைகள்:

மாற்றுச் சக்தி, கொள்கைக்கான வாக்கு என்பதெல்லாம் இந்தத் தேர்தலுக்குப் பொருந்தாது. நாடு மீண்டுமொரு இனவாத யுத்தத்தினுள் வலிந்து தள்ளப்படுவதைத் தவிர்ப்பதே தார்மீகக் கடமையாகும் என்றே கருதுகின்றேன். இவ்விதமிருக்க சில தனிநபர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசத்தையே படுகுளியில் தள்ள முற்படுவது வரலாற்றுத் துரோகமாகும்

தெளிவு படுத்த படவேண்டிய சிறந்த கருத்துக்கள் முஸ்லிம்கள் சிந்தித்து நடந்து கொண்டால் நல்லது

இரண்டு கட்சிகளையும் புரந்தள்ளி புதிய NPP (Anura Disanayake) அனுர எமது வாக்குகளை செலுத்தி எதிர்கால சந்ததிக்கு நல்லது செய்வொம்

Post a Comment