Header Ads



சிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க

யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு :

கேள்வி : பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவும் இராணுவ பின்புலம் கொண்டவர். அதனடிப்படையில் தானே யுத்தத்தை நிறைவு செய்து வைத்ததாகவும், அதனால் தனக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக பொறுப்பு இருப்பதாகவும் கூறுகின்றார். இதே போன்று அமைச்சர் சஜித் பிரேமதாச பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பிற்கு பொறுத்தமானவர் என்று கூறுகின்றார். இந்நிலையில் நீங்களும் இராணுவ பின்புலத்தையே கொண்டிருக்கிறீர்கள். இது சிங்கள மக்கள் மத்தியில் இராணுவவாத அரசியலை தோற்றுவிக்கும் முயற்சியா?

பதில் : இல்லை அவ்வாறு கூற முடியாது. காரணம் நாட்டை அரசியல்வாதிகளிடம் மீட்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன். கோதாபய ராஜபக்ஷ இடைநடுவிலேயே இராணுவத்திலிருந்து விலகி நாட்டை விட்டு சென்றுவிட்டார். நான் 38 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்திருக்கின்றேன். அதில் 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்றது. என்னுடன் ஒப்பிடுகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கூடுதல் அனுபவம் கொண்டவர். எனினும் அவர்கள் ஓய்வு பெற்று நீண்ட காலம் ஆகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கடமையில் இருந்து மிக அண்மையில் ஓய்வு பெற்றேன் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு அவர்கள் இருவரையும் விட எனக்கே அதிக பொறுப்பும் தகுதியும் இருக்கிறது.

கேள்வி : எல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன பாரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தம்மால் வெற்றி பெற முடியும் என்று அந்த கட்சி கூறுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : இல்லை. இது தவறான கணிப்பாகும். பிரதேச சபை என்பது தேசிய ரீதியில் ஒப்பிடும் போது மிகச் சிறிய பிரிவாகும். உள்ளுராட்சி அல்லது மாகாணசபைத் தேர்தல் முடிவைக் கொண்டு முழு இலங்கைக்கான வாக்கினை கணிக்க முடியாது. இதன் போது தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தொடர்பிலும், வேட்பாளர்கள் தொடர்பிலும் அந்த பிரதேசத்தின் வரலாறு தொடர்பிலும் அவதானிக்க வேண்டும். அதனடிப்படையில் குறித்த பிரதேசசபை உறுப்பினர் அந்த பிரதேசத்தில் அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தால் அவர் வெற்றி பெறுவார். இதே போன்று தான் ஏனைய பிரதேசசபைகளையும் அவதானிக்க வேண்டும்.

கேள்வி : யுத்தத்தின் பின்னர் உங்களுக்கும் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு எவ்வாறு இருக்கிறது ? அவரைப் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் : 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா சிறையிலடைக்கப்பட்டார். எனக்கு தேவையற்ற விடயம் என்றாலும், ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தான் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம். எனினும் இது குறித்து எனக்கு அவர் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் இல்லை. ஆனால் அன்றைய அரசியல் சூழலில் இவ்வாறு ஏற்பட்டது.

செய்ய தவறை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். எவ்வித விசாரணைகளும் இன்றி எம்மை இராணுவத்திலிருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் அவர் மீதான கௌரவம் இன்றும் இருக்கிறது. ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள் தொடர்பிலேயே அதிருப்தி ஏற்படுகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ மீது இராணுவ அதிகாரி என்ற ரீதியில் மரியாதை இருக்கிறது. அவர் மாத்திரமல்ல இராணுவத்தை நேசிப்பவன் என்ற ரீதியில் இராணுவ சீருடை அணிபவர்கள் அணிந்தவர் என்று அனைவர் மீதும் மரியாதை இருக்கிறது.

கேள்வி : யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் நல்லிணக்கம் , தேசிய இனப்பிரச்சினை என்பவற்றை வழங்குவதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது குறித்து உங்கள் நிலைப்பாடு ?

பதில் : தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான நிலைப்பாடு காணப்படுவது உண்மையாகும். அரசியலமைப்பிற்கமைய நாட்டின் ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதியானவர் கட்சிக்குள் சிறைப்படுத்தப்பட்ருந்தால் இனவாத , மதவாத செயற்பாடுகளை தடுக்க முடியாது. கட்சிக்குள் இருப்பவர்கள் இனம், மதம் என்று பிரிந்து செயற்படுகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும். எனவே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கட்சி சாரா ஜனாதிபதியாகவே செயற்படுவேன். இதன் மூலமே நீங்கள் மேற்கூறிய விடயங்களுக்கு தீர்வினை வழங்க முடியும்.

கேள்வி : கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தேர்தல் பிரசார கூட்டங்களின் போது வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றனர். இவ்வாறிருக்க நீங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் என்ன?

பதில் : முன்னாள் இராணுவ தளபதி என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளேன். ஒழுக்கமாக நாம் சேவையாற்றியமையால் ராஜபக்ஷவோ அல்லது வேறு யாரும் எமது பணிசார்ந்த விடயங்களில் தலையிடவில்லை. இவ்வாறிருக்கையில் என்னால் அவர்களைப் போன்று பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது.

