Header Ads



முஸ்லிம் சமூகம் தவறான முடிவின், பின்னால் சென்றது துர்ப்பாக்கியமாகும் - அலி சப்ரி

ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக வாக்களித்ததன் பின்னணி பற்றியும் ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்கள்  பற்றியும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி  சப்ரியுடனான நேர்காணல்.

கேள்வி: தேர்தல் முடிவுகள்  தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?  

பதில்:  இது எதிர்பார்த்த முடிவுகள் தான்.  இது பிரமிப்பூட்டும் தேர்தல் முடிவல்ல.  முஸ்லிம்கள் உணர்ச்சிவசமான அரசியலில்' இருந்து மீண்டு பகுத்தறிவான அரசியலின் பக்கம் திரும்ப வேண்டும் என ஆரம்ப முதலே வலியுறுத்தி வருகிறேன்.  யதார்த்தத்தை உணராது அவர்கள் இம்முறையும் செயற்பட்டுள்ளனர்.  2018 உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 50 ஆயிரம் வாக்குகளும் சு. க தலைமையிலான குழுவுக்கு 14 இலட்சமும் டக்ளஸ் தேவானந்தா ஆறுமுகன் தொண்டமான் போன்றோரின் வாக்குகள் உள்ளடங்கலாக 65-, 66 இலட்சம் வாக்குகளை கையில் வைத்துக் கொண்டே கோட்டபய போட்டியிட்டார்.  ஆனால் ஐ. தே. கவின் 36 இலட்சம் வாக்குகளையும் த. தே. கூ பின் 3 இலட்சம் வாக்குகளையும் அமைச்சர்களான ஹக்கீம் மற்றும் ரிசாதின் வாக்குகளும் உள்ளடங்களாக 41 இலட்சம் வாக்குகளுடனுமே சஜித் பிரேமதாஸ களமிறங்கினார்.   

இந்தக் கணிப்பை நான் தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தேன்.  இதற்கிடையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரசாங்கம் மேலும் மக்கள் மத்தியில் கெட்டபெயரை சம்பாதித்தது. இது தவிர எல்பிடிய தேர்தலிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டி ஜனாதிபதித் தேர்தல் முடிவு தெற்கில் எப்படியிருக்கும் என்பதை படம்பிடித்துக் காட்டியது.  முஸ்லிம் சமூகம் யதார்த்தத்தை உணர்ந்து முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் தவறான முடிவின் பின்னால் சென்றது துர்ப்பாக்கியமாகும். குர்ஆனையும் ஹதீஸையும் அரசியலுடன் தொடர்புபடுத்தி பேசுவதை விடுத்து சிந்தித்து செயற்பட்டிருக்க வேண்டும். இதனூடாகத் தான் எமது சமூகத்தை பாதுகாக்க முடியும்  

கேள்வி:  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிறுபான்மை வாக்குகள் கிடை க்காது என தேர்தலுக்கு முன்னரே பரவலாக குறிப்பிடப்பட்டது.  ஆனால் எதிர்பார்த்தை விட அதிகமானவர்கள் அவருக்கு வாக்களிக்காதது பற்றி உங்கள் கருத்தென்ன?  

பதில்:  இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கோட்டாபயவை தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பயங்கரமான பிசாசாகவே சித்தரித்து அவர் பற்றிய பயத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தார்கள்.  அவர் ஜனாதிபதியான மறுநாள் முதல் முஸ்லிம்களும் தமிழர்களும் தாக்கப்படுவார்கள் என பொய்ப்பயத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.  இது தவிர, தமிழ் ஊடகங்களில் எமது தரப்பிற்கு எதிரானவைகளே கூடுதலாக வெ ளியிடப்பட்டன.  எமது தரப்பு கருத்துக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. நாம் கூறுபவற்றை திரிபுபடுத்தியே வெளியிட்டார்கள். இவ்வாறான காரணங்களினால் 10 முதல் 15 வீதமான முஸ்லிம்களே கோட்டாபயவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் பயன்படுத்தியும் திரிபுபடுத்திய தகவல்களை வெளியிட்டும் கோட்டாபய பற்றிய பீதியை ஏற்படுத்திய நிலையிலும் கூட இந்தளவாவது வாக்களித்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.   

தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பயமுறுத்தியது போன்று எதாவது நடந்ததா? முன்னரை விட மகிழ்ச்சியாக மக்கள் இருக்கிறார்கள்.  பொய்யான பீதிக்கு ஏமாற வேண்டாம் எனவும் இன மத பேதமின்றி சகலரையும் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். இதனை நாம் ஆரம்பம் முதல் கூறி வருகிறோம்.   

