Header Ads



சஜித்தின் நம்பிக்கையைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் - சரத்பொன்சேகா


நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி இன்று -16- வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகுவதற்கு முன்னர் அவருக்கு மிகச்சொற்ப நண்பர்களே இருந்தனர். அப்போது நானும் அவருடைய சிறந்த நண்பர். ஒருநாள் அவர், 'தற்போது என்னுடைய சட்டைப்பையில் இருக்கின்ற இரண்டு ரூபாய் பல மாதங்களின் பின்னரும் அப்படியே இருக்கும்' என்று கூறினார். இதிலிருந்து அவர் அரசியல் ஊடாக மக்களின் பணத்திலேயே வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்பது தெளிவாகின்றது. இத்தகைய நபர்களிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்?

அடுத்ததாக தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற கோத்தாய ராஜபக்ஷ 15 வருடங்கள் அமெரிக்காவில் வசித்தார். ஒருவர் 20 வருடம் இராணுவத்தில் சேவையாற்றினால் அவர் ஓய்வூதியத்தைப் பெற்று ஓய்வுபெற முடியும். கோத்தாபய ராஜபக்ஷவும் 20 வருடம் பூர்த்தியடைந்த பின்னர் ஒருநாள்கூட பணியில் இருக்கவில்லை. அவர் இன்றும் வெட்கமில்லாமல் எமது அரசாங்கம் வழங்கும் இராணுவத்திற்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்கின்றார். மஹிந்த குடும்பத்தினர் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிப்பதை சுனாமியின் போதிலிருந்து ஆரம்பித்தனர். தமது பெற்றோருக்கு நினைவுமண்டபம் அமைப்பதற்காக கொள்ளை அடிப்பவர்கள் மஹிந்த குடும்பத்தை தவிர வேறு யாராக இருக்க முடியும்? இத்தகையவர்களிடம் இருந்து மக்கள் எதனை எதிர்பார்க்க முடியும்?

அதேபோன்று கடந்த ஆட்சியில் கொழும்பை சுத்தப்படுத்துவதற்கு அபான்ஸ் ஊழியர்கள் 3000 பேர் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு 35000 ரூபா வீதம் செலுத்தப்படுவதாகவும் கோத்தாபாய ராஜபக்ஷ காண்பித்தார். ஆனால் உண்மையில் 1500 ஊழியர்களே பணியாற்றியுள்ளனர். எனவே எஞ்சிய 1500 பேருக்காக வழங்கப்பட்ட மாதாந்த ஊதியம் தலா 35000 ரூபா கோத்தபாயவினால் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் சரத்பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.