Header Ads



விலக மறுத்த சுசில், வீடியோவை காட்டி அச்சுறுத்திய மகிந்த - சஜின்வாஸ் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தாம் நேற்று வெளியிட்ட கருத்தை முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்றையதினம் தனக்கு எதிராக வெளியிட்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட கருத்தானது தான் போலியாக வெளியிட்டிருக்கும் கருத்து என ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்துள்ளதாக சஜின்வாஸ் குணவர்தன குறிப்பிட்டார்.

தாம் முன்வைத்துள்ள ஒரு பிரச்சினைத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அருகதை சுசில் பிரேமஜயந்துக்கு கிடையாது என சமூக வலைத்தளங்கள் ஊடாக சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சுசில் பிரேமஜயந்த அமைச்சராக பதவி வகித்த காலத்தில் என்ன செய்தார் என்ற விடயம் குறித்து தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் அங்குமிங்கும் கட்சித் தாவி திரிந்த ஒருவர் தம் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்.

சுசில் பிரேமஜயந்த இலங்கை பெற்றோலிய அமைச்சராக இருந்த போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பலவந்தமாக அவரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு தெரிவித்திருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் பதவி விலக முடியாது என தெளிவாகக் கூறியிருந்தார். அப்போது நானும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவருடைய அமைச்சுக்கு சென்று அவருக்கு ஒரு வீடியோவை காட்டினோம்.

அதைப் பார்த்த அவர் பதறிப்போய் பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார். அந்த விடயம் இன்னும் அவருக்கு நினைவிருக்கும் என நான் நினைக்கின்றேன். அதேப்போல அந்த வீடியோ காட்சி அச்சமயமே மகிந்த ராஜபக்ச எனக்கும் வழங்கியிருக்கின்றார்.

ஒருவர் மீது சேறு பூசுவதற்கு நான் விரும்பவில்லை. அதே சமயம் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள ஒரு மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் நான் அதை பெரிதாக்காமல் ஒதுங்கியிருக்கின்றேன்.

தொடர்ச்சியாக எம்மீது தேவையற்ற அழுத்தங்களை சுசில் பிரேமஜயந்த் செலுத்துவாராயின் அந்த வீடியோ காட்சியை என்னால் தேடிப்பிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.

அதேபோல இன்னுமொரு காரணத்தை அவர் குறிப்பிட்டிருந்தார் கடந்த பொதுத்தேர்தலின்போது எனக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அனுமதியை இரத்து செய்வது தாமே என.

அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கான காரணமாக நான் சிறைக் கைதியாக இருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் என்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றமானது என்னுடைய பாதுகாப்பு பிரிவினர் முறைகேடாக ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை உபயோகித்ததே ஆகும்.

அவர்களுடைய அந்த கூற்றை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இதுவரையிலும் இந்த விடயம் குறித்து நான் பேசவில்லை. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நான் கூறுகின்றேன். இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் கூட அந்த சந்தர்ப்பத்தில் சிறைக்கைதியாகத்தான் இருந்தார்.

ஆனால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றமானது ஜனாதிபதி பங்கேற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை முயற்சி செய்தமை ஆகும்.

கொலைக்குற்றவாளிக்கு வேட்புமனு தாக்கல் அனுமதி வழங்கினார்கள். ஆனால் வாகனத்தை தவறாக பாவித்ததாக கூறப்பட்ட எனக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதியளிக்கப்படவில்லை. இது நியாயமா?

அத்தருணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட குழுவினர் சிறைச்சாலைக்கே சென்று வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

அப்படியென்றால் ராஜபக்ச தரப்பில் கொலையாளிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது என்று இதிலிருந்து உறுதியாகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.