Header Ads



வடபுல முஸ்லிம்களின் வலிகளையும், வாழ்வியலையும் வெளிப்படுத்திவரும் கலாபூஷணம் யாழ் அஸீம்

- பரீட் இக்பால் -

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ், முஸ்லிம்களின் வலிகளையும் வாழ்வியலையும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக எழுதியமைக்காக யாழ் முஸ்லிம் இணையத் தளம் விருது வழங்கி கௌரவித்தவர்தான் யாழ் அஸீம் ஆவார்.

 'நாம் வருவோம் மீண்டும் வருவோம் ஏந்துகின்ற எங்கள் கைகள் இறைவனையே நோக்கி எழும் எங்கள் கைகளிலும் இரு ஆயுதம் அன்பு ஒரு ஆயுதம் இறை பிரார்த்தனை மறு ஆயுதம் எங்கள் ஆயுதம் இயங்கும் அந்நாளில் நாம் வருவோம் மீண்டும் வருவோம் ! தூசுகளாகப் பறந்த நாம் பாறைகளாய் மீண்டும் வருவோம். விதைகளாக வீழ்ந்த நாம் விருட்சங்களாய் மீண்டும் எழுவோம். 

இக் கவிதையை 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தினகரனில் எழுதியவர் தான் 'யாழ் அஸீம்' ஆவார்.

யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியைச் சேர்ந்த அல்லாபிச்சை அப்துல்காதர் ஸூபைத்தா தம்பதியினருக்கு 1952 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பத்து பிள்ளைகளுள் மூத்தவராக அஸீம் பிறந்தார்.

அஸீம் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.முஹம்மதியா முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரியிலும் கற்றார்.

வைத்தியராக்க வேண்டும் என்ற கனவுடன் தனது மகனைக் கற்பித்த போதும் அஸீமுக்கு பத்தொன்பது வயதாக இருக்கும் போதே அவரது தந்தை மாரடைப்பால் இறையடி எய்தினார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆறு சகோதரிகளையும் மூன்று சகோதர்களையும் கொண்ட குடும்பத்தின் மூத்த சகோதரனான அஸீம் இளம் வயதில் தந்தையை இழந்ததால் ஏற்பட்ட குடும்பச் சுமை காரணமாக ஆசிரிய பணியில் இணைந்தார். 1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வவுனியா சாலம் பைக்குளம் அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் தொடர்ந்து ஆறு வருடங்கள் அங்கு கடமையாற்றினார்.

ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் வவுனியா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் கடமையாற்றினார். விஞ்ஞான , கணித ஆசிரியராக இவர் கடமையாற்றிய காலத்தில் இவரிடம் கற்ற மாணவர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வைத்தியர்களாக கடமையாற்றுகின்றனர். குறிப்பாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய வரும் தற்போது ஈரான் நாட்டின் உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றும் கலாநிதி அனீஸ் அவர்கள் இவரது மாணவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகிச் சென்ற இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை ஆகியனவற்றிலும் யாழ்.ஸ்ரான்லி (கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) கல்லூரியிலும் ஐந்து வருடங்களும் கற்பித்தார்.

1990 ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது கொழும்புக்கு இடம் பெயர்ந்து கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் இளைப்பாறும் வரை இவர் கடமையாற்றினார்.

அதன் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் இணைந்து இன்று வரை சிறப்பாக பணியாற்றுகிறார்.

இவரது தந்தை அப்துல் காதர் பத்திரிகைகளில் பிரபல்யமாகாவிட்டாலும் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவராவார். தந்தையின் வழிகாட்டலே தனது எழுத்தாற்றலுக்கு காரணமாக அமைந்தது என யாழ் அஸீம் கூறுகிறார்.

