Header Ads



மைத்திரி பதவி விலகவில்லை - ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை வகிப்பார் - சு.க. கோத்தாவுக்கு ஆதரவு

தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுவருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பூரண ஆதரவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்கினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்றைய உடகவியளார் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் கோத்தாபயவின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குமெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு உள்ளிட்ட 20 கட்சிகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து நேற்று இரவு சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியதாக செய்திகள் வெளியாகின.

இதேவேளை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நேற்றிரவு அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச்சொயலாளர்  தாயசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் தவிசாளராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டு வந்தார். 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்கினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிப்பார் என்பதினால் தேர்தல் நடவடிக்கைகளில் சிரேஷ்ட உப தவிசாளராக இதுவரை காலமும் பதவிவகித்துவந்த ரோகண லக்ஷ்மன் பியதாசவுக்கு கட்சியின் பதில் தவிசாளர் பதவி வழங்கப்பட்டள்ளதுடன் அவருடன் தேர்தல் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளுக்கு 15 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் ரோகண லக்ஷ்மன் பியதாச தற்காலிகமாக கட்சியின் பதில் தவிசாளராக  நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமை பதவியில் இருந்து நீங்கியதாக செய்திகள் வெளியாகின.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியதாக வெளிவரும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லையென அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.