கேள்வி:  சஜித் பிரேமதாஸ தரப்பில் த. தே. கூ தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் பிரசாரம் செய்த தோடு கோட்டாபய தரப்பில் அதாவுல்லா, தொண்டமான், மற்றும் உங்களைப் போன்றவர்களும் பிரசாரம் செய்தார்கள். தமிழ் பேசும் மக்கள் உங்கள் பேச்சை நிராகரித்து விட்டார்களா?  

பதில்:  தமிழ் முஸ்லிம் மக்கள் சஜித் பி​ரேமதாஸவிற்காக வாக்களிக்கவில்லை. கோட்டாபயவிற்கு எதிராகத் தான் அவர்கள் வாக்களித்துள்ளனர்.  அவர் வந்தால் ஹபாயாவையும் ஹிஜாப்பையும் அகற்றுவார்,அல்லாஹ்விற்காகவும் ஹதீஸிற்காகவும் சஜித்திற்கு வாக்களியுங்கள் என்றெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் கீழ்த்தரமான பிரசாரம் செய்தார்கள், இது பற்றிய வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ள போதும் சமூக நலனுக்காக அவற்றை வெளியிடவில்லை. மக்களை பிரிக்கும் அரசியலையே முஸ்லிம் தலைவர்கள் மேற்கொண்டார்கள்.  6 மாதம் செல்லும் போது இவர்கள் சொன்னவையெல்லாம் வெறும் பொய் என்பது அனைவருக்கும் புலனாகும்.  சுயநலத்திற்காக முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்துள்ளனர்.  சஜித் வெல்லமாட்டார் என்று தெரிந்தும் தோற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அவர்கள் மக்களிடம் கோரினார்கள்.   

சிங்கள சமூகத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் தூரமாவதற்கு இவர்கள் தான் காரணம்.   

கேள்வி:  இந்த தேர்தல் முடிவினூடாக சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடையிலான விரிசல் அதிகரிக்காதா?  

பதில்:  ஆம். பதவி ஏற்பில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மைத் தன்மையை விளக்கியிருந்தார்.  தன்னால் தனிச் சிங்கள வாக்குகளினால் வெற்றிபெற முடியும் நிலை இருந்தாலும் தமிழ் முஸ்லிம் மக்களும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாக குறிப்பிட்டிருந்தார்.  தன்னுடன் கைகோர்க்குமாறு அவர் கையை நீட்டியிருக்கிறார்.  நாம் அவரின் கையை பற்றிக் கொள்வதா இல்லை தொடர்ந்தும் பிடிவாதம் பிடிப்பதா என்று முடிவு செய்தாக வேண்டும்.   

எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியும் பிரதமரும் அதிக கரிசனை காட்டுகின்றனர்.  இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ என்னுடன் கதைத்த போது இதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.  வெற்றிபெற்றாலும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி திருப்தியாக இல்லை.  முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஒதுங்கி செல்லாது ஒரே நாடா கஏனைய சமூகங்களுடன் இணைந்து ஒரே இலங்கையராக செயற்படுவதாக ஒதுங்கிச் செல்வதாக என முடிவு செய்ய வேண்டும்.   

கேள்வி:  கோட்டாபய ராஜபக்‌ஷவை சிறுபான்மை சமூகம் முற்றாக நிராகரித்துள்ளதாக சில தரப்பினர் கூறினாலும் அவரின் வெற்றிக்கு சிறுபான்மை வாக்குகளும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளதாக மற்றொரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறது. இதனை ஏற்கிறீர்களா?  

பதில்: சிறுபான்மையினரின் 15 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் அவருக்கு அளிக்கப்பட்டன. தொண்டமானின் வாக்குகள், வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் அடங்கலாக 5 முதல் 6 இலட்சம் சிறுபான்மை வாக்குகள் கோட்டாபயவிற்கு வழங்கப்பட்டுள்ளன.  அவரின் வெற்றிக்கு சிறுபான்மை வாக்குகளும் பங்களித்துள்ளன. இதேவேளை தேர்தலுக்கு பின்னர் நான் சந்தித்த சில பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்கு பற்றி கவலைப்பட்டார்கள்.  கம்பஹ மாவட்டத்தில் ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட 1670 வாக்குகளில் 65 வாக்கு தான் கோட்டாபயவிற்கு அளிக்கப்பட்டிருந்து என ஒரு தலைவர் குறிப்பிட்டார்.  முஸ்லிம்களுக்கு எவ்வளவு தான் சேவை செய்தாலும் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று அவர் கவலைப்பட்டார்.  இவ்வாறு சுமார் 10 தலைவர்கள் வரை என்னிடம் கூறியிருப்பர்.  இந்த நிலை மாற வேண்டும்.   

