Header Ads



மைத்திரியை சபாநாயகராக்க முயற்சியா...?

சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்திருந்தன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமர் வேட்பாளராகவும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முற்றாக மறுத்துவந்தனர்.

இந்நிலையில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் இடம்பெற்ற பல சுற்று பேச்சுவார்தைகளில் இறுதிப்பேச்சுவாரத்தையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கெளரவமான பதவியொன்றை வழங்குவதற்கு பேச்சுவார்தையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதிப்பிரதமர் பதவி போன்ற கெளரவமான பதவி வழங்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலே தற்போது புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ் தெரிவுசெய்யப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ் தெரிவாகியிருக்கின்றார். அடுத்திருக்கும் சபாநாயகர் பதவிக்கு சமல் ராஜபக்ஷ்வை நியமிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், அவர் நேற்று அமைச்சுப்பொறுப்பை பெற்றுக்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் இருந்து தெரிவிக்கப்பட்டுவருவதாகவும் அதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவும் கட்சி நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் நோக்கிலே, கடந்த அரசாங்கத்தில் ஆளும் கட்சிக்கு தாவிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியகுழு எடுத்திருந்தது. அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஆளும் கட்சிக்கு மாறிய ஏ.எச்.எம். பெளசியின் கட்சி உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியகுழு நேற்று முன்தினம் திடீரென தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.