Header Ads



கோத்தபய ஆட்சிக்கு வந்தால், மரண தண்டனைக் கைதி துமிந்த விடுவிக்கப்படுவாரா..? மரிக்கார் கேள்வி

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் சில தனியார் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் போது எமக்கு மிகச்சொற்பமான நேரமும், கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதிகளவான நேரமும் ஒதுக்கப்படுகின்றது.

 இவ்விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலையிட்டு, அனைத்து தரப்பினருக்கும் ஒரேவிதமான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தேர்தல்கள் ஆணையாளர் இப்போதே அச்சமடைந்து விட்டாரா என்றும் எமக்கு சந்தேகம் எழுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ, அவர் ஆட்சிக்கு வந்தால் சிறையிலுள்ள இராணுவத்தினரை விடுவிப்பேன் என்றார். 

அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பிள்ளையான் மற்றும் சிறையிலுள்ள துமிந்த சில்வா போன்றோரையும் விடுவிப்பாரா என்று அவரிடம் கேட்க விரும்புகின்றேன். இதனை நாட்டிற்குத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமாகும்.

அதேபோன்று பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிப்பதாகக் கூறிச்சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது மிகுந்த அவமரியாதையை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன மேடையில் ஏறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் சுதந்திரக் கட்சிக்காரர்களுக்கும் இதுவே நடக்கும்.

 இப்போதே சுதந்திர கட்சியினரின் நிலைமை இவ்வாறிருக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த தரப்பினர் திட்டமிட்டு சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிப்பார்கள்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமது வீட்டில் நடைபெறும் வைபவங்களுக்கு, மரணச்சடங்கிற்கு வருகை தருபவர்களுக்கு வாக்களிக்கும் தேர்தல் அல்ல. 

மாறாக நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், விவசாயம், வெளிநாட்டுக்கொள்கை உள்ளடங்கலாக முழு நாட்டையும் நிர்வகிப்பதற்கு அவசியமான சிறந்த கொள்கையைக் கொண்டிருப்பவர்களுக்கு இடையிலான போட்டியாகும் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.