Header Ads



கோத்தாவின் இரட்டை குடியுரிமை விவகாரம் - இன்று நீதிமன்றத்தில் நடந்த சூடான வாதம்

குடியுரிமை சட்டத்தின் 19 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு மட்டுமே உள்ள நிலையில்,  கோத்தாபய ராஜபக்ஷவுக்கான குடியுரிமை சான்றிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கியுள்ளதாகவும், அது சட்டவிரோதமானது எனவும்  சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இன்று -02- மேன் முறையீட்டு நீதிமன்றில் வாதிட்டார்.

அதனால் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்வாறு இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டால் அது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும், அதனால் கோத்தாபயவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பனவற்றின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்குமாறும்  சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ கோரினார்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி,  மேன் முறையீட்டு நீதிமன்றில்  'செட்டியோராரி' எழுத்தானை மனு,  சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் அம்மனு  இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ இந்த வாதத்தை முன்வைத்தார்.

இதனையடுத்து முதலாம், 2 ஆம், 4 ஆம் மற்றும்  7 முதல் 10 வரையிலான பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே வாதங்களை முன்வைக்க ஆரம்பித்தார்.

அமைச்சர்வை நியமிக்கப்படாத போது,  விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிராத போது,  நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற ரீதியில் அமைச்சர்வையின் அதிகாரங்களை பயன்படுத்த சட்ட ரீதியிலான  உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே தனது வாதத்தில் சுட்டிக்கடடினார்.

அந்த அதிகாரத்தின் பிரகாரம்,  அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ  2005 இல் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளதாகவும்  அந் நடவடிக்கை சட்ட ரீதியிலானது என்பதே தமது நிலைப்பாடு எனவும்  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் இந்த மனு மீதன மேலதிக வாதங்கல் நாளை நண்பகல் 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி  அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்  இவ்வெழுத்தாணை கோரிய மனு  காலை 9.30 மணியளவில்  பரிசீலனைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.