Header Ads



இலங்கையில் ஒரு பென்டகன் - 77 ஏக்கரில், 54 பில்லியனில், அதிநவீன வசதிகள்


பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமையகத்தை மைத்திரிபால சிறிசேன வைத்தார்.

சிறிலங்காவின் அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ஒரேயிடத்தில், செயற்பட வைக்கும் வகையில், பத்தரமுல்லையில் 77 ஏக்கர் காணியில், சிறிலங்காவின் பென்டகன் என வர்ணிக்கப்பட்ட, புதிய பாதுகாப்பு தலைமையகம் வளாகம் அமைக்கப்பட்டு வந்தது.

புதிய பாதுகாப்புத் தலைமையகத்தை அமைப்பதற்கான அடிக்கல் 2011ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. அப்போது இதற்காக 54.3 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்துக்கென ஒதுக்கப்பட்ட 6 ஆவது 7 ஆவது தொகுதிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து – சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

10 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத் தொகுதிகளில், சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான அறைகள், இரண்டு உலங்குவானூர்தி தரையிறங்கும் தளங்கள், இராணுவத்தினருக்கான தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிடங்கள், உணர்தர உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், நீர்சேமிப்பு வசதிகள், நூலகங்கள், மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்டதாக இந்த இரண்டு கட்டடத் தொகுதிகளும் அமைந்துள்ளன.

சுமார் 4000 இராணுவ அதிகாரிகள் பணியாற்றுவதற்கான பணியக அறைகள் இதில் உள்ளன.

அதேவேளை, கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் செயலகம், கடற்படை, விமானப்படை, தலைமையகங்களும்  இந்த வளாகத்துக்கு மாற்றப்படவுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடந்த நிகழ்வில், இராணுவத் தலைமையகத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்த புதிய பாதுகாப்பு வளாகத்தில், 3ஆவது இலக்க கட்டடத் தொகுதி கடற்படைக்கும், 4 ஆவது இலக்க கட்டடத் தொகுதி விமானப்படைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்துக்கு, 6 ஆவது மற்றும் 7ஆவது இலக்க கட்டடத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையமான பென்டகன் போன்று, சிறிலங்காவின் அனைத்து பாதுகாப்பு தலைமையகங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பாதுகாப்பு தலைமையக வளாகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.