Header Ads



யூஸுப் முப்தி கடந்துவந்த பாதையில், மறக்கமுடியாத ரவூப் ஹாஜியார்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மறக் முடியாத நபர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர். அவர்கள் ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்தின் திசை வழியை மாற்றி விட்டவர்கள்.கடந்து வந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் அந்த மகத்தான மனிதர்களின் நினைவுகள் அழிக்க முடியாமல் இதயத்தில் நிரம்பியிருக்கின்றன.

ஒரு மரம் வளர்ந்து விருட்சமாகி கம்பீரமாக காட்சியளிப்பதற்கு மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர்கள்தான் மூல காரணம்.அது போலத்தான் ஒரு மனிதன் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் பலர் வேர்களாக அவனைத் தாங்க வேண்டியிருக்கிறது.

ஒருவர் நல்ல பிரஜையாக சமூகத்தில் மிளிர்வதற்கு நல்ல குடும்பப் பின்னணி, சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல், பொருளாதாரப் பலம் என பல காரணிகள் பங்களிப்புச் செய்கின்றன.

அந்த அடிப்படையில் நான் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைவதற்கு பக்கபலமாக இருந்த ஒருவரைப் பற்றி இங்கு பேச விரும்புகிறேன்.

இப்பதிவு மற்றவர்களை உருவாக்கி விட வேண்டும், ஒரு நிலையான தர்மத்தைச் செய்ய வேண்டும் என்று ஆவலாய் இருப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்ற நோக்கில் இதனைப் பதிவு செய்கிறேன். பௌதீக வளங்களுக்கு தர்மமாக செலவளிப்பதை விடவும் மனிதவளங்களை தர்மமாக விட்டுச் செல்வது உயர்ந்ததாகும். இது நபியவர்களின் முன்மாதிரியும் கூட.

எனது மத்ரஸாக் கல்வியை முடித்துக் கொண்டு ஒரு ஆசானாக கட்டுக்களை புர்கானிய்யா அரபுக் கலாசாலையில் உமருத்தீன் ஹஸ்ரத்துடைய நிர்வாகத்தில் இணைந்து பல வருடங்கள் பணியாற்றினேன். மத்ரஸாவில் கற்பிக்கும் ஒருவரின் சம்பளத்தை உங்களால் ஊகிக்க முடியும். இறைவனின் அருளால் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

பெற்றோர் தந்த ஒழுக்கமும், நல்லறிவும் எப்போதும் பக்க பலமாகவே இருந்தது. என்னை ஆளாக்கி அழகு பார்ப்பதற்கு அவர்கள் எத்தனையோ துயர்களை கடந்திருக்கிறார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிப்பானாக.

நான் கண்டியில் இருக்கும் கால கட்டத்தில்; கந்துரட்ட ஹாஜியார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கக்கூடிய ரவூப் ஹாஜியார் அவர்களுடனான தொடர்பு கிடைத்தது

எப்போதும் மலர்ந்த முகம அவருக்கு. புன்னகையோடு உரையாடுபவர். அவருடைய தாயுடடைய ஊரும் எங்களுடைய ஊரும் ஒன்றாக இருந்தது. அப்போது அவர் கடுகண்ணாவையில் இருந்தார்.ஓரளவு நெருக்கமாக இருந்த அவருடனான உறவு அவர் கண்டிக்கு வந்ததன் பின்னர் இன்னும் ஆழமானது.இருவருக்கும் இடையில் ஒரு மானசீகமான அன்பு வளர்ந்திருந்தது.

அவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் ஒருபோதும் நான் அவரிடத்தில் உதவிகள் எதுவும் கேட்டதில்லை. ஒரு நாள் இரவு இஷாவுக்கு பின் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று மத்ரஸா நேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஏதாவது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாமே என்றார். நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

எங்கள் நிறுவனத்தில் பலர் பொருட்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்கின்றனர். நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஏன் அதற்கு முயற்சிக்கக் கூடாது என்றார்.

அந்தச் செய்தி என்னைச் சந்தோசத்தில் ஆழ்த்தியது அன்றைய இரவு மகிழ்ச்சிகரமான, கனவுகள் நிறைந்த ஒரு இரவாக இருந்தது.

அன்புப் பெற்றோரிடத்தில் இந்தச் செய்தியைச் சொன்னேன். அவர்கள் சம்மதித்து துஆவும் செய்தார்கள்.

என் வாழ்க்கைப் பயணத்தில் இப்போது நான் பகுதி நேர வியாபாரியாக என்னுடைய முதல் நாளை ஆரம்பித்தேன். அந்த நாள் என் வாழ்க்கையின் புதிய திசைகளை வரையப் போகும் ஒரு நாள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

மத்ரஸா பாடங்களை முடித்த பின்னர் பில் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு நான் கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்தேன்.

