Header Ads



அரசியவாதிகள் சாத்தான்கள் வேதம் ஓதுவது போல் இருக்கின்றனர், அவர்களின் இரும்பு பிடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்

அரசியல்வாதிகளிடம் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதன் மூலமாகவே இந்நாட்டு மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை நிலைநாட்ட முடியும் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காகவே தான் அரசியல்வாதி அல்லாத நாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு விடுத்த விசேட செய்தி குறிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 70 வருடங்ளுக்கும் மேலாக அரசியல்வாதிகள்தான் இந்நாட்டை ஆட்சி புரிந்து வருகின்றனர். இவர்கள் குறுகிய சுய இலாப அரசியல் நோக்கங்களுக்காக நாட்டு மக்களை காலம் காலமாக பிரித்து வைத்திருக்கின்றனர்.

இவர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுப்பதன் மூலமாகவே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டு மக்கள் மத்தியில் நிலைநாட்ட முடியும். என்பது எமது அவதானம் ஆகும்.

அரசியல்வாதி அல்லாத அதியுயர் தொழில்தகைமை உடைய நாம் இதனாலேயே வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக களத்தில் குதித்து உள்ளோம்.

நாம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுவதற்காகவே இராணுவத்தில் இணைந்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாட்டின் அனைத்து இடங்களிலும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் எம்மாலான சேவைகளை இதய சுத்தியுடன் வழங்கி இருக்கின்றோம்.

குறிப்பாக கடந்த கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்.மாவட்ட மக்களுக்கு வேண்டிய அவசியமான ஏராளமான மனித நேய வேலை திட்டங்களை நாம் இராணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து இராணுவத்தின் மூலமாக பற்றுறுதியுடன் செய்து கொடுத்து இருக்கின்றோம்.

நாட்டின் இராணுவ தளபதியாக நாம் பதவியேற்ற பிற்பாடும் எமது வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் கணிசமான மனித நேய வேலை திட்டங்கள் இராணுவம் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை யாவரும் அறிவார்கள்.

தமிழர், முஸ்லிம், சிங்களவர் போன்ற இன பேதங்கள் எங்களுக்கு இடையில் தேவையே இல்லை, எமது நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம், இளையோர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைமை வரவே கூடாது.

நாம் எல்லோரும் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதே எமது கனவாகும். எமது மூதாதையர்கள் அவ்விதம் வாழ்ந்து காட்டி இருக்கின்றார்கள். அவ்வாறான பொற்காலம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் இரும்பு பிடியில் இருந்து எமது நாடு மீட்கப்பட வேண்டியது அத்தியாவசியம் ஆகும்.

அதே நேரத்தில் அரசியவாதிகள் தேர்தல் காலத்தில் உங்கள் முன்னிலைக்கு வந்து கூறுகின்ற கருத்துக்களை எல்லாம் பார்க்கின்றபோது சாத்தான்கள் வேதம் ஓதுவது போல் இருக்கின்றது.

அரசியவாதிகள் போல் அல்லாது நாம் சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம் என்பதையும் இத்தருணத்தில் உங்கள் முன்னிலைக்கு தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.