Header Ads



யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் சுல்தான் அப்துல் காதர் - ஆயிஷா தம்பதியினருக்கு 1919 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுள் மூத்த மகனாக பிறந்தார்.  இவருக்கு ஒரு சகோதரரும் (ஹமீட்) ஒரு சகோதரியும் (லைலா) ஆவார்கள் இவரின் தந்தை சுல்தான் அப்துல் காதர்தான் யாழ் சோனகத் தெருவில் முதலாவது விதானை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் தனது கல்வியை கில்னர் கல்லூரியில் கற்றார். இவர் கல்லூரிக் காலங்களில் கல்விச் செயற்பாட்டிலும் பேச்சு வன்மையிலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். இவர் லண்டன் மெட்ரிகுலேஸன் பரீட்சையில் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவரும் தந்தையைப் போன்று விதானை (கிராமத் தலைவர்) ஆகி யாழ்.முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவைகள் செய்து யாழ்.முஸ்விம்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்.முஸ்லிம்கள் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்கல்வி  படிப்பதற்கு யாழ்.முஸ்லிம் வட்டாரத்திற்கு வெளியே சென்று படிக்க வேண்டிய சூழல் இருந்த காலகட்டத்தில், யாழ்.முஸ்லிம்களுக்கு ஒரு கல்லூரியை ஸ்தாபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த சங்கத்தில் காரியதரிசியாக இருந்து ஒஸ்மானியா கல்லூரி உதயமாக அயராது பாடுபட்டவர் என்பது முக்கியமான விடயமாகும்.
றஸீன் விதானையார் ஒஸ்மானியா கல்லூரிக்கு தேவையான காணி ஒன்றை வாங்குவதற்காக தனது வீட்டை அடகு வைத்து பணம் பெற்று கொடுத்தார். பிறகு கிடைத்த வசூல்களில் இருந்து கடன் தீர்க்கப்பட்டது. அடுத்து மானிப்பாய் வீதி முஹியித்தீன் பள்ளிவாசலுக்கான புனர் நிர்மாணம் செய்ததும் முக்கியமான விடயமாகும்.

இலங்கை வக்பு சபை ஏற்படுத்தப்பட்டு பள்ளிவாசல் பரிபாலன சபைகள் தெரிவு செய்யப்படும் வரை றஸீன் விதானையார் மானிப்பாய் வீதி முஹியித்தீன் பள்ளிவாசலை பராமரிக்கும் குழுவில் ஒருவராக இருந்தார். இவர்களின் காலத்தில் தான் பள்ளிவாசல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. 

இவர் யாழ். சோனகத்தெருவைச் சேர்ந்த வைத்தியர் அப்துல் அஸீஸ் அவர்களின் மகள் ஷபியாவை திருமணம் செய்தார். றஸீன் - ஷபியா தம்பதியினருக்கு இரு ஆண் பிள்ளைகள் ( இமாம், சூபி) ஆவார்கள். இவரது மகன் இமாம் அவர்கள் சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இமாம் அவர்கள் தான் யாழ்ப்பாண முஸ்லிம்களில் முதலாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

றஸீன் விதானை அவர்கள் யாழ்ப்பாண கச்சேரியில் ஒரே ஒரு முஸ்லிம். இவருக்கு அதிகாரிகளிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் விதானைமார்களின் ஒன்று கூடலின் போது, மேலதிக அரசாங்க அதிபர் திரு.பெருமைனார் அவர்கள் றஸீன் விதானையை குறிப்பிடும் போது இவர் ஒரு மேலதிக அரசாங்க அதிபரானால் அறிவும் ஆற்றலும் நிறைந்த இவர் நிர்வாகத்தை திறம்பட செயலாற்றுவார் என்று புகழ்ந்தார். இது றஸீன் விதானையாரின் அறிவு, ஆற்றல், நிர்வாகம் ஆகியன சிறந்து விளங்கின என்பது தெரிய வருகிறது.

றஸீன் விதானை வீட்டுத்தோட்ட செய்கையில் ஆர்வமுடையவராக  இருந்ததால் தனது வீட்டு வளவில் பயன்தரும் செடி, கொடிகளையும் பூக்கன்றுகளையும் வளர்த்தார். மேலும் மற்றையவர்களுக்கு விதைகளையும் கன்றுகளையும் இலவசமாக கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1952 இல் யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலைக்கு இலங்கையின் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் வருகை தந்த போது  பிரதமரின் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்தது றஸீன் விதானை தான். றஸீன் விதானையாரின் மொழி பெயர்ப்பை, பிரதமருடன் வருகை தந்த ஓர் அதிகாரி பாராட்டி கைகுலுக்கினார்.

அன்னார் 1965 இல் தனது 46 ஆவது வயதில் இறையடி எய்தினார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்துள்ள சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. 

ஆமீன்

No comments

Powered by Blogger.