Header Ads



கோத்தாபயவின் ஆதரவாளர்களை, எச்சரித்த தலைமை நீதிபதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று -04- மாலை தீர்ப்பறிவிக்கும் போது, கோத்தாபயவின் ஆதரவாளர்கள், ஆதரவு சட்டத்தரனிகள் பலர்  கரகோஷம்  செய்தும், மகிழ்ச்சியில் சப்தமிட்டதும்  நீதிமன்றத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற நடவடிக்கை நிறைவுபெறாத நிலையில், தீர்ப்பின் இடை நடுவே இவ்வாறு கரகோசஷம் எழுந்தமையினால் மன்றில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.  

இந்த சம்பவத்தையடுத்து கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உடனடியாகவே  பின்னோக்கி திரும்பி  அமைதி கொள்ளுமாறு கூறியதுடன், இந்த செயற்பாடுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை நீதிபதிகளிடம் வெளியிட்டார்.

எவ்வாறாயினும் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட , இந்த நடவடிக்கையை மிக மோசமான , நீதிமன்றை அவமதிக்கும் செயல் என வர்ணித்ததுடன், இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த  அல்லது அச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை சட்டம் பார்த்துக்கொள்ளும் என எச்சறித்தார்.

இதனைவிட நீதிமன்ற வளாகத்திலும் கோத்தாவுக்கான ஆதரவு கோஷங்கள் எழுப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பட்டாசுகள் கொளுத்தப்பட்டும் மகிழ்ச்சி பரிமாறப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.