October 16, 2019

யாழ் - மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு பாட்டனாரின் பெயரையே வைத்துள்ளனர். பாட்டனாருக்கு கோட்டை பள்ளிவாசல் அருகாமையில் பதினைந்து கிட்டங்கிகள் இருந்தன. அந்த காலத்தில் பாட்டனார் அல்பாந்தியில் கப்பல் மார்க்கமாக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இவர் தனது ஆரம்பக் கல்வியை மஸ்ற உத்தீன் பாடசாலையில் கற்றார். வறுமை காரணமாக 15 வயதில் வியாபாரத்தில் ஈடுபட்டார். பளையில் சில்லரைக் கடை நடாத்தி வந்த இவர் அதனை நிறுத்தி விட்டு கே.கே.எஸ் வீதியில் அஸீமா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சில்லரைக் கடை நடாத்தி வந்தார்.

இவர் பல்வேறு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு படிப்படியாக தனது விடாமுயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் உயர்ந்து வியாபாரத் துறையில் தனக்கென தனியான சிறந்ததொரு அந்தஸ்தை பெற்றுக் கொண்டார்.

சில்லறைக் கடை வியாபாரத்தை கைவிட்டு விட்டு கட்டிட பொருள் விநியோகம், லொறி ட்ரான்ஸ்போட் போன்ற வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். பின்னர் பாடசாலைகளுக்கான கெயர் பிஸ்கட், திரிபோஷாமா, விநியோகத்தினை மிக நீண்ட காலமாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்கள் உட்பட வடமாகாண அளவில் மேற்கொண்டு வந்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு யாழ் கன்னாதிட்டி வீதியில் தீபி ஜூவல்லர்ஸ் எனும் நகை வியாபார ஸ்தாபனத்தின் உரிமையாளராக விளங்கினார். 

யாழ்ப்பாணம் நகை வியாபார சங்கத்தின் உப தலைவராகவும் கடமையாற்றினார். இவர் 1986 இல் கண்டி டி.எஸ்.சேனநாயக்க வீதி இலக்கம் 10 இல் குயின்ஸ் ஜூவல்லரஸ் பெயரில் நகை வியாபார ஸ்தாபனத்தை உருவாக்கினார்.

இவர் யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த அபூபக்கர் - ஹப்ஸா தம்பதியினரின் மகள் மரியம் என்பவரை திருமணம் செய்தார். முஹம்மது ராஜா – மரியம் தம்பதியினருக்கு நான்கு பெண்பிள்ளைகளும் (அஸீமா, றய்ஹானா,ஜெஸீமா, ஸீனத்துல்முனவ்வரா) மூன்று ஆண் பிள்ளைகளும் (ஜலால் ஜின்னா, றமீஸ்) ஆவார்கள்.

சமூக ங்களில் ஏற்படும் பிரச்சினைகளை குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவராகவும் விளங்கினார். பல சிக்கலான விவகாரங்களையும் நல்ல விதத்தில் கையாள்வதில் தேர்ந்தவராக விளங்கினார்.

யாழ் முஹமம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித்திற்கு (புதுப்பளிவாசல்) சொந்தமான கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள காணி, கணேஷ் ஸ்டோர்ஸ் புடைவைக் கடை உரிமையாளருக்கு விற்கப்பட்ட போது மிக மும்முரமாக நின்று உழைத்து, அதனை மீட்டெடுத்து மஸ்ஜித்திற்கு மீண்டும் சொந்தமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் மஸ்ற உத்தீன் மதரஸா நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும் செய்பட்டார்.

இவரது சமூக சேவைகளை கருத்தில் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரன் அவர்களின் சிபார்சின்  பேரில் 1977 ஆம் ஆண்டு சமாதான நீதவான் நியமனம் பெற்றார்.

1983 இல் ஏற்பட்ட தென்பகுதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு விரட்டப்பட்டு அகதிகளாக யாழ் ஸ்ரான்லி கல்லூரியில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கான நிவாரண பொருட்களை சோனகத் தெருவில் சேகரித்து அந்த நிவாரண பொருட்களை முதன் முதலாக எடுத்து சென்று வழங்கியது இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவர் ஆரம்பத்திலிருந்தே தழிழரசு கட்சியில் சேர்ந்து கட்சிக்காக உழைத்து பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தல் காலங்களில் வெற்றிக்காக உழைத்தார்.

தலைவர் ஏ.அமிர்தலிங்கம், வி.யோகேஸ்வரன், வி.என்.நவரட்ணம், எம்.சிவசிதம்பரம் போன்ற மூத்த அரசியல் வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை பேணியதுடன் 1977 இல் வி.யோகேஸ்வரனின் வெற்றிக்காக உழைத்தார்.

ஐந்து சந்தியில் 1983 இல் இவரது தலைமையில் நடைபெற்ற அமிர்தலிங்கம் அவர்கள் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்தை புலிகள் குழப்பினர். மேலும் புலிகள் அமிர்தலிங்கம் அவர்களின் காரையும் சேதப்படுத்தினார்கள்.

1984 இல் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக இவர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகர சபையின் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார். இவரது மகன் சட்டத்தரணி றமீஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் பதவியை அலங்கரித்தவர் தான். யாழ்ப்பாண மாநகர சபை பிரதி மேயர் பதவியை தந்தையும் மகனும் அலங்கரித்தது ஒரு சாதனை தான்.  

இவரது நண்பரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.இமாம் அவர்களது மகளின் திருமண வீட்டில் கலந்து  சிறப்பித்து வீடு திரும்பிய பின்னரே 19.05.2003 இல் நீர்கொழும்பில் தனது 83 ஆவது வயதில் இறையடி எய்தினார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்துள்ள சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். 

0 கருத்துரைகள்:

Post a Comment