பிரதான வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியானால் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகக் கூறுகிறார். எவ்வாறு அனைத்தையும் இலவசமாக வழங்குவது ? அதற்கான நிதி யாருடையது ? வலது கரத்தில் வாங்குவதை இடது கரத்தில் கொடுப்பதைப் போன்றதே இவ்வாறான வாக்குறுதிகளாகும். தொடர்ந்தும் இவ்வாறான பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது.
இம் மாதம் 23 ஆம் திகதி நாம் எமது கொள்ளை பிரகடனங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம். அவற்றில் குறுகிய காலத்தில் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களும், நீண்ட காலத்தில் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களும் பாகுபடுத்தி தெளிவுபடுத்தப்படும்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் என்பது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும். பொருளாதார வளம் இன்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினமாகும். காரணம் தேசிய பாதுகாப்பென்பது பெறுமதியானதாகும். அத்தோடு கடன்வாங்கி இதனைச் செய்யவும் முடியாது. எனவே பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பாரியளவு ஊழல் மோசடிகள் காரணமாகவே இலங்கை வறுமையான நாடாக இருக்கிறது. இலங்கை வறுமையான நாடு என்று கூறுவதைவிட வறுமைபடுத்தப்பட்ட நாடு என்று கூறுவதே பொறுத்தமாக இருக்கும். அமைச்சரவை எண்ணிக்கையை 20 ஆகக் குறைப்பதால் பாரிய செலவு தடுக்கப்படு;ம். அவ்வாறு குறைப்பதற்கான அதிகாரம் 19 ஆம் அரிசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது என்னால் வழங்கப்படும் விஷேட வாக்குறுதியாகும். பெண்களுக்கான பல விடயங்கள் எமது கொள்ளை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனது அரசாங்கத்தில் பெண்ணொருவர் பிரதமாராவதை நான் வரவேற்கின்றேன்.

கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் என்ன கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறீர்கள் ?

பதில் : இலங்கை என்பது ஒரு நாடு. நாட்டு பிரஜைகள் அனைவரும் ஒரே குடுபத்தைச் சேர்ந்தவர்கள்.  இலங்கையர் " என்பதே இந்த குடும்பத்தின் பெயராகும். இதற்குள் சிங்களம், தமிழ், முஸ்லிம், கிருஸ்தவம் என்ற அனைவரும் உள்ளடங்குகின்றனர். ஆனால் இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதால் ஒரு குடும்பத்தின் தலைவர் போன்று இவர்கள் ஏனையோரை வழிநடத்த வேண்டும். நான் அவ்வாறான ஒரு தலைவனாக செயற்படுவேன் என்பதை அனைத்து இன மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இதில் யார் முதலில் தோன்றியவர் என்பது பிரச்சினையல்ல. இவ்வாறு எண்ணுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பது அரசியல் கட்சிகளே ஆகும். சில இனங்களை அல்லது மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் காணப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தான் தீர்மானித்தனர். அந்த தீர்மானமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதான காணமாக அமைந்தது.

இதன் மூலம் அரசியல்வாதிகளே மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சில மதகுருமார்களும் இதில் உள்ளடங்குகின்றனர். இதன் மூலம் தவறான வழியிலேயே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். எனவே முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் கட்சி சாராமல் செயற்படுமாறு கேட்டுக்கொள்றேன்.

ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி பரவலாக பேசப்பட்டது. அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனினும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இவை அனைத்தும் மறைந்துவிட்டன. காரணம் மக்கள் மத்தியில் இவ்வாறான பிரிவினையை ஏற்படுத்தியவர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்கு முஸ்லிம் வாக்குகள் அவசியமாகின்றதால் அவரே இவற்றை நிறுத்தியுள்ளார். எனவே மக்கள் இவற்றை புரிந்து இம்முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.

கேள்வி : கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இராணுவத்தினர் வழங்கும் வாக்குகளை சிதைப்பதற்காகவே நீங்கள் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டுகிறது. இது உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : நான் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேர்தலில் களமிறங்கியுள்ளேன். யாருடைய வாக்குகளையும் சிதைப்பதற்காக அல்ல. ஊழல் மோசடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவும், இந்த முறைமையை மாற்றியமைப்பதற்காகவும் பொது மக்களுக்குள் ஒருவனான நான் நாட்டின் தலைவராக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

சிலர் தமது குடும்பத்துக்காகவே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் எனக்கு அவ்வாறு எந்த தேவையும் இல்லை. வாக்குகள் சிதைவதாக அவர்கள் கூறுவது உண்மை. காரணம் அவர்கள் அரசியல் மூலமாகத் தான் வாழ்கின்றனர்.


1 comment:

  1. You are an eligible candidate with qualities and qualifications, though since you are a new face for politics, it is better to go along with a good alliance...

    ReplyDelete

Powered by Blogger.