கேள்வி:  இன்னும் 6 மாத காலத்தில் முஸ்லிம்கள் உண்மையான மாற்றத்தை உணர்வார்கள் என்று கூறியிருந்தீர்கள். எந்த அடிப்படை யில் இதனை குறிப்பிட்டீர்கள்.   

பதில்: கோட்டபயவின் 5 வருட ஆட்சி நிறைவில் முஸ்லிம் தரப்பில் முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுகள் பீதிகள் யாவும் பொய் என்ற நிலை உருவாகுமா என என்னிடம் சிலர் கேட்டார்கள்.  அதற்கு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களே போதுமானது.  அவர் அனைத்து இனத்தவரையும் சமமாக நடத்துவார்.  சட்டம் ஒழுங்கை மிகச்சரியாக முன்னெடுப்பார். தேர்தல் மேடைகளில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் யாவும் வெறும் பொய் என்பதை முஸ்லிம்கள் உணர்வார்கள்.  இனவாதிகளுக்கு அவரின் ஆட்சியில் இடமிருக்காது. இனவாதத்திற்கு முயல்பவர்களை அவர் அடக்குவார்.   

கேள்வி: பொதுபல சேனாவுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் தொடர்பு இருப்பதாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது.  அவர் ஜனாதிபதியாக வந்த வுடன் தமது அமைப்பை கலைப்பதாக ஞானசார தேரர் அறிவித்திருக்கிறார். இது இவர்களுக்கு இடையிலான தொடர்பை காட்டுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனரே?  

பதில்:  அவருக்கும் கோட்டபய ராஜபக்‌ஷவிற்கும் இடையில் எந்த வித தொடர்பும் கிடையாது என நான் உறுதிபட கூறுவேன். இது சிலர் பரப்பிய பொய்க்குற்றச்சாட்டாகும்.  பொதுபல சேன முக்கியஸ்தரான திலந்த விதானகே பற்றி நான் கடந்த காலத்தில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தேன்.  அவர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சில் பணியாற்றுவது பற்றி விமர்சித்திருந்தேன்.  எனக்கு எதிராக அவர்கள் ஊடக மாநாடு நடத்தி என்னை கண்டித்தார்கள்.  அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என அவர் சிந்தித்திருக்கலாம். ஜனாதிபதியாக உள்ள நிலையில் அவர் எந்த இனவாத குழுவுக்கும் இடமளிக்க மாட்டார். அது உறுதி. பொதுபல சேனாவின் முடிவு எந்த நோக்கில் எடுக்கப்பட்டது என்பது எமக்குத் தெரியாது.   

கேள்வி:  அவரின் ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்தது போன்று திகன, கிந்தொட்டை, குருணாகல் போன்ற சம்பவங்களோ அளுத்கம போன்ற அசம்பாவிதங்களோ நடக்காது என உறுதியாக கூற முடியுமா?  

பதில்:  அது தான் எமது எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும்.  அத்தகைய நிலை இனி வராது. இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு கௌரவதாக அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படவேண்டும் என்பது தான் எமது எதிர்பாப்பாகும்.  உதாரணமாக ஹம்பாந்தோட்டை பதகிரி பகுதியில் நடந்த குழப்பநிலை பற்றி நாம் அறிவித்தவுடனேயே அது அவசரமாக தீர்க்கப்பட்டது.  சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.  ஆனால் அதனை இனமுறுகலாக ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் துரிதமாக தடுக்க நாமல் ராஜபக்‌ஷ, உட்பட அப்பகுதி முக்கியஸ்தர்கள் உரிய நடவடிக்கை எடுத்தார்கள். இதுபோல பல சம்பவங்களை நாம் தடுத்திருக்கிறோம்.  ஆனால் கடந்த ஆட்சியில் இவ்வாறு ஏதாவது நடந்தால் பொறுப்பை மற்றவர் பக்கம் மாற்றி தப்பிக் கொள்வார்கள்.  பிரபலம் பெறுவதற்காக நாம் செய்யும் சேவைகளை வெளியிடும் பழக்கம் எமக்கில்லை.   

கேள்வி:  அடுத்த பாராளுமன்ற தேர்தலாகும் போது ஜனாதிபதி கோட்டாபயவின் சேவைகளை பார்த்து முஸ்லிம்கள் மனம் மாறி அவருடன் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறீர்களா?  

