Header Ads



பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் சஜித், இலங்கை முஸ்லிம்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுக் கொடுப்பார் - இம்தியாஸ்

அமரர் ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில், பலஸ்தீனுடன் இலங்கைக்கு மேம்பட்ட உறவு இருந்ததுடன்,  இலங்கை முஸ்லிம்களும் அவரை பெரிதும் விரும்பும் நிலை காணப்பட்டது.  இலங்கை முஸ்லிம்கள் நிம்மதியான வாழ்வையும் வாழ்ந்தனர். அவ்வாறான ஒரு பொற்காலம் மீண்டும் ஏற்பட முஸ்லிம்கள் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசாவுக்கு தமது வாக்குகளை அள்ளி வழங்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது;

முஸ்லிம்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்தான் அதுவாகும். நாட்டை வழிநடாத்த ஒரு இளம் இரத்தம் தேவைப்படுகிறது. மதவாதமும், இனவாதமும் அற்ற சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் திறன் படைத்தவராகவும் அவர் விளங்க வேண்டும்.

அந்தத் தகுதிகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசாவுக்கு உள்ளது. எனவே நாட்டு முஸ்லிம்களுடைய தெரிவாகவும் இவரே அமைய வேண்டும்.

இனவாதத்தை தமது முதலீடாக பயன்படுத்துகின்ற, தரப்பினரின் பசப்பு வார்த்தைகள், போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும்.

கடந்த ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலங்களை நாம் நோக்குகையில், அமரர் ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சிக்காலம் முஸ்லிம்களை பொருத்தமட்டில் ஒரு பொற்காலமாகும். 

அவர் அநீதிக்கு உட்படுத்தப்பட்ட பலஸ்தீனுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை இழுத்து மூடினார். சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களுடனும், முஸ்லிம் நாடுகளுடனும் நெருக்கமான உறவை கட்டியழுப்பினார்.

தந்தையைப் போன்றே செயற்படும் அவரது புதல்வர் சஜித் பிரேமதாசா, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அந்த பொற்காலம் மீண்டும் உதயமாகும்.

கடந்த ஆட்சியாளர்களின் முழுக் குடும்பமும், இஸ்ரேலுக்குக்கூட பயணங்களை மேற்கொண்டதை நாம் அறிந்திருக்கிறோம்.

இந்தநிலையில் தற்போது முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டிய நேரமாகும் இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு உள்ளன. நாம் அனைவரும் தவறாது வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

எமது ஜனாதிபதி தெரிவானது எமது சமூக நலன் கருதியதாக எமது நலன்களை பேணுவதாக ஐக்கியமான நாட்டிலே சமத்துவமாக நிம்மதியாக வாழத் தக்கதாக அமையப்பெற வேண்டும்.

முஸ்லிம்கள் தன்னை கைவிடமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கை சஜித் பிரேமதாசாவுக்கு உள்ளது. தன்னை ஜனாதிபதியாக ஆக்குவதில் முஸ்லிம்களின் வாக்குகள் மிக முதன்மையானதாக விளங்குமென அவர் நம்புகிறார்.

எனவே அந்த பொற்காலம் மீண்டும் மலர, சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய முஸ்லிம்கள் அனைவரும் அணிதிரள்வோம் எனவும் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொறுத்திருந்து பார்ப்போம் - இந்த சுரைக்காயும் கறிக்குஉதவுமா என்று
    இவருக்கு பின்னாலும் -இனவாதிகளின் உருவகம் ரத்னா நாயக்கரும் , பாட்டாளி சம்பிக்கையும் - இன்னும் சில அமைச்சர்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    அவர்களை மீறி இவரது நடவடிக்கை எவ்வாறு அமையப்பெறும் என்பதே எம் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் கேள்வி...
    மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.