Header Ads



"மகிந்தவின் முதல் காதல் அப்படியே உள்ளது" - பசில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போதிலும் அவரது முதல் காதல் சுதந்திரக் கட்சியின் மீதே இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் நேற்றையதினம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் இல்லையேல் இரு தரப்புக்களும் இணைந்திருக்காது.

குறிப்பாக இருவரும் இரு தரப்புகளும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். யாருடனும் இணைந்து செயற்பட விரும்பாத நான் மக்களின் நலனுக்காகவே ஒன்றிணைந்து செயற்படுகின்றேன்.

மக்களைவிட வேறு எதுவும் எங்களுக்குப் பெரியதல்ல. நாங்கள் எப்போதும் மக்களை ஆதரிக்கும் தரப்பினராகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனியாக உருவாக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் இன்று சக்திமிக்க கட்சியாகவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றிருந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் இரு தரப்பினரும் இணைந்தே செயற்பட வேண்டும் என மக்களே கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போதிலும் அவரது முதல் காதல் சுதந்திரக் கட்சியின் மீதே இருக்கின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரே எனக்கு வாக்களித்தனர். ஆகவே இவர்களை ஒருபோதும் மறந்து விட வேண்டாம் என மகிந்த ராஜபக்ச எந்நேரமும் என்னிடம் கூறுவார்.

நான் எப்போதும், பொதுஜன பெரமுனவில் அதிக காதல் வைத்திருந்தாலும் எங்கள் தலைவரின் காதல் சுதந்திரக் கட்சியின் மீதே இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.