Header Ads



"வாக்களிக்காமல் இருப்பது பாவமாகும்" தேர்தல் தொடர்பான, குத்பா வழிகாட்டல்

- அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் -

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அந்த உரிமையை பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யப் பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமலும் விடலாம்.

ஆனால், தற்போதைய சூழலில் அந்த உரிமையை நாம் கட்டாயம் பயன்படுத்தியே ஆகவேண்டும். எனவே, நவீன கால அறிஞர்களிற் சிலர் தேர்தலில் வாக்களிப்பது என்பது மார்க்கம் கடமை.فريضة دينية என்றும் கட்டாயத் தேவை وضرورة دنيوية என்றும் கூறியுள்ளார்கள். 

வேட்பாளர்களுக்கு மத்தியில் இருக்கும் ஒருவர்  நாட்டு நலன், ஒருமைப்பாடு, சுபீட்சம், சமூக நலன், நீதி நியாயம், அபிவிருத்தி, சிறுபான்மையினருக்கான உரிமை போன்ற அடிப்படையான அம்சங்களில் கவனம் செலுத்துபவார் என நாம் நம்பினால் அவர் இருக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் நல்லவராக,வல்லவராகவும் இருப்பாராயின் அப்படியானவருக்கு வாக்களிப்பது கடமையாகிறது. 

அதேவேளை, மற்றொருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல் உருவாகும், ஊழல், இலஞ்சம், பாரபட்சம், அராஜகம் என்பவற்றை கட்டவிழ்த்து விடுவார் என்று  நம்பப்பட்டால் அவருக்கு வாக்களிப்பது பாவமாகும்.

ஆனால், எல்லா வேட்பாளர்களும் முழுமையான தகுதி படைத்தவர்களாக இருப்பது சாத்தியமில்லை. எல்லோரும் பொருத்தமில்லை என்றாலும் ஒப்பீட்டளவில் நல்லவரைத் தெரிவு செய்வது கடமையாகும்.
இரு ஆபத்துக்களில் ஏதாவது ஒரு ஆபத்தைத் தெரிவு செய்தே ஆக வேண்டிவரும் என்ற நிலை இருக்குமாயின் குறைந்த ஆபத்தைக் கொண்ட விவகாரத்தை  அல்லது இரு தீங்குகளில் பாதிப்புக் குறைந்த தீங்கை தெரிவு செய்ய வேண்டும். அங்கிருந்து தப்பியோட முடியாது. இதற்கு
اختيار اخف الضررين واهون الشرين
என்ற இஸ்லாமிய சட்ட அடிப்படையை ஆதாரமாக கொண்டு இவ்வாக்களிப்பை செய்ய வேண்டும்.

வாக்களிக்காமல் இருப்பது பாவமாகும். காரணம், வாக்குகள் போதாமல் போனதனால் பொருத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படாமல் பொருத்தமற்றவர் தெரிவு செய்யப்பட்டால் வாக்களிக்காதவர்கள் அதன் பாவத்தை சுமக்க நேரிடும். எனவேதான், சாட்சியமளிக்க அழைக்கப்பட்டால் சாட்சியாளர்கள் மறுக்க வேண்டாம், சாட்சியத்தை மறைக்க வேண்டாம் போன்ற கருத்துக்களை குர்ஆன் கூறுகிறது. பாதகம் கூடிய ஒரு வேட்பாளர் தெரிவாகி விட்டால் அது நாட்டை அதிகமதிகம் பாதிக்கும்.

ولا يأب الشهداء اذا ما دعوا 
ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه
போன்ற வசனங்கள் பொருளாதாரம் தொடர்பான தனிப்பட்ட விடயங்களுக்காக சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது மறுப்பது கூடாது என்ற கருத்தை சொல்வதாயின் நாட்டு நலனை முன்னிறுத்தி சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது மறுப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்று ஷெய்க் கர்ளாவீ  கேட்கிறார்.
எனவே, வாக்களிக்காதிருப்பது ஹராம் என்பது அவருடைய கருத்தாகும். மாத்திரமல்ல வாக்களிப்பது என்பது شهادة சாட்சியம் என்ற கருத்தில் அவர் இருக்கிறார்.

