Header Ads



பாதுகாப்பான நாட்டை எங்களால், மட்டுமே வழங்க முடியும் - கோத்தபாய

தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமுல்செய்த வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நாடு முகங்கொடுத்தது எனவும், மீண்டும் எமது பாதுகாப்பான நாட்டை வழங்குவோம் என்பதை உறுதியளிக்கின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யாமல் மாறாக போரை வெற்றிகொண்ட இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சியையே நல்லாட்சி அரசாங்கம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டது மட்டுமன்றி மீண்டும் தீவிரவாதம் தலைதூக்காமலிருப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனால்தான் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலும் நாட்டின் இறையான்மை, தனித்துவம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ய முடிந்தது.

அன்று முப்படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவு என்பவற்றை ஒருங்கிணைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எந்தவொரு அறிவும் இல்லாத, அதாவது நாட்டின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கவில்லை.

அதனால் மீண்டும் குண்டுவெடிக்கும் நிலை ஏற்பட்டது. அன்று வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவினரால் தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டன.

ஆனாலும் நாட்டு மக்களை நினைக்காமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கான அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சரவையை பார்த்தால் பல்வேறு சக்திகளுக்கு அடிபணிகின்ற கட்டமைப்பாக உள்ளது. இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்ற வழிகளை அரசாங்கம் உருவாக்கியது.

அதன் பின்னர் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை போலிக் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு சிறை தள்ளியதோடு எமது பாதுகாப்பு வேலைத் திட்டங்களையும் இரத்து செய்தது.

விசேடமாக இனவாத மற்றும் அடிப்படைவாத தீவிரவாதிகளை அழிப்பதற்காக விசேட பிரிவொன்றையும் நாங்கள் ஸ்தாபித்திருந்தோம். அதற்காக அதிகாரிகளைப் பயிற்றுவித்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரிகளை வேறு பிரிவுக்கு மாற்றியதோடு வேலைத்திட்டங்களையும் இரத்து செய்தபடியினால்தான் இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே மீண்டும் எமது பாதுகாப்பான நாட்டை வழங்குவோம் என்பதை உறுதியளிக்கின்றேன். அதனை எங்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்” என கூறியுள்ளார்.

1 comment:

  1. உங்கள் பாதுகாப்பை அழுத்தகம கலவரத்திலிருந்து இப்போது வரை நங்கள் பாத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.