October 06, 2019

"சஜித் பிரேமதாசவின்,, காதல் கதை இது"

தற்போது இலங்கையில் அதிகமாக பேசப்படுவது, நாட்டின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தலும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துமே.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாச அவரது மனைவி ஜலனி பிரேமதாசவிடம் தனது காதலை தெரியப்படுத்தியது தொடர்பில் ஜலனி பிரேமதாச முன்னொரு சமயம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

ஜலனி பிரேமதாச தனது ஆரம்ப கல்வியை இலங்கையில் பிஷப் கல்லூரியிலும் உயர்கல்வியை இங்கிலாந்திலும், பட்டப்படிப்பை அவுஸ்திரேலியாவிலும் மேற்கொண்டுள்ளார்.

கணக்கியல்துறை சார்ந்து அவரது கல்வித்தகைமை அமைந்திருந்தாலும் அழகுக்கலை மீது அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டதால் அத்துறையிலேயே பயணிக்க ஆரம்பித்தார்.

ஜலனியின் பெற்றோர் வர்த்தகப் பின்னணியைக் கொண்டவர்கள். கண்டியை பூர்வீகமாகக்கொண்ட ஜலனியின் தாயார் ஹேமானி விஜேவர்தன, ஐக்கிய தேசியக்கட்சிக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கி வந்துள்ளதுடன், அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில், 1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னரே அவரது மகன் சஜித் பிரேமதாச செயற்பாட்டு அரசியலில் இறங்கியுள்ளார்.

ஜலனியின் தாயார் ஐ.தே.கவின் செயற்பாட்டாளர் என்பதால் ரணசிங்க பிரேமதாசவின் இல்லத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தவறாது கலந்துகொள்வார்.

இவ்வாறு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஜலனியுடன் காரில் பயணித்துள்ளார்.

தனது நண்பரொருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இருப்பதால் அங்கு செல்லவேண்டும் என்பதற்காக காரில் இருந்து சஜித்தின் வீட்டில் இறங்க ஜலனி மறுத்துள்ளார்.

“சரி 10 நிமிடங்கள் இருந்துவிட்டு செல்” என தாயார் கூற, அன்பு கட்டளையை ஏற்று காரிலிருந்து இறங்கினார்.

அன்றுதான் அவர் சஜித்தை முதல் தடவையாக சந்தித்துள்ளார். தான் சந்திக்கும் நபர் பிரமேதாசவின் மகன் என்பது அவருக்கு தெரியாதாம். பின்னர் அறிந்துகொண்டார்.

முதல் சந்திப்பிலேயே இருவரும் பலதும் பத்தும் பேச 10 நிமிடங்கள்கூட இருக்கமறுத்த ஜலனிக்கு, சுமார் இரண்டரை மணிநேரம் அங்கேயே முகாமிட வேண்டியேற்பட்டது.

அந்த சந்திப்பையடுத்து சஜித்தின் மனதில் காதல் மலர, ஜலனியின் வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி, எப்படியோ அவரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். இருவருக்குமிடையில் உரையாடல் தொடர்ந்தது.

காலப்போக்கில் ஜலனியை திருமணம் முடிக்க அனுமதி வேண்டும் என அவரின் தாயாரிடம் சஜித் கோரியுள்ளார். மகளுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இருவரும் சுமார் 3 மாதங்கள் வரை நண்பர்களாகவே பழகியுள்ளனர். ஒருநாள் திடீரென ஜலனிக்கு அழைப்பையேற்படுத்தி இன்று மாலை நிகழ்வொன்றுக்கு செல்வோம் என சஜித் கூறியுள்ளார்.

நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு சென்றதும் – சிறிது நேரத்தின் பின் திடீரென மின்விளக்குகள் எல்லாம் அணைந்தன. என்னைசூழ ஏதோ நடக்கின்றது என்பதை உணர்ந்தேன். எனக்கு முன்னால் பாரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

“ஐயோ சஜித் இன்று எனது பிறந்தநாள் இல்லை, ஏன் இப்படி” என ஜலனி கேட்டுள்ளார். முதலில் கேக்கை பாருங்கள் என சஜித்கூற, ஜலனியின் விழிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

கேக்கிற்கு நடுவில் மோதிர பெட்டி இருந்துள்ளது. அதனை எடுத்து அணிவித்தே தனது காதலை வெளிப்படுத்தினாராம் சஜித். பதிலுக்கு புன்னகைத்து விட்டு சம்மதம் தெரிவித்துள்ளார் ஜலனி பிரேமதாச.

0 கருத்துரைகள்:

Post a comment