பதில்:  அதுபற்றி கூற முடியாது.  தனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் அவர் சகலருக்கும் சேவையாற்றுவார்.  நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே அவரின் பிரதான நோக்கமாகும்.  அவர் இனத்தையோ மதத்தையோ பார்த்து சேவையாற்றும் கொள்கையுடையவரல்ல.  திறமைக்கு அவரிடம் முன்னுரிமை உள்ளது.  அவரின் பிரதான சட்டத்தரணியான நான் ஒரு முஸ்லிம்.  அவரின் கட்டட கலைநிபுணர் ஒரு மலே முஸ்லிம்.  அவரின் மருத்துவர் டொக்டர் சிவா தமிழர். பழைய கால அரசியல் இன்றைக்கு ஒத்துவராது.  இனரீதியாக சிந்தித்து செய்யும் அரசியல் தற்காலத்திற்கு சரிவராது.  21 முஸ்லிம் எம். பிகளும் முஸ்லிம் சமூகத்திற்காக என்ன செய்துள்ளார்கள்.  ஊடகங்களில் வாய்கிழிய பேசியுள்ள இவர்கள் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த ஏதாவது செய்திருக்கிறார்களா?  இவர்களால் தான் சிங்கள சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான நற்பெயர் இல்லாமல் போனது.   

கேள்வி: கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியில் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றோருக்கு இடமில்லை என்று கூறியிருந்தீர்கள். அவர்களை இணைப்பதால் பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் தரப்பை பலப்படுத்த முடியாது போகும் என்று கூறியுள்ளீர்கள் அது பற்றி?  

பதில்: இனவாத அடிப்படையிலான நபர்களை இணைப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.  அவர்கள் அனுகூலம் கிடைக்கும் தரப்பிற்கு தாவுபவர்கள். இனவாத அரசியலுக்கு முடிவு காண வேண்டும்.  பொதுஜன பெரமுனவில் முஸ்லிம்பிரிவை பலப்படுத்த வேண்டும்.  அதற்கான முன்னெடுப்புகளை செய்வோம்.   

கேள்வி:  ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷ பல அதிரடி முன்னெடுப்புகளை எடுத்துள்ளார்.  தனது பாதுகாப்பை குறைக்கவும் தனது பட ங்களை அரச நிறுவனங்க ளில் காட்சிப்ப டுத்து வதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.  அமைச்சர்களுக்கும் இல க்குகள் வழங்கியுள்ளதாக அறிகி றோம். இவை பற்றி  

பதில்:  இவையெல்லாம் எமக்கு புதிய விடயங்களோ ஆச்சரியப்படவோ கூடிய விடயங்களல்ல.  அவர் ஆரம்பமுதலே எளிமையானவர்.  சேவை செய்யும் நோக்கத்துடன் வந்தவர்.  அவருக்கு இராணுவத்தில் 20 வருட அனுபவமும், 10 வருடம் அமெரிக்காவில் தொழில் செய்த அனுபவம் உள்ளது.  10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளார்.  பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் போன்றே அவர் செயற்பட்டார்.  5 வருடங்கள் எதிரணியில் தொடர்ச்சியான வழக்குகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து புடம்போடப்பட்டுள்ளார்.  அவர் பெரும் அனுபவங்களுடன் தான் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.  வியத் மக நிகழ்ச்சிகளினூடாகவும் அனுபவங்கள் பெற்றுள்ளார்.  இதனுடன் தொடர்புபட்ட திறமைசாளிகள்,புத்திஜீவிகள்,கல்விமான்கள்,பேராசிரியர்கள் உள்ளனர்.  அவர்களின் உதவியையும் அவர் பெறுவார்.   

கேள்வி: அவரது பிரதான சட்டத்தரணியாக நீங்கள் செயற்படுகிறீர்கள்.  கோட்டாபயவுக்கு எதிராக தேர்தலுக்கு முன்னர் பல வழக்குகள் இருந்தன.  பிரஜா உரிமை தொடர்பிலும் வழக்கு தொடரப்பட்டது.  அவர் ஜனாதிபதியாக தெரிவானாலும் வழக்கு தொடர்ந்து நியமனத்தை ரத்து செய்ய முடியும் என ஐ. தே. க தரப்பில் கூறப்பட்டிருந்தது. இது உண்மையா?  

