Header Ads



வெற்றி பெறுபவரைக்கொண்டு நாடும், சமூகமும் சுபீட்சம்பெற இறைஞ்சுவோம்.

இலங்கை நாட்டின் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவச் சூடு ஜனாதிபதி தேர்தலுடன் நின்று தணியுமா அல்லது அடுத்தடுத்து தொடரவுள்ள தேர்தல்கள்வரை அடங்காமல் தொடருமா என்பதை இம்முறை அனுமானிக்க முடியவில்லை.  முக்கியமான அரசியல் கட்சிகள் வெற்றியை பெரும்பலத்துடன் தமதாக்கிக்கொள்ள கங்கணம் கட்டிவருகிறது. இம்முறையும் முஸ்லிம்களின் வாக்குப்பெட்டி யார்பக்கம் சரியப்போகிறது என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்கள் பிரதான பெரும்பான்மைக் கட்சிகளுக்கே என்றும் வாக்களித்து வந்துள்ளனர். அக்கட்சிகளில் எவருக்கு  வாக்களித்தாலும் அக்கட்சியின் தலைவர் ஒரு சிங்கள பெளத்தர் என்பதை பெரும்பான்மையினரும் நம்மவர்களும் மறந்தநிலையில் ஒவ்வொரு தேர்தலும் நம்மைக்கடந்து செல்கிறது.

முஸ்லிம்கள்; தான் விரும்பும் கட்சிக்கு / வேட்பாளருக்கு வாக்களிப்பது கட்டாயமாகும். எனினும் பிரதான கட்சிகளுக்கிடையிலான போட்டியில் நமது சமுகம் பலிக்கடாவாக ஆகிவிடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் கவனமாயிருத்தல் வேண்டும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எது செய்தாலும் (வேண்டுமென்றே) தவறாகப் பார்க்கப்படும் / புரிந்துகொள்ளப்படும் காலம் இது!  எனவே இம்முறை தாம் வாக்களித்த அல்லது தன்னைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் கட்சி வெற்றிபெற்றால் கடந்தகாலங்கள் போல் பட்டாசு கொழுத்தி பாற்சோறு பங்கிட்டு பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது சாலச்சிறந்ததாகும்.

மறுபுறம் தோல்வி கண்டவர்கள் தாம் தோற்றாமைக்கான காரணத்தை கண்டறிவதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து; தாம் தோற்றத்தில் முஸ்லிம்கள் வெற்றிக்களிப்பில் மகிழ்ந்து திளைக்கிறார்கள் எனப் பழிதீர்க்கும் படலத்தை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடக்கூடாது. இவ்விடயத்தில் நாம் மிகவும் கவனமாகவும் முன்யோசனையுடனும் நடந்துகொள்ளுதல் வேண்டும்.

முஸ்லிம்கள் (முக்கியமாக முஸ்லிம் என்ற அடையாளத்துடன்) வெற்றிக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது, வாகனப் பேரணிகளில் பயணிப்பது, முஸ்லிம்களின் ஊர் மத்தியில் பட்டாசு கொழுத்தி பவனிவருவது மற்றும் பேஸ்புக்கில் அவைகளைப் பதிவிடுவது அல்லது வீரவசனம் எழுதுவது போன்றவைகளை முற்றாகத் தவிர்ந்துகொள்வோம்.

இது நம்மைக் கோழைகளாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு காரியமாகக் கருதாது நாம் நாமாக இருக்க நம்மவர்கள் மேற்கொள்ளும் ஒரு கைங்கரியமாகக் கருதவேண்டும்.

யார் வென்றாலும் யார் தோற்றாலும் எமது கொண்டாட்டங்களால் நமது சமூகத்தை திண்டாட வைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். மற்றும் வாக்களிப்பது முதல் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்துக்கும் இறைவனிடம்  கேள்வி இருக்கிறது என்பதையும் மறக்காது நாம் பக்குவமாக நடப்போம்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமான ஒரு தலைவரை நமக்குத் தருமாறு இறைவனை இறைஞ்சுவோம். வெற்றி பெற்றவரைக்கொண்டு நாடும் சமூகமும் சுபீட்சம் பெற மீளவும் இறைஞ்சுவோம்.

வல்லவன் அல்லாஹ் தேர்தலில் வெற்றிபெறும் நபரைக்கொண்டு மிகமிக நல்லதொரு ஆட்சியை நல்குவானாக!

ரிஸ்வான் எம் உஸ்மான்

No comments

Powered by Blogger.