வடபுல முஸ்லிம்களின் வாழ்வியலையும் வலிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களுள் யாழ் அஸீம் குறிப்பிடத்தக்கவராவார். இவர் வடபுல முஸ்லிம்களின் விடயமாக பல நூற்றுக்கணக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியுள்ளதுடன் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பல மேடைக் கவியரங்குகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொது ஊடகத்துறை டிப்ளோமா பட்டத்தை பெற்ற இவர் இலக்கியப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சால் இலக்கிய பணிகளுக்காக வழங்கப்படும் உயர் விருதான வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்ற ஒரே யாழ். முஸ்லிம் இவர்தான்  - என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவரது கவிதைகள் இலங்கை பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் மட்டுமின்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் (2002) வெளியிடப்பட்ட கவிதை மாநாட்டில் இவரது கவிதைககள் இடம் பெற்றுள்ளன.

மேலும் யாழ். முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினால் (ஜே.எம்.ஆர்.ஓ) வெளியிடப்பட்ட யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை எனும் வரலாற்று நூலாக்க குழுவிலும், தேசிய மீலாத் விழாவை (2017) முன்னிட்டு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட யாழ் முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வியலும் எனும் வரலாற்று நூலின் நூலாக்க குழுவிலும் யாழ் அஸீம் இடம் பெற்றார்.

இலக்கியப் பணியுடன் சமூக நிறுவனங்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (குழு உறுப்பினர் ) ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னனி (உப செயலாளர்) மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (குழு உறுப்பினர்) முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் (செயற்குழு உறுப்பினர்), (க.பொ.த.  சா.த பரீட்சையில் 9 ஏ பெற்ற மாணவர்களை கௌரவப்படுத்தும் அமைப்பு
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் - மை மூன் தம்பதியினரின் மகள் மஸீஹாவை 21.05.1989 இல் திருமணம் செய்தார். கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலான இவரது இலக்கிய பயணத்தில் பல பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட விமர்சன விருதுக்கான போட்டியில்  தமிழ் சேவையில் முதலாம் இடத்திற்கான விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழ் - முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் வண்ணம் எழுதிய ஆக்கங்களுக்காக , 2007 இல் லண்டன் வில்லியம்ஸ் கல்லூரியுடன்; இணைந்து இன உறவுகளையும், தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான கேந்திர நிலையம் விருது வழங்கி கௌரவித்தது.

2008 ஆம் ஆண்டு தேசிய பத்திரிகைகளில் வெளிவந்த சிறு கதைகளுள் சிறந்த சிறுகதைக்கான முதலாம் பரிசை தமிழ்க் கலைஞர் வட்டத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

வடபுலச்சான்றோர் விருது (2006) – மீள் குடியேற்ற அமைச்சிடமிருந்து பெற்றுக் கொண்டார் கவிச்சுடர் (2007) ஸ்ரீலங்கா, முஸ்லிம் கலைஞர் முன்னணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். தேச கீர்த்தி(2009)  - அகில இன நல்லுறவு – ஒன்றியம் கலாபூஷணம் (2008) கலாசார அலுவல்கள் பண்பாட்டலுவல்கள் அமைச்சு கலைத்தீபம் (2011) – தடாகம் இலக்கிய வட்டம் கால்ய ஸ்ரீ (2017 அகில இலங்கை தேசிய கவி சம்மேளனம் அகஸ்தியர் விடுதி (2017) தடாகம் இலக்கிய வட்டம் வடமாகாண  ஆளுநர் விருது (2011) வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு இலக்கிய பணிக்கான விருது (2017 ) – உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா – மாநாடு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்வையும் வலிகளையும் வெளிப்படுத்தும் இவரது கவிதைகளை தொகுத்து 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலை 2012 இல்  தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் வெளியிட்டார். இவரது கவிதை நூலானது 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதை நூல்களுள் மிகச் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பட்டு, கொடகே தேசிய சாகித்திய விருதையும் பெற்றுக் கொண்டார்.

இலக்கியப் பணியில் கொடி கட்டி பறக்கும் இவர் மேலும் மேலும்; இலக்கியத் துறையில் வல்லவராக திகழ அல்லாஹ் கிருபை செய்வானாக.

ஆமீன்.

No comments

Powered by Blogger.