எந்த நகரத்தில் ஒரு ஆலிமாகவும் கதீபாகவும் இருந்தேனோ அந்த நகரத்தில் ஒரு வியாபாரியாகவும் வளம் வர ஆரம்பித்தேன்

நண்பர் இக்பால் ஹாஜியாரின் கடைக்குள்(Free Trade Center) முதலாவதாக நுழைந்தேன். ஒரு வியாபாரம் ஆரம்பித்திருக்கிறேன். என்னிடம் பொருள் வாங்குவீர்களா என்று கேட்டேன்.

அவர் என்னை வரவேற்ற விதமும் என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதும், எனது மனதில் இன்னும் நிழலாடுகிறது.

ஒருவருடைய நல்ல முயற்சியை பாராட்டி ஊக்குவிப்பது எத்தனை சிறந்த நன்மையைக் கொண்டுவந்து தரக் கூடியது.

இக்பால் ஹாஜியார் என்னிடம் சுமார் 200 டஸன் குடைகளுக்கான ஓடரை தந்தார். மிகுந்த சிரமப்பட்டு அவற்றை நான் குறித்துக் கொண்டேன். அதற்கு முன்பு அந்தக் குடைகளின் வகைகளையும் பெயர்களையும் நான் அறிந்திருக்கவில்லை. ஒரு புதிய உலகில் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன்.

நான் வெளியே வரும் போது மீண்டும் அழைத்து அவரது சகோதரர் மர்ஹும் நியாஸ் ஹாஜியாரை தொலைபேசியில் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். அவரும் என்னை ஊக்கப்படுத்தி 230 டஸன் குடைகளை ஓடர் செய்தார்.

மிகுந்த மகிழ்ச்சியோடு நான் வெளியேறி ரவூப் ஹாஜியாரிடத்தில் தொலைபேசி மூலம் உரையாடினேன். ஒரே நாளில் எனது ஓடர்களைப் பார்த்து அவர் வியப்படைந்தார்.

இந்த ஓடர்களை அந்தக் கடைகளுக்கு அனுப்பி வைக்குமாறு நான் ஹாஜியாரிடத்தில் கேட்டுக் கொண்டேன். அப்போது அவர் எனக்குச் சில பாடங்களைக் கற்பித்துத் தந்தார்.

நீங்களாக தொழிற்சாலைக்குச் சென்று அந்த ஓடர்களை கொடுத்து, வாகனத்தில் ஏற்றும் போது கணக்கெடுத்து நுழைவாயிலில் அனுமதி பெற்று அதே வாகனத்தில் கடைக்குப் போய் பொருட்களை ஒப்படைத்து அவற்றைப் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் வியாபாரத்தின் ஒரு பகுதி நிறைவடைகின்றது. அதன் பிறகு சில நாட்களில் அங்கு பணத்தை வசூலித்து கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார்.

இது ஒரு பெரிய சுமையாகவே எனக்குத் தோன்றியது. ஏனெனில் வியாபார அனுபவம் என்பது எமது குடும்பத்திற்குப் புதியது. எனக்கும் புதியது. இதனைப் புரிந்து கொண்ட ஹாஜியார் எனக்கு ஒரு சலுகையை ஏற்படுத்தி வாகனத்தில் பொருட்களை ஏற்றி மத்ரஸாவிற்கு அனுப்பி வைத்தார்.

மிகப் பெரும் கனவுகளோடு அஸர் தொழுகையை முடித்துக் கொண்டு நான் வெளியே வருகிறேன். 'கந்துரட்ட'என்ற நாமம் பொறிக்கப்பட்ட லொறி அங்கே நிற்கிறது.சாரதி யூஸுப் முப்தி யாரென்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த லொறியில் ஏறிக் கொண்டேன். மத்ரஸா மாணவர்கள,; ஆசிரியர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க நான் புறப்பட்டேன்.

ஹனபி பள்ளிக்கு அண்மையில் வாகனம் நின்றது. மக்கள் என்னைப் பார்த்த வண்ணம் போய்க் கொண்டிருந்தார்கள்.எனக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது.

பொருட்களை இறக்குவதைப் பதிவு செய்து கொண்டேன். முதல் நாள் வியாபாரம் என்பதால் இக்பால் ஹாஜியார் தனது சொந்தக் காசோலையில் இருந்து பெறுமதியை எழுதிக் கொடுத்தார்.

பின்னர் வந்த நாட்களில் கண்டி மாநகரில் உள்ள எல்லாக் கடைகளுக்கும் போல ஏறி இறங்கியிருந்தேன். எனக்குள் புது நம்பிக்கையும் தைரியமும் பிறந்திருந்தது.பின்னர் குருநாகலைக்கு பயணமானேன். அங்கும் பல கடைகளில் வியபாரம் செய்தேன். அதே நேரம் தம்புள்ளைக்குப் போனேன். இப்படியாக பல இடங்களுக்கும் போக முடிந்தது. இதனால் இன மத பேதங்களைக் கடந்து பலருடன் உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போது நான் வியாபாரத்தை விட்டிருந்தாலும் அந்த உறவுகளுடனான தொடர்பாடலை விட்டுவிடவில்லை.