பதில்:  முடிந்தால் வழக்குத் தொடரட்டும்.  அவரின் பிரஜா உரிமை தொடர்பில் எந்த பிரச்சினையும் கிடையாது.  பிரஜா உரிமை தொடர்பில் சிக்கலுள்ள ஒருவரை பாரிய கட்சியொன்று தேர்தலில் நிறுத்துமா?ஜனாதிபதி சட்டத்தரணியான நான் பகிரங்கமாக வந்து அவரின் பிரஜாஉரிமை பற்றி பொய்யான ஆவணங்களுடன் முன்வைத்து பேச முடியமா? ஐ. தே. கவும் ஆரம்பமுதலே கோட்டாபயவை தோற்கடிக்க முடியாது என்பது தெரியும்.  அதனால் தான் பிரஜாஉரிமை விவகாரத்தை முன்வைத்து குற்றஞ்சாட்டினார்கள்.  வெள்ளை வேன் சாரதி என ஒருவரை கொண்டுவந்து நாடகமாடினார்கள். அவர் மீதான சகல வழக்குகளில் இருந்தும் அவர் நிரபராதியாகியுள்ளார்.         

ஷம்ஸ் பாஹிம்    


4 comments:

  1. bravo, bravo,bravo,a bitter truth of this article a line is, "SINGALA SAMUGATIL IRUNDU MUSLIM SAMUGAM DOORAMAVATHARKU IVARGALTAN KARANAM" you point out those useless fellows well,also "ANUGULAM KIDAIKKUM TAARPITKU TAVUGIRAVARGAL the curse of our community still believing them. if you can bring to concern for honorable president about TAMIL name board on street being broken by some unknowing group its much appreciated.

    ReplyDelete
  2. Brother Attorney-at-Law Ali Sabry,
    May I have the permission to contribute some of my views/suggestions to the above while I fully and totally agree to all your answers given to the questioned by the learned journalist, brother Shums Fahim.
    But the fact remains that the Muslims are politically "NOT UNITED", even when critical moments are faced by our community. The need at the moment is "UNITY" of the Muslims and this will be our strength in the future in all aspects of life, Insha Allah. For many years, the writer was stressing the need for "UNITY" among the Muslim Civil Societies and NGOs in their approach towards resolutions to humanitarian efforts and dealing with UN institutions and International Organizations on Muslim matters via lankamuslims@yahoogroups.com. It never happened, because every single group was "selfish" and worked towards their "agenda" and not for a "UNITED PLATFORM". So we failed then too. The majority of Muslims who voted Sajith Premadasa (Hansaya) DID NOT WANT TO VOTE HIM" against HE. Gotabaya Rajapaksa (Pottuwa), but did so because of the "DEMONIZED POLITICAL IMAGE" shown to them by our own Muslim political leaders like Rishad Bathiudeen and his MP's, Rauf Hakem and his MP's, Azad Sally, Mujeebu Rahuman (Cassim) and the TNA, which had the "TALKING POWER IN TAMIL" to pass a "wrong message" to the Muslim vote Bank, especially in the Eastern Province and Muslim polulated areas in the other provinces. You have explained this factum very clearly in your interview.
    Why did these politicians do so? The reality is that they feared HE. Gotabaya Rajapaksa will bring them before the "RULE OF LAW" for all the corruption they had done. But the MANIFEST was clear that there will be "NO REVENGE POLITICS". Those Muslims who understood Sinhalese and tried to understand the "VISION" have voted with HE. Gotabaya Rajapaksa. The SLPP platform campaign was done exclusively in Sinhalese. That is why "The Mulim Voice" claims the Muslims voted "POTTUWA" also in a substantial way. A few gatherings did have tamil speakers. You have acknowledged this and it is helpull in bridging the gap between the Muslim voters and the majority community who feel we had let them down.
    Another election is expected soon, the general election, sometime in March/April 2020. The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah.
    It is the opinion of the writer that a Muslim personality placed in your position by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government should come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". You have spoken about this news culture in the media too. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
    The need is to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with you as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission. "The Muslim Voice" is willing to be a partner with you in the new political journey, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. எல்லா இனங்களும் இனவாதம் பேசியே இம்முறை அரசியல் செய்தது என்பது வேதனையான விடயம் சட்டத்தரணி அவர்கள் ஆதரிக்கும் கட்சி பேசிய இனவாதம் சிங்கள மக்களின் மூளையிலிருந்து விலக குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் அதுவரை ராசபக்சக்களின் ஆட்சிதான் மாற்றம் இல்லை.

    ReplyDelete
  4. தேர்தல் என்பது ஜனநாயக முறையில் தானே நடைபெற்றது ஜனநாயகம் என்றால் என்ன தான் விரும்புவோருக்கு வாக்களிக்கும் உரிமை ஜனநாயகத்தில் இருக்குதானே சட்டம் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்

    ReplyDelete

Powered by Blogger.