Header Ads



"சந்திரிக்காவை விமர்சிப்பதற்கு, தயாசிறிக்கு அருகதையில்லை"

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று மூன்று பிரிவுகளாக பிளவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவளை மாநகர சபையின் முன்னாள் மேயரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான எச்.ஜி புத்ததாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை எச்சரிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மொட்டுக் கட்சி மூன்று பிரிவாக பிளந்துவிட்டது. எஸ்.பி. திஸாநாயக்க பேசாமல் இருப்பதே சிறந்தது என்று விமல் வீரவன்ச கூறுகின்றார். எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு இன்று விதி சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிட்டு மொட்டுக் கட்சிக்கு வந்த எஸ்.பி திஸாநாயக்க போன்றவர்களை விமல் வீரவன்ச இன்று நன்றாகப் புரிந்துவைத்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியினரை ஒருபுறம் இழுத்துக் கொள்ளும் பொதுஜன முன்னணியினர் மறுபுறத்தில் அவர்களுடைய வாய்க்குப் பூட்டு இடுகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதனையே செய்வார்கள்.

சுதந்திரக் கட்சியை பாதுகாக்கின்ற அமைப்பிற்கு 100க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் 32 பேர் உட்பட பலரும் இணைந்திருக்கின்றனர்.

எனவே தயவுசெய்து எமது கட்சியின் பாதுகாப்பு இயக்கத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவி சுதந்திரக் கட்சியில் ஒட்டிக்கொண்ட தயாசிறி ஜயசேகர இன்று சந்திரிகா குமாரதுங்க அம்மையாரை எச்சரிக்கின்றார்.

இதனை நாம் கண்டிக்கின்றோம். சந்திரிகா அம்மையாருடன் நாங்கள் எமது பயணத்தை வேகப்படுத்தவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.