இப்படியாக நாட்கள் போய்க் கொண்டிருந்தன.கண்டி நகரத்தில் ஒரு கடை திறக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது.சொந்தமாக ஒரு கடையை வாங்கி மூன்று வருடங்களாக நடாத்தி வந்தேன். முழு நேரமாக ஒரு கடையில் நான் இருப்பது எனது தஃவாப் பணிகளுக்கு தடையாக அமைந்தது உண்மைதான்.

நான் வியாபாரத்தில் மூழ்கிப் போயிருப்பதை உணர்ந்த ஹாஜியார் அவர்களும் இனி இதனை நிறுத்தி விட்டு முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என ஆலோசனை சொன்னார்கள். ஒரு முறை சுவாரஸ்ய்மாக வியாபாரம் செய்ய நிறையப்பேர் இருக்கிறார்கள். நல்லதைச் சொல்லி சமூகத்தை வழிநடாத்தக் கூடியவர்கள் சிலரே இருக்கின்றார்கள் அல்லவா என்றார்கள்.

கண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். கண்டி நகரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு வர்த்தகர் பாரியதொரு தொகை கொடுக்க வேண்டிய நிலையில் தலைமறைவாகி விட்ட சம்பவம் அது. இச் செய்தி நகரம் முழுக்க காட்டுத் தீயாகப் பரவியது.

இச் சந்தர்ப்பத்தில் இக்பால் ஹாஜியார் தொலைபேசியில் அழைத்து உடனே என்னை வரும்படி கூறினார். உங்களது வியாபார நடவடிக்கைகளில் உங்களுக்கு வர வேண்டிய தொகை எவ்வளவு எனக் கேட்டார்.

(தலைமறைவாகிய வர்த்தகருக்கும் எனது வியாபாரத்திற்கும் தொடர்பு இருக்கவில்லை) கூமார் 11 மில்லியன் வரவேண்டி இருக்கிறது என்றேன். என்மீதிருந்த அன்பின் காரணமாக உடனடியாக ரவூப் ஹாஜியாருக்கு தொடர்பை ஏற்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை மக்களை நம்பி ஒப்படைத்திருக்கிறார். நடந்திருப்பது போன்ற ஒரு நிலை இவருக்கு ஏற்படுமாயின் அது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகிவிடும். எனவே நிதானமாக நடந்து கொள்ளும்படி சொல்லுமாறு கூறினார்.

அதற்கு ரவூப் ஹாஜியார் சொன்ன பதில் என்னை நிலைகுழையச் செய்து விட்டது.

வியாபாரம் என்றால் இலாபம் நஷ்டம் வரத்தான் செய்யும்.அதையும் வியாபாரத்தில் அனுபவிக்க வேண்டும்.அந்த அனுபவத்தை எனது பிள்ளைகளுக்கு கொடுப்பது போல இவரையும் ஒரு பிள்ளையாக நினைத்து இவருக்கும் கொடுக்க விரும்புகிறேன். ஏன்ற கருத்தைச் சொன்னதும் இக்பால் ஹாஜியார் நம்பிக்கையுடன் தட்டிக்கொடுத்து வியாபாரத்தைத் தொடருமாறு என்னை ஊக்கப்படுத்தினார்.

பின்னர் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்ட பின் வியாபார நடவடிக்கைகளிலிருந்து ஓய்வு பெற்று ஏனைய துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

இன்று நான் என் வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்க்கும் போது இறைவன் எனக்குத் தந்த நிஃமத்துக்களை நினைத்துப் பார்க்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.

நான் இத்தனை உயரத்தை அடைய ஏணியாய் இருந்தபெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் ரவூப் ஹாஜியாருக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக. அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு நாம் பல உதவிகளைச் செய்ய முடியும். ஆனாலும் நிலையான ஒரு உதவியைச் செய்யும் போது அது பல சந்ததிகளுக்கு நன்மையாக அமைகிறது.

எத்தனையோ மனிதர்கள் சமூகத்தின் விடிவுக்காக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

அத்தகையோர் பெரும்பாலும் வறுமையினால் பீடிக்கப்பட்டவர்கள்.அப்படியான உலமாக்கள்,சமூகப் பணியாளர்கள், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் போன்றோருக்கு இது போன்ற ஒரு உதவியைச் செய்து எமது தோல்களில் அவர்களைத் தாங்கிக் கொண்டால் சமூகத்தை தமது தோல்களில் அவர்கள் தாங்கிக் கொள்வார்கள்.கதீஜா அம்மையாரின் பொருளாதார பலம் முஹம்மத்(ஸல்) அவர்களைத் தாங்கியது போல.

மனிதர்களைத் தட்டிக்கழிக்கும் உலகில் அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து உதவி புரிவது அடுத்தவர் மனதில் தாம் வாழ்வதற்கு காரணியாக அமைகிறது.அந்த வாழ்க்கை மரணத்தின் பின்னும் நீள்கிறது.

நாம் வாழும் காலத்தில் பிறரையும் வாழ வைப்போம்.இறைவனின் திருப் பொருத்தத்தைப் பெறுவோம்.

No comments

Powered by Blogger.