Header Ads



விசர் நாய்களை போல் நடந்து கொள்கின்றனர் - மகிந்த குற்றச்சாட்டு

ஜனநாயக ரீதியில் நாட்டை பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தை கோரும் நபர்கள் விசர் நாய்களை போல் நடந்துக்கொள்வார்கள் என்றால், அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியுமா என்பது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாய்களுக்கு போன்று நாட்டை பாதுகாக்கும் நபருக்கு விசர் பிடித்தால், விசர் பிடித்த நாய் போல் நடந்துக்கொள்வார் எனவும் அவர்களின் சகாக்கள் தற்போது விசர் நாய்களை போல் நடந்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்கள் இருக்கின்றனர். குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களை கொண்டு நடத்தும் விசாரணை தொடர்பான அறிக்கை பக்கசார்பானதாக இருக்கும்.

கோத்தபாய ராஜபக்ச பிரபலமாகி வெற்றியை நெருங்கும் போது, எதிரணியினர் பல்வேறு குற்றங்களை சுமத்தி, நீதிமன்றத்தின் ஊடாக அவரது பயணத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர். கோத்தபாயவுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அவர் ஆரம்பம் முதலே அவதானித்து வந்தார்.

மக்கள் பொய்ப் பிரசாரங்களில் ஏமாறக் கூடாது. இன்னும் காலம் செல்லும் போது மேலும் பல பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வார்கள். வேட்பாளர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர் ஒருவரை தாக்குகின்றனர். இதனை நாங்கள் ஊடகங்களில் பார்த்தோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்கு சென்று மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.

மகிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி மாநகர முன்னாள் மேயர் மகேந்திர ரத்வத்தே உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.