ஷைக் இப்னு உஸைமீன் அவர்கள், தேர்தலில் வாக்களிப்பது கடமையாகும். எந்த வேட்பாளரிடம் நலவு இருக்கிறதோ அவருக்கு உதவ வேண்டும். நல்லவர்கள் பின்வாங்கினால் அவர்களது இடத்தை யார் அடைப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதாவது அப்போது நல்லவர்களது இடத்தில் மோசமானவர்கள் அமர்வார்கள் என்பது அவரது கருத்தாகும்.

"வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும் போது தேர்தலை பகிஷ்கரிப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமாக அமையும். பகிஷ்காரம் என்பது Negative ஆகும். ஆனால், ஒரு  முஸ்லிம் எதனையும் பொதுவாக Positive  ஆகப் பார்ப்பான்" என்று கூறும் கலாநிதி அக்ரம் கசாப் அவர்கள், வாக்களிப்பதை ஷஹாதா(சாட்சியம்), வகாலா(பொறுப்புச் சாட்டல்), இனாபா(பதிலுக்கு நியமிப்பது), தஸ்கியா(சிபாரிசு செய்தல்) என்ற சொற்களால் அடையாளப்படுத்துகிறார். அவர் தனது
 الانتخابات احكام و ضوابط
எனும் நூலில் இக்கருத்துக்களைத் தருகிறார்.தேர்தல் எனப்படுகின்ற இந்த (System) ஐ விட்டால் பொருத்தமானவரை தெரிவு செய்ய உங்களிடம் உள்ள முறைமை யாது என்றும் அவர் கேள்வி எழுப்புவதுடன் தேர்தல் தான் நமக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிவகை செய்கின்றது என்றும் சொல்லுகிறார்.

முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பது பற்றி ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் அது கடமையாகும் என்றும் சத்தியவான்களது பெண்கள் வாக்களிக்காமல் இருந்தால் அசத்தியவான்களது பெண்கள் வாக்களித்து அவர்கள் மேலோங்கிவிடாதிருக்க இது அவசியமாகும் என்றும் கூறுகிறார்.

இலங்கையில் சிறுபான்மையினர் வாழுவதால் அவர்களது பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துபவராக ஆட்சியாளர் இருக்க வேண்டும்.அரசியல் பலம் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பாகும். 
ஷுஐப்(அலை) அவர்களைத் தாக்க அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர் சாரந்திருந்த கோத்திரம் பலமாக இருந்ததால் அவ்வாறு அவர்கள் செய்யாது விட்டதாகக் கூறினார்கள்.

 قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ ۖ وَمَا أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍ 
"உமது குடும்பத்தார் மட்டும் இல்லாதிருந்தால் உம்மை கல்லெறிந்து கொன்றிருப்போம்" என்றார்கள்.

பலவீனமானவர்கள் பலசாலிகளுடன் அரசியலில் கூட்டிணைந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வசனத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுவர்.

எனவே, முஸ்லிம் சமூகம் இலங்கையில் சிறுபான்மையாக வாழுவதால் அவர்களுக்கான பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்வதற்கு அவர்கள் பலமான அரசியல் நிலைப்பாடுகளுக்கு வரவேண்டும் என்பதை இது காட்டுகிறது.

மிக முக்கியமான சில ஆலோசனைகள்

# تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء
அதிகாரத்தையும் பதவிகளையும் அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்குக் கொடுப்பான், தான் விரும்பியவர்களிடமிருந்து பறிப்பான் என்ற ஆழமான நம்பிக்கை எமக்கு வேண்டும்.

# وما تشاءون إلا أن يشاء الله
 لا مانع لما اعطيت ولا معطي لما منعت.
அல்லாஹ் எதனை நாடுகிறானோ அது மாத்திரமே உலகத்தில் நடக்கும். நாம் அந்த நாட்டத்தின் முடிவுகளை விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், எம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு அவனுடைய நாட்டத்தின் முடிவை  திருப்தியோடு ஏற்றுக் கொள்வது கடமையாகும்.

# استعينوا بالصبر والصلاة
தேர்தல் தினத்தில் தஹஜ்ஜுத்  தொழுதுவிட்டு, பஜ்ர் தொழுகையை  ஜமாஅத்தோடு நிறைவேற்றிவிட்டு அல்லாஹ்விடத்தில் மன்றாடிக் கேட்க வேண்டும். இந்த நாட்டுக்கு மிகப் பொருத்தமான ஓர் ஆட்சியாளரை அல்லாஹ் தர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் மனமுருகி கேட்க வேண்டும்.

# وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ ۖ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ
தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் தினத்தன்றும்  தேர்தலுக்குப் பின்னரும் அரசியலை ஒரு மதமாக சமயமாக ஆக்கிக் கொள்ளாமல், வேட்பாளர்களை தெய்வங்களாக ஆக்கிக் கொள்ளாமல் வாக்களிப்பதை எமது அன்றாட கருமங்களில் ஒன்றாகக் கருதி, அதனை எமது உள்ளத்தில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து நாம் அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

# وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ 

 قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
 لَا تَحَاسَدُوا، ولَا تَنَاجَشُوا، ولَا تَبَاغَضُوا، ولَا تَدَابَرُوا، وكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، ولَا يَخْذُلُهُ، ولَا يَحْقِرُهُ، التَّقْوَى هَاهُنَا -ويُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مِرَارٍ- بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ: دَمُهُ، ومَالُهُ، وعِرْضُهُ. أَخْرَجَهُ مُسْلِمٌ.
"பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்." (ஹதீஸ்)

எனவே, தேர்தலின் போதும் அது முடிந்த பின்னரும் சச்சரவுகளிலும் குதர்க்கங்களிலும் ஈடுபடுவதும் அதனைப் பற்றியே பேசி காலம் கடத்துவதும் ஹராமாகும். தேர்தலுடன் தொடர்பான கதையாடல்கள் சிலபோது எமது  அன்றாட கடமைகளை கூட நாம் புறந்தள்ளி விடுகின்றன. இது பயங்கரமான தவறாகும். ஒரே குடும்பத்துக்குள் கட்சிக்காக சண்டையிடும் சகோதரர்கள் இருக்கிறார்கள். ஒரே ஊரில் கூட இப்படியான நிலை உள்ளது. யாரோ வெற்றி அடைய யாரோ சண்டையிடலாமா?அரசியல்வாதிகள் இன்று சண்டைபிடித்து நாளை கைகுலுக்குவார்கள். நாம் ஏன் பிளவுபட வேண்டும்?

வெற்றியும் தோல்வியும் உலக வழமையாகும். ஏனைய சமூகங்களுடனான உறவுகள் பாதிக்கப்படும் செயல்கள் எவற்றிலும் நாம் ஈடுபட்டு விடலாகாது. தேர்தலில் சம்பந்தப்படப் போய் அல்லாஹ்வைத் கோபமூட்டும் மற்றும் சமூகத்தைக் குட்டிச் சுவராக்கும் கருமங்களில் சம்பந்தப்பட்டுவிடலாகாது.

தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் நிதானமாகவும் முன்யோசனையுடன் நடந்துகொள்ளவேண்டும். எமது தாயகம் இலங்கையை கட்டியெழுப்பி அனைவரையும் உயர்ந்த பட்ச நலன்களோடு வாழவைப்பதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

கட்சிகளின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து ஈமானை இழந்து விடலாகாது. சமூகத்தின் ஒற்றுமையையும் நாட்டின் பாதுகாப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் சாந்தியோடும் சமாதானத்தோடும் மன நிறைவோடும் சுபிட்சத்தோடும் வாழவேண்டும் என்று அடிக்கடி அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொள்ளவோமாக!

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்:-
"நபியவர்கள் சபைகளில் இருந்து செல்லுவதற்கு முன்னால் தனது தோழர்களுக்காக பின்வரும் பிரார்த்தனையை பெரும்பாலும் செய்வார்கள்:- (அப்பிரார்த்தனையின் ஒரு பகுதி பின்வருமாறு)
"அல்லாஹ்வே! உலகை எமது உள்ளத்தின் பெரும் கவலையாக மாற்றி விடாதே. எமது அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே. எம் மீது இரக்கம் காட்டாதவர்களை அதிகாரிகளாக எம் மீது நீ சாட்டி விடாதே!"
اللهم لاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا ، وَلاَ مَبْلَغَ عِلْمِنَا ، وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا 

رواه الترمذي (رقم/3502) وقال: حسن غريب. وصححه الألباني في " صحيح الترمذي ".

நல்ல நிய்யத் + உயர்ந்தபட்ச முயற்சி + துஆ + அல்லாஹ்வின்நாட்டம் = விளைவுகள்

حسبنا الله ونعم الوكيل.

No comments

Powered by Blogger.