Header Ads



அங்கவீனமுற்றவர்கள் என்று குறிப்பிட்டைமைக்கு, மன்னிப்பு கோரினார் சஜித்

-  முல்லைத்தீவில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

முல்லைத்தீவு மாவட்டத்தில்  அங்கவீனமுற்றவர்கள் என்று விழித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் இவ்வாறு அங்கவீனமுற்றவர்கள் என்று குறிப்பிட்டைமைக்கு மன்னிப்பு கோறுவதாகவும்,இவர்கள் விசேட தேவைகள் உள்ளவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டி இவர்களது  எதிர்கால பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் முல்லைத்தீவு முள்ளியாவளயில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே  சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தமதுரையில் கூறியதாவது –

 கடந்த 30 வருட யுத்தம் எல்லாத்தரைப்புக்களையும் பாதித்துள்ளது.குறிப்பாக இப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில் இன்னும் தேவையான அபிவிருத்திகளை காணவில்லை.எமது ஆட்சியில் இப்பிரதேசத்தினது அபிவிருத்தியினை தனிப்பட்ட முறையில் எனது கையில் எடுக்கவுள்ளேன்.இதற்கென விசேட ஜனாதிபதி செயலணியினை ஆரம்பித்து அதனை நேரடியாக மேற்பார்வை செய்யவுள்ளேன்.

இனவாதம்,மதவாதம் என்பது எமது நாட்டுக்கு பொருத்தமற்றதொன்று மனிதர்கள் என்ற அடிப்படையில் சகலருக்கும் பொதுவான நீதி இருக்க வேண்டும்.இதனை எனது ஆட்சியில் நிலைநாட்டுவேன்.

இன்று சிலர் இனவாதத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.இவர்கள் தான் நாட்டின் ஒருமைப்பாடு,தேசியம் பற்றி பேசுகின்றனர்.இது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே.இது ஒவ்வொருவரின் உள்ளங்களில் இருந்து வெளிவர வேண்டும்.இதனைவிடுத்து இதனைப் பேசி இனங்களுக்கு இடையில் குரோதங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக எனது ஆ்ட்சியில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் பல தேவைகள் உள்ளவர்களாக இருக்கின்றனர்.குறிப்பாக கணவன் மார்களை இழந்த தாய்மார்கள் வாழ்கின்றனர்.இவர்களது மேம்பாடுகளுக்காக வேண்டி விசேட வேலைத்திட்டமொன்றினை நடை முறைப்படுத்துவேன்.வீடுகளுன்றி வாழும் மக்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி 2025 ஆண்டுக்குள் இப்பிரச்சினைக்கு  தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.

முக்கியமாக முல்லைத்தீவு கேப்பா பிளவு மக்களின் காணிப்பிரச்சினையினை மிகவும் நேர்த்தியான முறையில் தீர்த்துவைப்பேன்.இம்மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படும்.இதற்கு சமாந்தரமாக இளைஞர் யுவதிகளுக்கு தொழில்  வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தில் ஒன்றாக தகவல் தொழில்  நுட்பக் கல்லுாரிகள் உருவாக்கப்பட்டு இதில் இருந்து வெளியாகும் மாணவர்களுக்கு  தகவல் தொழில் நுட்ப பூங்காவில் வியாபாரம் செய்யும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.இதனை மேற்கொள்ள தேவையான நிதியினை எமது அரசில் பெற்றுக் கொடுத்து எவ்வாறு இந்தியாவில் இளைஞர்களின் தகவல் அறிவினை பெற்றுக் கொடுக்கும் கற்கை இருக்கின்றதோ அவ்வாறு அதனை செய்யவுள்ளேன்.

விவசாயத்தை எமது நாட்டில் தன்னிறைவு  செய்து எஞ்சிய விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளேன்.இதற்கு ஏற்ப விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளுக்கு இலவச உரத்தினை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.இதன் மூலம் விவசாயிகள் தமது வருமானத்தை அதிகரிக்க முடியும்.இதே வேளை பரங்கியாறு,வவுனிக்குளம் நீர்ப்பாசன திட்டங்களை புனரமைப்பு செய்து இந்த விவசாயத்தை மேம்படுத்த திட்டம் வகுத்துள்ளேன்.இதனால் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் சிறந்த நன்மையினை அடையும்.இதனுடன் நந்திக்கடல் மீனவ சமூகத்திற்காக தயார்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

யுத்தம் நடை பெற்ற நாடுகளின் அபிவிருத்திகள் சர்வதேச நிதி வழங்கும் நாடுகளின் பங்களிப்புடனேயே இடம் பெற்றுள்ளது.என்னை நீங்கள் ஜனாதிபதியாக ஆக்கியதும், வடக்குக்கு நிதி வழங்கும் சர்வதேச நாடுகளை அழைத்துவந்து  நிதி வழங்கள் மாநாட்டினை நடத்தி பிரதேச அபிவிருத்திக்கு தேவையான நிதியினை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

 நான் பொய்களை கூறி மக்களது வாக்குகளை அபகரிப்பவன் அல்ல.எனது தந்தை அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு சொல்வதை செய்து காட்டியவர்.நானும் அவரது பாதையினை பின்பற்றுபவன்.வறுமை என்பது எமது நாட்டுக்க ஒவ்வாதவொன்று.இந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மிகவும் முக்கியமானது.சமூர்த்தி திட்டம் போன்று ஜனசவிய திட்டத்தினை கொண்டுவந்து வறுமையினை எமது நாட்டில் இருந்து இல்லாமல் ஆக்குவோம்.

எனது தந்தை அறிமுகம் செய்த மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் மதிய போசன திட்டம் என்பனவற்றை கடந்த மஹிந்த ஆட்சியில் இடை நிறுத்தினர்.44 இலட்சம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.இவர்களுக்கு எமது ஆட்சியில் சீருடை இரண்டும்,பாதணிகள் வழங்குவதுடன் மதிய போசனத்தினையும்  பெற்றுக் கொடுப்பேன்.

மு்ல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியினை எனது மேற்பார்வையில் இடம் பெறும்..நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை,எனது ஆட்சியில் சகல மக்களும் சமமானவர்களாக நடத்தப்படுவதுடன்,நாட்டின் வளங்கள் முகாமைத்துவம் செய்யப்பட்டு மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார்.

1 comment:

  1. நன்று.
    இந்த பிலிம் ஜனாதிபதியான பின்னர் பிலிமாகிபோகாமே இருந்தா சரி.

    ReplyDelete

Powered by Blogger.